மதுரை, மே 2-
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி.குன்னத்தூர் கிராமம் “சமூக ஒற்றுமைக்கான” சிறந்த கிராமமாக தேர்வு செய்யப்பட்டு, இக்கிராமத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா ரூ.10 லட்சம் பரிசு வழங்கி உள்ளார்.
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ளது டி.குன்னத்தூர் கிராமம். 17 சாதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். 17 வெவ்வேறு பிரிவுகளை கொண்ட மக்கள் உள்ள இந்த ஊரில் எந்தவித ஏற்றத் தாழ்வுகளும் இல்லை. சமூக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
சாதி சண்டை, மத சண்டைகளுக்கு இந்த கிராமத்தில் இடமில்லை அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல உறவு இருந்து வருகிறது. முக்கியமாக இந்த ஊரில் 'இரட்டை டம்ளர்' முறை கிடையாது. தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், மற்ற பிரிவு மக்களிடேயும் எந்த ஏற்றத்தாழ்வுகளும் இந்த கிராமத்தில் இல்லை. அதே நேரத்தில் 5 கலப்பு திருமணங்களும் இந்த கிராமத்தில் நடந்துள்ளது.
இந்த கிராமத்தை சேர்ந்த அழகர்சாமி கூறுகையில், எங்கள் கிராமத்தில் எந்தவித வேறுபாடும் ஏற்றத்தாழ்வும் இல்லை. தலித்துக்கள் நடத்தும் கடைகளுக்கு சென்று மற்ற சாதியினர் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். டீக்கடைகளில் அனைவரும் ஒன்றாகவே அமர்ந்து டீ அருந்துகிறோம். அனைவரும் “மாமா” “மாப்பிளே” என்றே பழகி வருகிறோம் என்றார்.
இந்த கிராமத்தில் வடக்குவாசல் செல்வி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் பொங்கல் திருவிழா அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்று வருகிறார்கள். கோவில் திருவிழாவுக்காக அனைவரும் சமமாக பங்களிப்பு செய்து விழா கொண்டாடி வருகிறோம் என்கிறார்.
பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பழனி யாண்டி. முத்தரையர், செட்டியார் மற்றும் நாயக்கர் சமூகத்தினர் அதிக அளவில் வசித்தாலும் மற்ற சமூகத்தினரிடம் எந்த வித வேறுபாடுகளையும் காட்டுவதில்லை. என்னுடைய வாழ்நாளில் எந்த பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. அப்படியே ஏற்பட்டாலும் நாங்களே அதை பேசி தீர்த்து கொள்கிறோம். மற்றவர்களை தலையிட விடமாட்டோம் என்கிறார்.
60 வயது முதியவர் கோபி. பஞ்சாயத்து தலைவர் ஆர்.சங்கர் கூறுகையில், எங்கள் கிராமத்தில் சமூக இணக்கத்தோடு வாழ்வதற்காக பெருமிதம் கொள்கிறேன். இறந்தவர்களை எரிக்கும் இடமும், புதைக்கும் இடமும் அனைவருக்கும் ஒன்றே. சமூக ஒற்றுமைக்காக எங்கள் கிராமத்திற்கு ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசு கிடைத்து இருக்கிறது.
இந்த பணத்தை கொண்டு கிராமத்தில் கம்யூனிட்டி ஹால், குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் பாலம் கட்டவும் பஞ்சாயத்து பள்ளியை மேம்படுத்தவும் உள்ளோம் என்றார். டி.குன்னத்தூர் துவக்கப் பள்ளியில் காலை நேர வகுப்புகள் 'இந்து என்ன... கிருஸ்து என்ன... இதயம் ஒன்றுதான்..!' என்ற பாடலுடன் வகுப்புகள் தொடங்குகிறது. உண்மையிலே இந்த கிராம மக்கள் இதயம் ஒன்றுடன்தான் வசித்து வருகிறார்கள்.
NEWS FROM : MALAIMALAR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக