புதன், 24 செப்டம்பர், 2014

அழகிரியை கட்சியில் சேர்க்க வேண்டும் கருணாநிதியிடம் கனிமொழி வற்புறுத்தல்

தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அடுத்த சட்டசபை தேர்தலுக்கான, முதல்வர் வேட்பாளராக, பொருளாளர் ஸ்டாலின் பகிரங்கமாக அறிவித்ததும், ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, தன் மகிழ்ச்சியை கருணாநிதியிடம் பகிர்ந்து கொண்டதாகவும், அப்போது, தி.மு.க., அமைக்கும் கூட்டணியில் ம.தி.மு.க.,வை சேர்த்துக் கொள்ள வேண்டும் என, தெரிவித்துள்ளதாகவும், கட்சி வட்டாரங்களில் தகவல் பரவி இருக்கிறது.

சமீபத்தில், அறிவாலயத்தில், நடைபெற்ற தி.மு.க., முப்பெரும் விழாவில், '2016ம் ஆண்டின் சட்டசபை தேர்தலுக்கு பின், கருணாநிதி தலைமையில் தி.மு.க., ஆட்சி அமையும்' என, பொருளாளர் ஸ்டாலின் பகிரங்கமாக அறிவித்தார்.அவரது அறிவிப்புக்கு, கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள், தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஸ்டாலினின் இந்த பேச்சு, பூந்தமல்லியில் நடைபெற்ற ம.தி.மு.க., மாநாட்டில் இருந்த, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கு தெரிய வந்தது. உடனே, அவர், 'அ.தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு நண்பர்களுடன் இணையத் தயார்' என, தி.மு.க.,விடம் கூட்டணி வைக்கும் தன் விருப்பத்தை சூசகமாக அறிவித்தார்.

ஸ்டாலின், வைகோ வெளியிட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து, கருணாநிதியை சந்தித்து, தன் மகிழ்ச்சியை தெரியப்படுத்தியுள்ளார் கனிமொழி.அப்போது, சட்டசபை தேர்தல் வியூகம் தொடர்பாக, சில யோசனைகளையும் அவர் முன் வைத்ததாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:கருணாநிதியை, அடுத்த சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க., கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக, ஸ்டாலின் வெளிப்படையாகக் கூறியுள்ளதால், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, பல கட்சித் தலைவர்களும், ஆர்வமாகி இருக்கின்றனர்.
இப்படி ஸ்டாலின் கூறிய பின், தலைவர் கருணாநிதியை, கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,க்கள் குழு தலைவர் கனிமொழி சந்தித்துப் பேசினார். அப்போது, அவர் பல்வேறு விஷயங்களை கருணாநிதியிடம் தெரிவித்துள்ளார்.

'தென் மாவட்டங்களில் தி.மு.க.,வின் பலம் கூடுவதற்கு, அழகிரியை கட்சியில் விரைவில் சேர்க்க வேண்டும்; அ.தி.மு.க., பலமாக இருக்கும் மேற்கு மாவட்டங்களில், ஓட்டு வங்கியை ஈடுகட்ட, அந்த மாவட்டங்களில் ஓரளவுக்கு செல்வாக்குடன் உள்ள ம.தி.மு.க.,வை கூட்டணியில் சேர்க்க வேண்டும்; வட மாவட்டங்களில் வன்னியர்களுக்கும், தென் மாவட்டங்களில் நாடார்களுக்கும், மத்திய மாவட்டங்களில் முத்தரையர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும், வேட்பாளர் தேர்வில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்; மக்கள் செல்வாக்குள்ள கட்சிகள் அனைத்தையும் தி.மு.க., பக்கம் கொண்டு வர வேண்டும்' என, நிறைய விஷயங்களை கருணாநிதியிடம், கனிமொழி வலியுறுத்தி கூறியுள்ளார்.இதற்கு, தேர்தல் நேரத்தில் கவனத்தில் வைத்து செயல்படலாம் என, கருணாநிதி, கனிமொழியிடம் சொல்லியிருக்கிறார்.
இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -

News Source : DINAMALAR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக