சனி, 19 மே, 2012

முத்தரையர்களுக்கு முக்கிய பதவிகள் இல்லை : புதுகையில் ஒட்டப்பட்ட நோட்டீசால் பரபரப்பு - நன்றி : தினமலர்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர்களுக்கு முக்கிய பொறுப்புகள் ஏதும் இல்லை என்பதை, முதல்வர் ஜெயலலிதாவுக்கும், பிரசாரத்துக்கு வரும் அமைச்சர்களுக்கும் தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி, புதுக்கோட்டை ஆகிய இரு மாவட்டங்களில், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், எம்.ஜி.ஆர்., காலம்தொட்டே, அ.தி.மு.க., ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர்.

முதல்வருக்கு தெரிவிக்க...: திருச்சியைப் பொறுத்தவரை தற்போது, எம்.எல்.ஏ.,க்களாக பரஞ்ஜோதி, சிவபதி, பூனாட்சி ஆகிய மூன்று பேர் உள்ளனர். இவர்களில், சிவபதி அமைச்சராக உள்ளார். ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த கு.ப.கிருஷ்ணன் மட்டும், ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். மற்றபடி புதுக்கோட்டை, அ.தி.மு.க.,விலோ, உள்ளாட்சி அமைப்புகளிலோ முக்கிய பதவிகளில் முத்தரையர்கள் இல்லை. இதை முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கும் வகையில், புதுக்கோட்டை நகர் முழுவதும், "புதுக்கோட்டை மாவட்ட முத்தரையர் சங்கம்' என்ற பெயரில், நோட்டீஸ் அச்சிட்டு ஒட்டப்பட்டுள்ளது.

முக்கியத்துவம் இல்லை : அந்த நோட்டீசில், "எம்.ஜி.ஆர்., காலம் முதலே முத்தரையர்கள், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து வருகின்றனர். அப்படி ஓட்டளிக்கும் முத்தரையர்களுக்கு, கட்சி பதவிகளில் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. இந்த நிலையில் தான், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர் என்பதை முதல்வரும், அவரின் தளபதிகளும் (அமைச்சர்கள்) தெரிந்து கொள்ள வேண்டும்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அடுத்த மாதம் நடக்கவுள்ள புதுக்கோட்டை இடைத்தேர்தலில், கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த கார்த்திக் தொண்டைமான் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

சந்தேகம் : மாவட்டத்தில் மொத்தமுள்ள ஆறு சட்டசபை தொகுதியில், மூன்றில் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். அதே சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, இடைத்தேர்தல் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை, அ.தி.மு.க., தலைமைக்கும், பிரசாரத்துக்கு வரும் அமைச்சர்களுக்கும் தெரிவிக்கும் வகையிலே, இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாகத் தெரிகிறது. ஆகையால், வரும் புதுக்கோட்டை இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானுக்கு, முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் முழுமையான ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகம், கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பங்கேற்கவில்லை : தவிர, கு.ப.கிருஷ்ணனுக்கு முக்கிய பதவிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நோட்டீசை ஒட்டியிருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அதேபோல், புதுக்கோட்டை நகர செயலராக இருக்கும் பாஸ்கர், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் கட்சியில் சீனியராக இருந்தும், பெரிதாக எந்த பதவியும் கிடைக்கவில்லை என்பதால், அவருடைய ஆதரவாளர்கள் யாராவது போஸ்டர் அடித்து ஒட்டியிருப்பார்களா? என்ற கோணத்திலும், உளவுத்துறை போலீசார் விசாரிக்கின்றனர். புதுக்கோட்டை இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில், பாஸ்கர் பெரிதாக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக