காவிரிப் படுகைப் பகுதிகளான தஞ்சை-திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்துள்ள பண்டைய கற்றளிகள் சில முத்தரையர் காலத்துக் கட்டுமானங்களாக முந்தைய ஆய்வாளர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. பனங்குடி, விசலூர், காளியாப்பட்டி, விரலூர், செந்தலை, நியமம், நார்த்தாமலை முதலான சிற்றூர்களில் அமைந்துள்ள இத்தளிகள் சிலவற்றில் முதன் முறையாக கண்ட - வேதி பாதங்களில் குறுஞ்சிற்பங்கள் செதுக்கும் மரபைக் காணமுடிகிறது.
குடைவரைகள், ஒரு கல் தளிகள், கற்றளிகள் என்று மூவகைகளில் திருக்கோயில்கள் அமைத்துப் பெருமை கொண்ட பல்லவச் சிற்பிகளின் கட்டுமானங்கள் எவற்றிலும் காணப்படாத இந்தப் புதிய கலை மரபு தமிழ்நாட்டளவில் முதன்முறையாக அறிமுகமாவது முத்தரையர் காலக் கட்டுமானங்களாக அடையாளப்படுத்தப்படும் திருக்கோயில்கள் சிலவற்றில்தான் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
செந்தலை விமானம்
இவ்வாறு பாதச் சிற்பங்கள் பெற்ற முத்தரையர் திருக்கோயில்கள் மூன்றாகும்.
இவை
- செந்தலை சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
- நியமம் ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
- நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம்
ஆகிய திருக்கோயில்களாகும்.
இத்திருக்கோயில்களில் அமைந்துள்ள பாதங்கள் மற்றும் பாதக் குறுஞ்சிற்பங்களை ஒப்பிட்டு ஆராய்ந்ததில் குறிப்பிடத்தக்க சில வேறுபாடுகளை அறிய முடிந்தது.
செந்தலை விமானம் மற்றும் மண்டப பாதங்கள்
செந்தலை திருக்கோயிலில் பாதபந்தத் தாங்குதளத்துடன் அமைந்துள்ள விமானத்தின் கண்ட பாதங்கள் சிற்பங்கள் செதுக்கப்பெறாமல் வெறுமையாக அமைந்திருக்க, விமானத்திற்கு முன் அமைந்துள்ள மண்டபத்தின் ஒரு சில பாதங்களில் மட்டும் குறுஞ்சிற்பங்கள் காணப்படுகின்றன. விமானத் தாங்குதளத்தின் பாத அளவுகளும் மண்டபத் தாங்குதளத்தின் பாத அளவுகளும் கணிசமாக வேறுபடுகின்றன.
நியமத்தில் விமானத் தாங்குதளம் பாதபந்தமாக அமைந்திருந்தாலும் அவற்றின் பாதங்களில் குறுஞ்சிற்பங்கள் காணப்படுவதில்லை. தாங்குதளத்திற்கு மேல் அமைந்துள்ள வேதிகைப் பாதங்களில்தான் குறுஞ்சிற்பங்கள் செதுக்கப் பெற்றுள்ளன. இம்மூன்று திருக்கோயில்களுள் வேதிகைத் தொகுதி பெற்ற ஒரே திருக்கோயில் நியமம் மட்டுமே.
நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரத்தில் விமானத்தைச் சுற்றி அமைந்துள்ள சுற்றுச்சுவரின் பாதபந்தத் தாங்குதளக் கண்டபாதங்களிலும் மண்டபத் தாங்குதளப் பாதங்களிலும் குறுஞ்சிற்பங்கள் காணப்படுகின்றன. இம்மூன்று திருக்கோயில்களுள் சுற்றுச்சுவர் பாதங்களில் குறுஞ்சிற்பங்கள் பெற்ற ஒரே கோயில் நார்த்தாமலை மட்டுமே.
ஒரே கலை மரபைச் சேர்ந்த திருக்கோயில்களாக அடையாளப் படுத்தப்படும் ஏழு திருக்கோயில்களுள் நான்கில் ஏன் பாதச்சிற்பங்களே இல்லை? மீதமிருக்கும் மூன்றனுள் அமைந்துள்ள பாதச் சிற்பங்களும் ஏன் இத்தனை மாறுபாடுகளுடன் அமைந்துள்ளன ?
தவிர்க்க முடியாமல் எழும் இத்தகைய கேள்விகளே புதிய திறப்புகளுக்கு வித்திடுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக