வெள்ளி, 8 மார்ச், 2013

மன்னார்குடி அருகே பஸ் மரத்தில் மோதி மாணவர்கள் உள்பட 16 பேர் காயம்: பொதுமக்கள் சாலை மறியல்


மன்னார்குடி, மார்ச்.8-
மன்னார்குடி வழியாக தென்பரை வழியாக புதுக்குடிக்கு தினமும் அரசு பஸ் சென்று வருகிறது. இன்று காலை 7.30 மணிக்கு பஸ் புதுக்குடி சென்று விட்டு, தென்பரை பையங்கான்நாடு பிடாரி கோவில் அருகே வந்து கொண்டு இருந்தது.
பஸ்சை டிரைவர் கணேசன் ஓட்டினார். அப்போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் படுவேகமாக மோதி நின்றது.
பஸ்சில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் குமரன்(18), குணபாலன்(19), தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் அமுதா(22), வீரமணி(45), மல்லிகா(42), சுப்பிர மணியன்(50), ஞானசுந்தரி (40), அஜீத்(12)  உட்பட 16 பேர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்த கோட்டூர் ஒன்றிய சேர்மன் வி.ஜீவானந்தம், ஒன்றியக்குழு உறுப்பினர் சரண்யாபரந்தாமன், பாலையக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜமன்னார், தென்பரை ஊராட்சி மன்ற தலைவர் தேவகிஆவனி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.இந்த விபத்தில் 6-ம் வகுப்பு படிக்கும் அஜீத் என்ற மாணவன் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
துளசேந்திரப்புறத்தில் இருந்து ராதாநரசிம்மபுரம் வரை சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே சாலையை உடனே செப்பனிட வேண்டும் என வலியுறுத்தி மன்னார்குடி தலைமை அரசு மருத்துவமனை எதிர்புறம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பாண்டியன், இளைஞர் பெருமன்ற ஒன்றிய தலைவர் பரந்தாமன், முத்தரையர் சங்க மாவட்ட தலைவர் நடராஜன், தி.மு.க. சேர்ந்த ஆவணி, ராஜமாணிக்கம், காமராஜ் உட்பட 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் சாலை மறியல் செய்தனர்.
இன்று காலையில் ஏற்பட்ட இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

News From : MALAIMALAR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக