புதன், 21 மே, 2014

நேரு ‘ஜில்லா’வில் செல்வராஜ் ‘வீரம்’! திருச்சி டமால் டுமீல்








தமிழகத்தில் பல இடங்களில் திடீர் மழையால் பூமி குளிர்ந்தாலும் திருச்சியில் சூட்டைக் கிளப்பியிருக்கிறது முன்னாள் அமைச்சர் செல்வராஜின் பிறந்தநாள் விழா. திருச்சி தி.மு.க.வின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் தற்போதைய மாவட்ட செயலாளர் கே.என்.நேருவுக்கு எதிராகவே செல்வராஜின் பிறந்தநாள் விழா பிரமாண்டப்படுத்தப்பட்டது. பிறந்தநாள் போஸ்டரில்கூட நேருவின் படம் இல்லை.

பிரமாண்ட வரவேற்பில்
ஒரு காலத்தில் திருச்சி தி.மு.க.வின் செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தவர் செல்வராஜ். அந்தக் கட்டத்தில் நேரு தனது சொந்த ஊரான லால்குடி வட்டத்தில் மட்டுமே அரசியல் செய்து வந்தார். நேருவுக்கு புள்ளம்பாடி சேர்மன் உள்பட பல்வேறு பொறுப்புகளை பெற்றுத் தந்தவர் செல்வராஜ்தான். இந்த நிலையில் கடந்த 1994-ல் தி.மு.க.வில் இருந்து ம.தி.மு.க பிரிந்தபோது வைகோவுடன் கைகோர்த்து பம்பரத்துக்கு சாட்டையாய் சுழன்றார் செல்வராஜ். ஏனோ வைகோவுடன் மனக்கசப்பு வர மீண்டும் தி.மு.க.வில் தன்னை ஐக்கியமாக்கிக்கொண்டார். செல்வராஜ் விலகிச் சென்ற இடைப்பட்டக் காலத்தை நேரு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு திருச்சியில் அரசியல் செய்ய ஆரம்பித்தார். அன்பில் தர்மலிங்கம் மறைவுக்குப் பிறகு தி.மு.க.வின் இரண்டாம்கட்ட பிரமுகர்களில் ஒருவராகவும் திருச்சி தி.மு.க.வின் அசைக்கமுடியாத சக்தியாகவும் தன்னை மாற்றிக்கொண்டார் நேரு.

அண்ணா சிலைக்கு மாலை…
மீண்டும் தி.மு.க.வில் வந்து சேர்ந்த செல்வராஜை கலைஞர் அரவணைக்க 2006-ல் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் சார்பில் மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வனத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். திருச்சி தி.மு.க.வில் நேருவுக்கும், செல்வராஜுக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. திருச்சியின் பெரும்பான்மை சமூகமான முத்திரையர் சமூகத்தைச் சேர்ந்த செல்வராஜ் அமைச்சராக வலம் வந்தாலும் நேரு தனது பாணியில் செல்வராஜின் வளர்ச்சியை தட்டிக்கொண்டே இருந்தார்.

இதனால் திருச்சி தி.மு.க.வில் செல்வராஜ் கோஷ்டி, நேரு கோஷ்டி என இருபெரும் கோஷ்டிப் பூசலால் தி.மு.க. அல்லல்பட்டது. இருவரையும் பலமுறை அழைத்து கலைஞர் பஞ்சாயத்து செய்து வைத்தும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. நேரு வளர்ச்சி உச்சத்தை தொட்டது. நேருவில் அரசியல் பாலிடிக்ஸுக்கு அவரது தம்பி மறைந்த ராமஜெயம் பக்கபலமாக இருக்க நேரு கை ஓங்கியது. இதனால் பெரும்பான்மை சமூகமான முத்தரையர் சமூகத்தை நேரு அடக்கி ஆண்டார். முத்தரையர் சமூகத்தை சேர்ந்த சிலருக்கு கட்சியில் தனக்கு கீழ் உள்ள பதவிகளை இவரே தலைமைக்கு ரெகமண்ட் செய்து முத்தரையர் சமூகத்திற்கும் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என செல்வராஜ் தலைமைக்கு கொடுத்த பெட்டீஷன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நேரு. நடந்து முடிந்த தி.மு.க.வின் 10&வது மாநாட்டிலும் சரி, நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி செல்வராஜ் கோஷ்டிகளுக்கு இங்கே இடமில்லை எனும் விதமாக முற்றிலும் ஓரங்கட்டப்பட்டிருந்தார் செல்வராஜ்.

செல்வராஜுக்கு பொன்னாடை போர்த்தும் திருச்சி சிவா
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி பெரம்பலூர் தொகுதிக்கு நேரு கை காண்பித்தவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். தனக்கு பெரம்பலூரிலாவது வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த செல்வராஜுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதோடு செல்வராஜை நாகை மண்டலத்துக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமித்து அவரை திருச்சியில் இருந்து அப்புறப்படுத்தியது தி.மு.க. தலைமை. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒருவேளை திருச்சி, பெரம்பலூரில் தி.மு.க. தோற்கும் என்றால் அதற்கு நேரு மட்டுமே காரணம் என்ற பேச்சு தற்போது தி.மு.க.வினர் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.

இப்படி நேருவால் ஓரங்கட்டப்பட்ட முத்தரையர் சமூகத்தினரும், செல்வராஜ் கோஷ்டியும் செல்வராஜின் 70&வது பிறந்த தினத்தை நேருவின் எதிர்ப்பு தினமாகவே கொண்டாடினார்கள். திருச்சி தி.மு.க.வின் இருதுருவங்களாக பேசப்பட்ட நேருவின் அலுவலகமும், செல்வராஜின் இல்லமும் 50 மீட்டர் இடைவெளியில் அடுத்தடுத்து இருக்கிறது. இதற்கு முன்பு தி.மு.க. அலுவலகம் தில்லைநகர் 5-வது குறுக்குத் தெருவில் இருந்தது. ராமஜெயம் மறைவுக்குப்பிறகு ராமஜெயம் பயன்படுத்தி வந்த விளையாட்டுத் திடலை ஒட்டிய கட்டிடம் தற்போது திருச்சி தி.மு.க.வின் கட்சி அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த இரு கட்டிடங்களைத் தாண்டித்தான் செல்வராஜின் வீடு இருக்கின்றது. இரு கோஷ்டிகளும் தற்போது அருகருகே ஒருவருக்கொருவர் முகத்தை பார்த்தும் பார்க்காதவாறு செல்லும் நிலையில்தான் திருச்சி தி.மு.க. நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த சூழலில் திருச்சி, பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிகளில் நிறுத்தப்பட்ட தி.மு.க. வேட்பாளர்களான அன்பழகனும், சீமானூர் பிரபுவும் வாக்கு வங்கியை பலப்படுத்தக்கூடிய பெரும்பான்மை முத்தரையர்கள் நட்பு கொண்டாடும் தி.மு.க.வின் திருச்சி மாவட்ட முன்னாள் செயலாளரான செல்வராஜை பெயரளவுக்குக்கூட சென்று பார்க்க நேரு விடவில்லை. இதேநிலைதான் தி.மு.க.வின் பேச்சாளர் திருச்சி சிவா எம்.பி., கழக வெளியீட்டுச் செயலாளரான செல்வேந்திரன், கே.கே.எம்.தங்கராஜ் ஆகியோரும் செல்வராஜை, நேருவை மீறிப் பார்க்க முடியாமல் இருந்தார்கள். தி.மு.க.வின் முன்னோடிகளை அவமதித்து செயல்பட்ட அன்பழகனையும், சீமானூர் பிரபுவையும் தோற்கடிக்க கட்சிக்குள்ளேயே பல உள்ளடி வேலைகளை கழக உடன்பிறப்புகள் செய்து வந்தனர். நேருவுக்கு எதிர்கோஷ்டியாக செயல்பட நினைத்தவர்கள் எப்படியும் இந்த தேர்தலில் தி.மு.க. திருச்சியில் பின்வாங்கும், இதனால் தலைமை நேரு மீது அதிருப்தியடைய நேருவுக்கு செக் வைக்கும்விதமாக மீண்டும் செல்வராஜை தலைமை வலுப்படுத்தும் என நினைத்து செல்வராஜின் ஆதரவாளர்களும், தொண்டர்களும் செல்வராஜின் பிறந்த தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாடி நேருவின் கோஷ்டியை உசுப்பேற்றியுள்ளனர்.

செல்வராஜின் பிறந்த தினமான கடந்த 5&ம் தேதி தி.மு.க.வின் நேரு அலுவலகம் அதிரும்படி வாண வேடிக்கைகள் வெடிக்கப்பட்டது. தில்லைநகரின் கிழக்கு விஸ்தரிப்பில் உள்ள அனைத்துக் கடைகளுக்கும் இலவச அசைவ பிரியாணியும், முசிறி, தொட்டியம், பெரம்பலூர் என புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் என சுமார் 7 ஆயிரம் பேருக்கு மேலானவர்களுக்கும் செல்வராஜ் இல்லத்தில் இலவச பிரியாணி வழங்கப்பட்டது. முன்னதாக தனது இல்லத்தில் இருந்து சிலைகளுக்கு மாலை அணிவிக்க காலை 7 மணிக்கே புறப்பட்டார் செல்வராஜ். திருச்சியில் பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடி, நேரு கோஷ்டிக்கு, செல்வராஜ் கோஷ்டி சளைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தும்விதமாக டூ வீலர் ஊர்வலம், தனது காருக்கு பின்னால் அணிவகுத்த சொகுசு கார்கள் என படை சூழ சிந்தாமணி அண்ணா சிலை, ஜங்ஷன் பெரியார் சிலை, அன்பில் தர்மலிங்கம் சிலை, தனது சமூகத்தின் தலைவரான ஒத்தக்கடை முத்தரையர் சிலை என ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தார் செல்வராஜ். இது சாதாரண மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது. நேரு என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்ற கேள்வியை எழுப்பியது.

கடந்த காலங்களில் அமைச்சராக இருந்தபோது கூட இப்படி ஒரு பிறந்தநாளை செல்வராஜ் கொண்டாடியதில்லை. திருச்சியில் நேருவுக்கு தான் சளைத்தவனல்ல என்பதை தலைமைக்கு பறைசாற்றும்விதமாக இந்தமுறை தனது பிறந்தநாளை நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெகுவிமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தார் செல்வராஜ். இந்த நாளை பயன்படுத்தி நேருவுக்கு எதிராக செயல்பட்ட சிலரும் வலிய வந்து செல்வராஜுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினர். திருச்சியில் எதிரும் புதிருமான கள்ளர் சமுதாயத்தை சார்ந்தவர்களும் செல்வராஜ் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு டின்னர் வரை இருந்து சென்றனர்.

திருச்சி சிவா, செல்வராஜ் இல்லம் தேடிச் சென்று பொன்னாடை போர்த்தி வாழ்த்து சொன்னார். அவரோடு வந்த விசுவாசி ஒருவர் நம்மிடம், ‘‘நேருவுக்கு இது ஒரு சவால்தான். எல்லாவற்றிலும் தன்னையே முன்னிலைப்படுத்தி கட்சிக்காரர்களை ஓரம்கட்டிய நேருவுக்கு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளும் ஒரு பாடம் புகட்டும்’’ என தேர்தல் ரிசல்ட்டையும் சொல்லிவிட்டுப் போனார். திடீரென செல்வராஜ் தனது 70-வது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடியதற்கு இன்னொரு காரணமும் இருப்பதாகச் சொல்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திருச்சி தி.மு.க.வின் கிளைக்கழக நிர்வாகிகள் தேர்தல் நடக்கப் போகிறது. இந்த தேர்தலில் செல்வராஜ் தலைமையில் நேருவுக்கு எதிரானவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட செல்வராஜின் பிறந்தநாள் சில சமிக்ஞைகளைக் காட்டியிருக்கிறது.

அசம்பாவிதம் ஏதும் நடக்ககூடாது என்ற நோக்கத்திலோ என்னவோ நேரு அன்றைய தினம் சென்னையில் இருந்தார். செல்வராஜ் வீடும், அந்த சாலையும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களால் ஆர்ப்பரிக்க, திருச்சி தி.மு.க.வின் தலைமை அலுவலகம் வெறிச்சோடியது. நேருவின் விசுவாசிகள் அன்றைய தினம் அந்த தெருவுக்குள் நுழைவதை முற்றிலும் தவிர்த்தனர்.
-க.சண்முகவடிவேல்

News Source : சைரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக