வியாழன், 20 மார்ச், 2014

தஞ்சை மக்களுக்கு திமுக, அதிமுகவின் துரோகங்கள்...!!

தஞ்சை மக்களுக்கு திமுக, அதிமுகவின் துரோகங்கள்...!!

    நேற்று தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் மீத்தேன் எரிவாயு திட்டத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று சொல்லி தன்கட்சி போடும் வேடத்தை மறைக்க முயல்கின்றார். 2011 ஆம் ஆண்டு அன்றைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசுக்கும், கிரேட் ஈஸ்டன் என்ற நிறுவனத்திற்க்கும் மீத்தேன் எடுப்பது தொடர்பான புரிந்துணர்வு கையெழுத்து போட்டதையும், திமுக தேர்தல் அறிக்கையில் மீத்தேன் திட்டத்தை எதிர்க்கிறோம் என்று சொன்னதையும் அமைச்சர் "இரட்டைவேடம்" என்கிறார்.
    நாம் அமைச்சர் வைத்திலிங்கத்திடம் கேட்க விரும்புவது இதுதான் 2011 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்திற்க்கு தமிழகஅரசு (அதிமுக அரசு) இடைகால தடை விதித்ததே.. ஏன் முழுமையாக இந்த திட்டத்தை தடை செய்யவில்லை..? தற்காலிகதடை விதிக்க முடிந்த உங்களால் ஏன் முழுமையான தடையை விதிக்க முடியவில்லை..? அதற்கு என்ன காரணம்..? நிரந்தர தடை விதிக்க உங்களுக்கு அதிகாரம் இருக்கும்பொழுது அதை செய்யாமல் இடைகால தடைவிதிப்பது என்ன வேடம் ? நூற்றுக்கணக்கான கோடியில் கட்டப்பட்ட தலைமை செயலகத்தை ஒரெ அறிவிப்பில் மருத்துவமனையாக மாற்ற முடிந்த உங்களால் இதை செய்யமட்டும் முடியாமல் போனது ஏன் ? மீத்தேன் வாயு எடுப்பது பற்றி உங்கள் கட்சியில் நிலைப்பாடு என்ன ? மாநில ஆட்சி பொறுப்புக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகியும் மக்கள் எதிர்ப்புள்ள ஒரு திட்டத்தை ரத்து செய்ய முடியாத நீங்கள் மத்திய ஆட்சில் அங்கம் வகித்து சாதிக்கப்போவதென்ன...? கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக அரசு தஞ்சாவூரில் செயல்படுத்திய திட்டங்கள் என்ன ? காவிரியாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பான என்ன திட்டங்கள் அதிமுகவிடம் உள்ளது ? உங்கள் கட்சியின் வேட்பாளர் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி பிரச்சனை குறித்து பொதுமேடையில் விவாதிக்க தயாரா..?
    அதிமுகவிடம் கேட்க மக்களுக்கு இத்தனை கேள்விகள் இருக்கும் அதே நேரத்தில் திமுகவிடமும், அந்த கட்சியின் "கோடிஸ்வர" வேட்பாளரும், ராஜபக்சேவின் நெருங்கிய தோழருமான திரு. டி.ஆர். பாலுவிடம் கேட்க எளிய கேள்விகள் சிலவும் இருக்கின்றது, தங்களுடைய அதிகாரபூர்வமான இணையதளத்தில் "மீத்தேன் திட்டம்" வந்தது தன்னுடைய சாதனைகளில் ஒன்று சொல்லி இருந்தீர்களே, ஏன் அந்த கருத்தை எடுத்துவிட்டீர்கள்..? தஞ்சாவூருக்கு இரயில்களை கொண்டு வந்ததாக சொல்லி வாக்கு கேட்கிறீர்களே... அந்த இரயில்கள் எதற்க்கு தஞ்சை மக்கள் பஞ்சம் பிழைக்க போக வசதியாக இருக்குமே என்பதற்க்காகவா..? கடந்த ஐந்து முறை உங்கள் கட்சியில் இருந்து நாடாளுமன்றம் சென்ற, இரண்டு முறை மத்திய இணை அமைச்சராகவும் இருந்தவர் இத்தனை ஆண்டுகளில் காவிரி பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தில் எத்தனைமுறை பேசி இருக்கிறார் ? மண்ணின் மைந்தன் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் எத்தனை முறை காவிரி பிரச்சனைக்காக பேசி இருக்கிறீர்கள் ? பொதுமேடையில் தஞ்சை தொகுதி பிரச்சனைகள் பற்றியும், அதற்க்கான தீர்வு பற்றியும் விவாதிக்க நீங்கள் தயாரா...?
    தஞ்சாவூர் தொகுதி மக்களே இதுவெல்லாம் எங்களுடைய கேள்விகள் மட்டுமல்ல, நீங்கள் இந்த கட்சிகளிடமும் வேட்பாளர்களிடமும் கேட்க வேண்டிய கேள்விகள், கேட்பீர்களா..? சாதி பார்த்து ஓட்டளிப்பதில் தவறில்லை கொஞ்சமேனும் சாதிக்கக் கூடியவர்களுக்கு ஓட்டளியுங்கள். தஞ்சை தொகுதி ஒன்றும் சொர்க்கலோகமல்ல.. ! இங்கு தீர்க்கப்படாத, இந்த கட்சிகள் தீர்க்க விரும்பாத ஆயிரம் பிரச்சனைகள் உண்டு, பிரச்சனைகளை தீர்க்க என்ன செய்யப்போகின்றீர்கள்..?

தஞ்சை மக்களின் விழிப்புணர்விற்க்காக...  

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக