மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்தியன் என்ஜினீயரிங் சர்வீஸஸ் தேர்வு எழுத என்ஜினீயரிங் பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளைப் போல மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முக்கியத் தேர்வு ஐ.இ.எஸ். எனப்படும் இந்தியன் என்ஜினீயரிங் சர்வீஸ் தேர்வு.இந்தத் தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும். இந்திய ரயில்வே, மத்திய என்ஜினீயரிங் சர்வீஸ், சென்ட்ரல் வாட்டர் என்ஜினீயரிங் சர்வீஸ், இந்திய ராணுவம், சென்ட்ரல் எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் சர்வீஸ், சென்ட்ரல் பவர் என்ஜினீயரிங் சர்வீஸ், இந்தியன் சப்ளை சர்வீஸ்... இப்படி பல்வேறு துறைகளில் குரூப் ஏ மற்றும் பி சேவைப் பணிகளுக்கு என்ஜினீயரிங் பட்டதாரிகளைத் தேர்வு செய்வதற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. சிவில் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இந்தப் போட்டித் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் பொறியியல் குறைந்தபட்சம் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது முதுநிலைப் பட்டப் படிப்பில் எம்.எஸ்.சி., பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது வயர்லெஸ் கம்யூனிக்கேஷன், எலெக்ட்ரானிக்ஸ், ரேடியோ பிசிக்ஸ், ரேடியோ என்ஜினீயரிங் போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். என்ஜினீயரிங் பட்டப் படிப்புகளில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.
மாணவர்களின் வயது வரம்பு 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் விதிவிலக்கு உண்டு. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உண்டு. உடல் ஊனமுற்றோர், பார்வைத்திறன் செவித்திறன் அற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வயது வரம்பில் 10 ஆண்டுகள் சலுகை உண்டு. அரசுத் துறையில் பணிபுரிந்துகொண்டே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை உண்டு.
ஐ.இ.எஸ். தேர்வைப் பொருத்தவரை இரண்டு வகையான தேர்வுகள் நடைபெறும். ஒன்று, எழுத்துத் தேர்வு, மற்றொன்று பர்சனாலிட்டி டெஸ்ட். எழுத்துத் தேர்வுக்கு மட்டும் மொத்தம் 1,000 மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன.
சிவில் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் என்று துறைவாரியாக கேள்வித்தாள்கள் இருக்கும். எழுத்துத் தேர்வை பொருத்தவரை இரண்டு வகையான தேர்வு முறைகளை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். முதல் வகை தேர்வுமுறையில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள் முற்றிலும் அப்ஜெக்ட்டிவ் முறையில் இருக்கும். இதில் மூன்று கேள்வித்தாள்கள் இருக்கும். ஒவ்வொரு கேள்வித்தாளுக்கும் தேர்வு நேரம் தலா இரண்டு மணி நேரம். இதில் ஒன்று, ஜெனரல் எபிலிட்டி கேள்வித்தாளாகவும் மற்ற இரண்டு கேள்வித்தாள்களில் துறை சார்ந்த கேள்விகளும் கேட்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கேள்வித்தாளுக்கும் தலா 200 மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன. தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.
இரண்டாம் வகையான தேர்வு முறையில் விடைகளை மாணவர்கள் கட்டுரை வடிவில் (கன்வென்ஷனல் டைப்) எழுத வேண்டியதிருக்கும். இந்தத் தேர்வில் இரண்டு கேள்வித்தாள்கள் இருக்கும். ஒவ்வொரு கேள்வித்தாளுக்கும் தேர்வு நேரம் தலா மூன்று மணிநேரம். ஒவ்வொரு கேள்வித்தாளுக்கும் தலா 200 மதிப்பெண்கள்.இந்த இரண்டு கேள்வித்தாளில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும், மாணவர்கள் தேர்வு செய்யும் துறைவாரியான கேள்விகளாகத்தான் இருக்கும் என்பதை மாணவர்கள் மறந்துவிடக்கூடாது. ஐ.இ.எஸ். தேர்வு தேசிய அளவிலான தேர்வு என்பதால், விடைகளை கண்டிப்பாக ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும்.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் பெர்சனாலிட்டி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். பெர்சனாலிட்டி தேர்வு என்பதும் நேர்முகத்தேர்வு போலத்தான். இத்தேர்வுக்கு 200 மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன. துறை வாரியான அறிவு, பொது அறிவு, உடற்தகுதி, சமூகப்பார்வை, தலைமைதாங்கும் பண்பு, மூளை மற்றும் உடற்திறன், எதையும் புதுமையாக யோசித்தல் இப்படி பல்வேறு கட்ட தேர்வுகளுக்குப் பிறகு என்ஜினீயரிங் பணிகளுக்கு தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்களை அனுப்பும்போது, பிறப்புச் சான்றிதழ், கல்வித்தகுதிச் சான்றிதழ், வயது வரம்பில் சலுகை கோரியிருப்பின் அதற்கான சான்றிதழ், தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு பெறும் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், அதற்கான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டியது அவசியம்.
விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்பலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத விண்ணப்பதாரர்கள் தலைமை தபால் நிலையங்களில் கிடைக்கும் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பப் படிவத்திற்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, ரூ. 50 தேர்வுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தை மாணவர்கள், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் டெபிட் கார்டு, விசா மற்றும் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம். தபால் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணமாக ரூ. 100 வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தை ரூ.100க்கான போஸ்டல் ஃபீஸ் ஸ்டாம்ப் ஒட்டி அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வு மூன்று நாட்கள் நடைபெறும். எழுத்துத் தேர்வு ஜூன் 15 ஆம் தேதி தொடங்கும்.
தபால் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 26.
விவரங்களுக்கு: www.upsc.gov.in
THANKS: PUTHIYATHALAIMURAI
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக