செவ்வாய், 23 ஜூலை, 2013

நச்சாந்துப்பட்டியில் நல்லதங்காள் கோயில் பொங்கல் வைக்கும் இடத்திற்கு பட்டா

புதுக்கோட்டை, : நச்சாந்துப்பட்டி நல்லதங்காள் கோயில் அருகில் பொங்கல் வைக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டி 150க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இதுகுறித்து நச்சாந்துபபட்டி புதூர், கீழ, மேலத்தெரு, குழிபிறைப்பட்டி, பனையப்பட்டி, கோவில்பட்டி, மருங்கூர், நல்லிப்பட்டி, மலையலிங்கபுரம கிராமங்களை சேர்ந்த முத்தரையர் சமுதாயத்தினர் கலெக்டர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

எங்களது முன்னோர் காலத்திலிருந்து இப்பகுதியில் உள்ள 5 கிராமத்தைச் சேர்ந்த முத்தரையர் சமூகத்தினர் நச்சாந்துப்பட்டியில் நல்லதங்காள் கோயில் அமைத்துள்ளோம். கோயிலுக்கு அருகில் உள்ள திடலில் பொங்கல் வைத்து ஆடிமாதம் நாக பஞ்சமி விழா நடத்துவதும் நடைமுறையில் வழக்கமாக இருந்து வருகிறது.

கோயில் அருகில் உள்ள திடலின் ஆக்கிரமிப்புகள் ஏற்படாவண்ணம் அடையாள கற்கள் ஊன்றப்பட்டிருந்தது. பொது வழிப்பாட்டிற்காக உள்ள இடமே தவிர எங்களது தனிப்பட்ட நபருக்காக அடையாள கல்லை நாங்கள் ஊன்றவில்லை. மேலும் இந்த கல் ஊன்றியதால் பொதுமக்களுக்கோ அல்லது வேறு சமூகத்தினருக்கோ எவ்வித பாதிப்பும் கிடையாது. 
வருவாய்த்துறை ஆவணங்களில் கோயில் இடத்தை நல்லதங்காள் கோயில் மற்றும் பொங்கல் திடல் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே மாவட்ட நிர்வாகம் கோயில் மற்றும் பொங்கல் திடல் பயன்பாட்டில் உள்ள பகுதி க்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.


News From : DINAKARAN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக