சனி, 19 மே, 2012

புதுக்கோட்டை இடைத்தேர்தலில்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை இடைத்தேர்தலில், தே.மு.தி.க., சார்பில், முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், நகரப் பகுதியில் உள்ள அந்த சமுதாய ஓட்டுகளை அதிகம் பெற, அ.தி.மு.க., பகீரத முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. புதுக்கோட்டை தொகுதிக்கு, வரும் ஜூன் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலை, தி.மு.க.,- ம.தி.மு.க.,- இ.கம்யூ.,- பா.ஜ.,- பா.ம.க.,- வி.சி., ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளன.
இந்நிலையில், அ.தி.மு.க., சார்பில் கார்த்திக் தொண்டைமான், தே.மு.தி.க., சார்பில் ஜாகிர் உசேன், ஐ.ஜே.கே., சார்பில் சீனிவாசன் ஆகியோர் மட்டும் வேட்பாளர்களாக இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். புதுக்கோட்டை தொகுதியைப் பொறுத்தவரை, கள்ளர் மற்றும் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். தொகுதியில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் சமுதாயத்தவர் உள்ளனர். இதில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், புதுக்கோட்டை நகரப் பகுதியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கை எட்ட... : இந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க., ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று, இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கை எட்ட வேண்டும் என்றால், அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் பெரும்பான்மை ஓட்டுகளையும், அ.தி.மு.க., வேட்பாளர் பெற வேண்டும்.
குறிப்பாக, நகரப் பகுதியில் உள்ள முஸ்லிம் சமுதாயத்தவரின் ஓட்டுகளை அப்படியே பெற்றால் தான், இலக்கை அடைய முடியும் என்று, அ.தி.மு.க., தரப்பில் நம்புகின்றனர்.

அதிர்ச்சி : தவிர, தே.மு.தி.க., சார்பில், முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளதால், அந்த மக்களின் ஓட்டுகள், தே.மு.தி.க., பக்கம் சாய வாய்ப்புள்ளது. ஆகையால் தான், முஸ்லிம் சமுதாயத்தவரின் ஓட்டுகளை அப்படியே பெற, அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறார். சில நாட்களாக, நகரில் உள்ள அனைத்து முஸ்லிம் சமுதாய முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். அதேபோல், நகரில் உள்ள அனைத்து மசூதிகளுக்கும் சென்று, அம்மக்களின் ஆதரவை திரட்டினார். முஸ்லிம் சமுதாயத்தவரின் ஓட்டுகளை, அ.தி.மு.க., வேட்பாளர் பெருவாரியாக பெற முயற்சித்து வருவது, தே.மு.தி.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக