செவ்வாய், 30 ஜூலை, 2013

மது விலக்கு...!!


மது விலக்கு...!!

தமிழ் ஈழம், கூடங்குளம், தர்மபுரி இளவரசன், பாலசந்திரன், முல்லை பெரியார், காவேரி நீர், டெல்டா மாவட்ட மீத்தேன் திட்டம் என்று வார வாரம் "மீடியா பரபரப்புக்காக" நடத்தப்படும் பல்வேறு போராட்டங்கள் போன்று தான் இந்த "பூரண மதுவிலக்கு" போராட்டமும், மீடியா இந்த விசயத்தை பரபரப்பாக்க அதையே சமூக வலைத்தளங்களும் இன்னும் அதிகப்பட்சம் ஒரு வார காலத்திற்க்கு இதையே விவாதிக்க போகிறது. பின்னர் ரஜினியின் அடுத்த படம் பற்றியோ, ஹன்சிகா - சிம்புவின் காதல் பற்றியோ பிரச்சனையின் (மீடியாவின்) பார்வை திரும்பும், இந்த போராட்டத்தை அம்போ என்று விட்டுவிட்டு எல்லோரும் அந்த பிரச்சனையில் தீவிரமான விவாதிக்க கிளம்பிவிடுவார்கள் ஆட்டுமந்தைகளைப் போல ஒருவர் சொல்லும் கருத்தை வழிமொழிவது தமிழர்களின் சுபாவமான மாறி விட்டது, ஒரு பிரச்சனைக்காக போராடும் போது அந்த பிரச்சனையின் ஆழம் என்ன ? அதற்க்கான மாற்று வழிகள் என்ன ? இந்த பிரச்சனைகள் தீர வேண்டிய அவசியம் என்ன ? என்பதையெல்லாம் மீடியாக்களை தீர்மானிக்க விட்டுவிட்டு தெளிவில்லாத போராட்டங்களை நடத்துவது தமிழர்களின் வழக்கம் ஆகி விட்டது.   

என்ன பிரச்சனை ?

அரசாங்கம் மதுகடை நடத்துவது பிரச்சனையா ?
தமிழர்கள் குடிப்பது பிரச்சனையா ?

அரசாங்கம் மது விற்பனை தொடங்கிய போது, ஆண்டு விற்பனை 3000 ம் கோடி, இன்று ஆண்டுக்கு 27 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடக்கிறது, சரி அரசாங்கம் மதுக்கடையை மூடுவதாக வைத்துக் கொள்வோம், இப்போது 27 ஆயிரம் கோடி ரூபாய்க்கு குடித்துக் கொண்டிருப்பவர்கள் என்ன செய்வார்கள் ? மதுகடை மூடப்பட்ட உடன் அவர்கள் குடியை நிறுத்தி விடுவார்களா ? மாற்றாக கள்ளச்சாரயத்தை நோக்கி போவார்களா ? குடியை நிறுத்த வேண்டும் என்பது நோக்கமா ? அல்லது இப்போது அரசு கஜானாவிற்க்கு வரும் பணம் "கள்ளசாராய வியாபாரிகளுக்கு" போக வேண்டும் என்பது இந்த போராட்டத்தின் நோக்கமா ? சமூகத்தின் தீவிர பிரச்சனைகள் கூட இங்கு ஒரு வார "மீடியா பரபரப்பு" மட்டுமே, குடிக்காமல் தமிழர்களை பார்த்துக் கொள்வதற்க்கு என்ன மாற்று திட்டம் இந்த போராட்டக்காரர்களிடம் உள்ளது ?

"சுதந்திரத்திற்க்கு முன்பாக கள்ளுக்கடை மறியல் நடந்த போது "தந்தை பெரியார் (!?)" தனக்கு சொந்தமான 1000 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்" இது நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது எதோ ஒரு பாடத்தில் படித்த வாசகம், எவ்வளவு பெரிய முட்டாள்தனம், அவரைதான் "பகுத்தறிவு பகலவன்" என்று இன்றும் தமிழன் கொண்டாடி கொண்டு இருக்கிறான், தென்னை மரங்கள் வெட்டப்பட்டதால் குடியை நிறுத்த முடிந்ததா ? குடிப்பதற்க்கான காரணம் என்ன? அதை களைய என்ன செய்ய வேண்டும் ? என்ற சிந்தனைக் கூட இல்லாமல் "காந்தி சொன்னார், மரத்தை வெட்டினேன்" என்ற முட்டாள்தனத்தின் மறுபதிப்புதான் இன்றைய "பூரண மது விலக்கு" போராட்டம், பிரச்சனையை களைவதை விட்டுவிட்டு "பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும்" என்பது தான் இந்த போராட்டத்தின் மையகருத்து.

27 ஆயிரம் கோடிக்கு எப்படி 8குடிக்கிறார்கள் ? எளிதாக கிடைக்கிறது அதனால் குடிக்கிறார்கள் என்றால் எளிதாக "விசம்" கூடத்தான் கிடைக்கிறது குடிப்பார்களா ? ஏன் ஆண்டிற்க்கு மூவாயிரம் கோடி விற்பனை ஆன போது எளிதாக கிடைக்கவில்லையா ? காரணம் வேறு எதுவோ அதை களைவதற்க்கான முயற்சியை யாரும் செய்வது இல்லை, யாரோ ஒருவர் போராட வந்துவிட்டார் ஒரு வாரம் அது குறித்த சர்ச்சை பின்னர் வழக்கம் போல தம் தமது வேலை என்பது இன்றைய தமிழனின் நிலை.

ஆண்டிற்க்கு 27 ஆயிரம் கோடி மதுவினால் அரசாங்கத்திற்க்கு கிடைக்கும் வருமானத்தில் எனது பங்கு “வெறும் பூஜ்யம்”, இதே நிலை இங்கு மதுவிற்க்கு எதிராக பேசும் எல்லோராலும் சொல்ல முடியுமா ? இங்கே ஆடம்பரத்திற்க்காக, கெளரவத்திற்க்காக, சமூக அந்தஸ்துக்காக, நட்புக்காக குடிப்பவர்கள் எத்தனை பேர் ? எளிதாக கிடைக்கிறது என்பதை தாண்டி சமூகத்தில் வேறு எங்கோ, எதோ பிரச்சனை இருக்கிறது அது என்ன ? அது மனஉளைச்சல், குடும்ப பிரச்சனை, சமூக ஏற்றத்தாழ்வு, நிலையான வருமானம் இன்மை என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அவற்றை களைய அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று அரசாங்கத்திற்க்கு யோசனை சொன்னவர்கள் எத்தனை பேர் ? இன்னும் வேறு எதுவல்லாம் இதற்க்கு காரணம் என்று ஆய்வு செய்தவர்கள் எத்தனை பேர் ?

மக்களுக்காக மக்களால் (!?) நடத்தப்படும் ஒரு அரசாங்கம் பொருப்பே இல்லாமல் மதுகடை நடத்தி வருமானம் சம்பாதிப்பது ஏற்புடையதா  ? என்றால் இதனை "முட்டாள்கள்" கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதுதான் எனது பதில். மேலே நான் சொன்ன எல்லா காரணங்களையும் அரசாங்கமும் சொல்லலாம் இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க...!! அதுவல்ல நல்ல அரசாங்கத்திற்க்கு அழகு...!

27 ஆயிரம் கோடி வருமான இழப்பு என்பது ஒரு அரசாங்கத்திற்க்கு நிச்சயம் பாதிப்பினை ஏற்படுத்தும் இருந்தாலும் வருமான நோக்கத்திற்க்காக மட்டும் அரசாங்கம் இதனை தொடர்ந்து நடத்திட முற்படுமேயானால் பின்னர் அதனை மக்களுக்கான அரசாங்கம் என்பது சரியாக இருக்க முடியாது. மாற்று வருமான வழிகளை அரசாங்கம் தான் தேடிக் கொள்ள வேண்டும் அல்லது செலவுகளை (இலவசங்களை..!!!) குறைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த இடத்தில் ரமண மகரிஷி சொன்ன ஒரு கதையை சொல்லி முடிப்பது சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

“ வசதியான மனிதனின் வீட்டில் வளர்க்கப்பட்ட அந்த நாய்க்கு வேளா வேளைக்குக் கிடைத்த சாப்பாட்டில் திருப்தி இல்லை. அந்த வீட்டைவிட்டு வெளியேறி ரோட்டுக்கு வந்து, தனக்குப் பிடித்த உணைவைத் தேட ஆரம்பித்தது. நாள்கணக்கில் அலைந்து வாடியதுதான் மிச்சம். ரோட்டில் ஏற்கனவே திரிந்து கொண்டிருந்த நாய்களுடன் சண்டை போட்டுத் தெருவோர எச்சிலையைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை. கடைசியாக அதற்க்குக் காய்ந்துபோன மாட்டு எலும்புத் துண்டு ஒன்று கிடைத்தது. வெயிலில் பல மாதங்கள் காய்ந்த எலும்பு என்பதால், அதிலிருந்த அத்தனை சுவையும் வற்றிப்போய் கல் போல ஆகியிருந்தது. ஆனாலும் அது தெரியாத நாய், அந்த எலும்பைக் கஷ்டப்பட்டுக் கடித்தது. நாயின் வாயில் கீறல்கள் ஏற்பட்டு, ரத்தம் கசிந்தது தன் ரத்தத்தை ருசித்த நாயோ, ரத்தம் எலும்பிலிருந்துதான் வருகிறது என்று எண்ணி இன்னும் ஆவேசமாக எலும்பைக் கடிக்க ஆரம்பித்தது. இதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர், "மட நாயே ! அது காய்ந்துபோன எலும்பு, நீ சுவைக்கும் ரத்தம் எலும்பிலிருந்து வெளிப்படும் ரத்தம் இல்லை. உன் வாயிலிருந்தே கசியும் ரத்தம் !" என்று சொல்ல... வழிப்போக்கரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துவிட்டுச் சொன்னது.

"இத்தனை நாள் வரை - இந்த எலும்புத் துண்டைக் கடிக்கும்வரை - என் நாக்கு ரத்தம் சுவைத்ததில்லை ! இதைக் கடிக்க ஆரம்பித்த பிறகுதான் ரத்தத்தின் சுவை தெரிய ஆரம்பித்தது. ஆகவே, இந்த ரத்தம் எலும்புத் துண்டிலிருந்துதான் எனக்குக் கிடைக்கிறது. என்னை நீ ஏமாற்ற முடியாது !" என்று சொல்லி, காய்ந்த எலும்பை மேலும் ஆவேசமாக கடிக்க ஆரம்பித்தது. தன்னையே அழித்துக்கொண்டு, ஏமாற்றிக் கொண்டு கிடைக்கிற தற்காலிக சந்தோஷங்களைத் தேடி ஓடும் இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்கள், இதைத்தான் “DOG’S LOGIC”  என்று சொல்கிறோம் ! “

சிந்தித்துப் பாருங்கள்... காய்ந்துபோன எலும்பைக் கடித்த நாய் அடைந்த சந்தோஷத்துக்கும் சிகரெட், மது போன்ற பொருட்களால் தன்னையே அழித்துக்கொண்டு சிலர் அடையும் சந்தோஷத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ?

-    சஞ்சய்காந்தி அம்பலகாரர்,
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக