வியாழன், 24 அக்டோபர், 2013

சமூக ஜனநாயக கூட்டணி

லோக்சபா தேர்தலில், பா.ம.க., தலைமையில் உருவாகியுள்ள சமூக ஜனநாயக கூட்டணியின் சார்பில், இந்திய மக்கள் கழகம் கட்சி, 12 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. ஆரணி தொகுதி பா.ம.க., வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, அரக்கோணம் தொகுதி வேட்பாளர் வேலு ஆகியோர் இந்திய மக்கள் கழகத்தின் தலைவர் தேவநாதனை நேற்று நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சமூக ஜனநாயக கூட்டணி உதயமாகியுள்ளது. இந்த கூட்டணியில் இந்திய மக்கள் கழகம் கட்சி மற்றும் முக்குலத்தோர், யாதவர், உடையார், முத்தரையர், கவுண்டர், நாடார் உள்ளிட்ட, சமுதாய ரீதியான கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. பா.ம.க., சார்பில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று முன்தினம் சென்னையில் ராமதாஸ் வெளியிட்டார். ஆரணி வேட்பாளர், ஏ.கே.மூர்த்தி, அரக்கோணம் வேட்பாளர், வேலு ஆகியோர் நேற்று இந்திய மக்கள் கழகத்தின் தலைவர் தேவநாதனை சந்தித்து, வாழ்த்து பெற்றனர். ஆரணி, அரக்கோணம் ஆகிய தொகுதிகளில் யாதவர் சமூகத்தினரின் ஓட்டுக்கள் கணிசமாக இருப்பதால், யாதவர் சமுதாயத்தின் தலைவரும், இந்திய மக்கள் கழகத்தின் தலைவருமான தேவநாதனை, தேர்தல் பிரசாரத்திற்கு வரும்படி, மூர்த்தியும், வேலுவும் அழைப்பு விடுத்துள்ளனர். பிரசாரத்திற்கு வருவதாக தேவநாதன் உறுதி அளித்தார்.

சமூக ஜனநாயக கூட்டணி சார்பில், இந்திய மக்கள் கழகம், 12 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. கடந்த, 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், இந்திய மக்கள் கழகத்தின் கட்சி, 42 தொகுதிகளில் போட்டியிட்டு, சில தொகுதிகளில் மூன்றாவது இடத்தை கைப்பற்றியுள்ளது. லோக்சபா தேர்தலில் ஓட்டு வங்கியை பலப்படுத்தும் வகையில், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உட்பட, 18 லோக்சபா தொகுதிகளில் தேவநாதன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இது குறித்து தேவநாதன் கூறியதாவது: தி.மு.க., - அ.தி.மு.க., அணிகளுக்கு மாற்று அணியாக, சமூக ஜனநாயக கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது, எங்கள் கட்சி சார்பில், 12 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம். எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. தென் மாவட்டங்கள் மட்டுமல்லாமல், வடக்கு, கிழக்கு மாவட்டங்களிலும் யாதவர் சமுதாயத்திற்கு ஒரு லட்சம் ஓட்டுக்கள் உள்ளன. உள்ளாட்சி பிரதிநிதிகளாக யாதவர் சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர். யாதவர் சமுதாயத்தை சேர்ந்த, 106 ஊராட்சி தலைவர்கள் உள்ளனர். சமூக ஜனநாயக கூட்டணியில் சில முக்கிய கட்சிகள் இடம் பெற்று, பலமான கூட்டணியாக உருவாகும். இவ்வாறு, அவர் கூறினார்.

News Source : DINAMALAR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக