சனி, 11 ஆகஸ்ட், 2012

முத்தரையர் சங்கத் தலைவர் மகன் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி, ஆக. 10 : திருச்சியில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் முத்தரையர் சங்கத் தலைவரின் மகன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

திருச்சி, வரகனேரி, வடக்கு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆர். விஸ்வநாதன். தமிழ்நாடு முத்தரையர் சங்கத் தலைவர். இவரது மகன் ராம்பிரபு (36).

இவர் மீது 23.4.2012 அன்று மருத்துவர் ஒருவரது மனைவியை மிரட்டி, அவரது கார் ஓட்டுநரைத் தாக்கியது தொடர்பான வழக்கு எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 23.5.2012 அன்று திருச்சியில் நடைபெற்ற பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா ஊர்வலத்தில் கலவரத்தை ஏற்படுத்தி காவல் ஆய்வாளரைத் தாக்கியது, அதே நாளில் ஒத்தக்கடை பகுதியில் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியது, பேருந்து கண்ணாடிகளை உடைத்தது என கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 12.3.2012-ல் பெரிய கொத்தமங்கலத்தைச் சேர்ந்த வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத் தலைவர் செல்வக்குமாரை மிரட்டி, அவரது வீட்டை சூறையாடியது தொடர்பான வழக்கு எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீஸார் அண்மையில் ராம்பிரபுவை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ராம்பிரபுவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.


செய்தி எடுக்கப்பட்டது தினமணியில் இருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக