சங்கங்கள் - 01
சமீபத்தில் நமது சமூக சங்கங்கள் ஏன் வளர்ச்சி அடைய முடியவில்லை என்று எனக்கு தெரிந்த காரணங்களை சொல்லப்போவதாக சொல்லி இருந்தேன் பின்னர் பணிசுமையின் காரணமாக எழுத முடியவில்லை.. எழுதுவோமா..? வேண்டாமா..?? என்றும் இடையில் ஒரு குழப்பம் ஏற்பட்டது, எழுதாமல் போனால் அதைவிட இந்த சமூகத்திற்க்கு செய்யும் துரோகம் வேறு இருக்க முடியாது என்பதனால் யார் வருத்தப்பட்டாலும் சரி எழுதிவிடுவது என்று தீர்மானித்துவிட்டேன்.
நான் பெயரை குறிப்பிட்டே அனைத்து சங்கங்கள் (எனக்கு தெரிந்த, அறிமுகமாக அனைத்து சங்கங்கள் பற்றியும் எழுதவே விரும்புகிறேன்) பற்றியும் எழுதப்போகிறேன், அனைத்து சங்கங்களோடும் எனக்கு நல்ல தொடர்பு இருக்கிறது இருந்தாலும் சுட்டிக்காட்டப்படாத தவறு என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் வீழ்ச்சியாக நான் கருதுவதனால், சுட்டிக்காட்டிய என்மீது கோபம் கொள்வதைவிட தவறுகளை திருத்தி வீரு நடைப்போட்டு என் சாதியை அழைத்து செல்லுங்கள் என்று உரிமையோடு கேட்டு இந்த தொடரை எழுதுகிறேன்.
முதல் சங்கமாக நூறு ஆண்டுகள் பழமையான, பல சாதிகளுக்கும் சங்கம் என்றால் என்னவெற்று ? இலக்கணம் வகுத்ததுமான "தமிழ்நாடு முத்தரையர் சங்கம்" பற்றி எழுதுவதுதான் சரியானதாக இருக்க முடியும்.
அன்னிபெசன்ட் அம்மையார் தொடங்கி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வரை அத்தனை தலைவர்களையும் அழைத்து மாநாடு போட்டதும் இந்த சங்கம்தான், தமிழ்நாட்டின் மையமாம் திருச்சி மாநகரின் மத்தியில் மீசையை முறுக்கி, கனல் கக்கும் கண்ணோடு எம் பாட்டன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு சிலை அமைத்ததும் இந்த சங்கம்தான், 29 பட்டங்களோடு தமிழ்நாடெங்கும் பரந்து, பிறிந்து வாழ்ந்த "முத்தரையர்" மக்களை நீங்கள் முத்தரையர் என்று சொல்லி ஒருங்கிணைத்ததும் இந்த சங்கம்தான், பிற்படுதப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் அமைக்கப்பட்ட அம்பாசங்கர் கமிசன் அறிக்கைக்காக (இந்த அறிக்கை வெளிவரவில்லை, வந்திருந்தால் இன்று முத்தரையர்களுக்கு கிடைக்காமல் போன கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் முழுமையாக கிடைத்திருக்கும்) ஊர்தோறும் அலைந்து திரிந்து உழைத்ததும் இந்த சங்கம்தான், வலையர் முதல் தலையாரிவரை அத்தனை பேரையும் இணைத்ததும் இந்த சங்கம்தான் இன்று "இரத்தம் தெரிக்க, நரம்பு புடைக்க" பேசும் எந்த சங்கமும் இந்த சங்கம் செய்ததில் ஒரு சதவீதம்கூட செய்தது கிடையாது, அப்படி சங்கங்களுக்கெல்லாம் தலை சங்கமாய் விளங்கிய "தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தை" சிலர் பதவி மோகம் கொண்டும், இன்னும் சிலர் பண மோகம் கொண்டும் சீரளித்து இன்று நடுத்தெருவில் விட்டிருக்கிறார்கள்,
சிவகங்கை மாவட்டம் தந்த சிங்கம், தமிழ்நாடு முழுவதும் பயணப்பட்டு பட்டி தொட்டியெல்லாம் அலைந்து திரிந்து இந்த சங்கத்தை வளர்க்க "பதவி வெறியோ, பண வெறியோ" இல்லாத ஏமாளி தலைவர் அய்யா. ஆண்டியப்பன் காலத்திற்க்கு பிறகு இரட்டை குதிரையில் பயணப்பட நினைத்து இப்போது இரண்டு தலைவர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது, இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்தால் இந்த சாதி வளர உதவும், ஆனால் பதவி இருக்காது, சாதி பெரிதா..? பதவி பெரிதா..?? என்பதை அந்த தலைவர்களின் மனசாட்சியிடமே விட்டுவிடலாம்,
அப்போதிலிருந்து இந்த சங்கத்தின் செயலாளராக இருக்கும் திருச்சி திரு. மரு. பாஸ்கரன் அவர்கள் மறைந்துபோன சங்கத்தை தேடி புதுபிக்கும் பணியினை மேற்கொண்டுள்ளார், அண்ணாருக்கு தோல் கொடுப்பது ஒவ்வொரு முத்தரையனின் கடமை என்பது எனது கருத்து, இந்த சங்கம் ஒருவேளை மூழ்கி போனால் அன்று முத்தரையன் என்று மீசை முறுக்கி திரிவோருக்கு சந்தோசத்தை தரலாம் ஆனால் அதைவீட கேவலம் ஒன்றும் இந்த சாதிக்கு இருந்துவிட முடியாது, அதே நேரத்தில் அந்த சங்கத்தினை இப்போது திறம்பட வழி நடத்த நினைக்கும் மரியாதைக்குறிய திரு, மரு.பாஸ்கரன் அவர்களிடன் பகிரங்கமாகவே இந்த கோரிக்கையினை வைக்க விரும்புகிறேன்,
முதலில் அமைப்பினை இளைஞர்களும் விரும்பும் வண்ணம் மாற்றம் செய்யுங்கள் இளைய தலைமுறைக்கு அதிக வாய்ப்பினை தாருங்கள், தேர்தல் காலங்களில் அவசரப்பட்டு யாரையும் ஆதரிக்காமல் உறவுகளின் மன நிலையை அறிந்து அதற்கேற்ப சரியான நிலைப்பாட்டினை எடுங்கள்
இந்த சங்கம் மீது இளைஞர்கள் வைக்கும் மிக முக்கியமான குற்றச்சாட்டு இந்த சங்கம் வேகமாக செயல்படவில்லை, உடனே முடிவினை எடுக்கவில்லை என்பது,அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, இது ஒன்றும் சினிமா நடிகர்களின் சங்கம் கிடையாது கவர்ச்சிக்காக எதையாவது செய்வதற்க்கு, வீரம் என்று பொல்லாப்பை தேடி தருவதற்க்கு, பலரின் உழைப்பால் உருவான சங்கம் இது, நூறு ஆண்டுகளாய் இன்று நாம் இந்த சாதிக்காக எதுவெல்லாம் பெருகிறோமோ, எதையெல்லாம் பெருமையாக கருதுகிறோமோ அது அத்தனையும் இந்த ஒரே சங்கம்தான் பெற்று தந்தது என்பதை மறந்துவிடக்கூடாது
கடைசியாக ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன், இப்போதே நூறு சங்கங்கள் நம்சாதியில் இருக்கலாம், இன்னும் எதிர்காலத்தில் ஆயிரம் சங்கங்கள் புதிதாக உருவாகலாம் ஆனால்...!
இதுதான் தலைசங்கம், இதன் வீழ்ச்சி ஒட்டுமொத்த முத்தரையர்களின் வீழ்ச்சி, இதன் வளர்ச்சி ஒட்டுமொத்த முத்தரையர்களின் வளர்ச்சி இதை மனதின் நிறுத்தி வீழ்ச்சியா..? வளர்ச்சியா..? என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
இறுதியாக இந்த சங்கத்தின் வீழ்ச்சிக்கான காரணிகள் சுருக்கமாக:
1. தலைமையில் உண்டான பிரிவு
2. அரசியல் முடிவுகளை மக்களின் மனநிலை அறிந்து எடுக்காமை
3. இளைஞர்களுக்கு அதிக வாய்பளிக்காமை
4. ஒருமுறை ஒரு பதவியில் ஒருவரை நியமித்தால் பிறகு கடைசிவரை அவரே அந்த பதவியில் தொடர்வது
5. மாவட்ட, வட்ட அளவில் நிர்வாகிகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காதது
6. அடிக்கடி கூட்டங்கள் நடத்தாமல் விட்டது.
7. பொருளாதார பற்றாக்குறை
இனி இந்த சங்கத்தின் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது சுருக்கமாக:
1. சங்கத்தின் நிதி ஆதரத்தை சரியான நிதி ஆலோசகரின் துணைகொண்டு உயர்த்துதல்
2. ஒரே தலைமையாக ஆக்குதல்
3. இளைஞர்களுக்கு முழுமையான வாய்ப்பினை வழங்குதல்
4. அடிக்கடி கூட்டங்கள், தலைவர்களின் சுற்றுபயணத்தினை மேற்கொள்ளுதல்
5. நிர்வாகிகளை 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைத்தல்
-சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக