// இதில் வேடிக்கை என்னவென்றால் இதில் இருக்கும் 2343 சாதிகளில் 1993 முதல் முத்தரையர் சமூகத்தின் "அம்பலக்காரர், முத்துராஜா, வலையர்களும்" இடம்பெற்று உள்ளனர், ஆனால் அந்த பட்டியலில் இருக்கிறோம், அதில் இருக்கும் வாய்ப்புகளை நாமும் பயன்படுத்தலாம் என்ற விவரம்கூட முத்தரையர்களில் 99% பேருக்கு தெரியாது.
அதே பட்டியலில் தமிழகத்தில் அரசியல், பொருளாதாரம், வேலை என்று அனைத்து துறைகளிலும் முன்னேறிய (இந்த பட்டியல் மூலம் அதிகமான பலன்கள் பெற்றவர்கள்) சாதிகள் இன்னமும் அந்த பட்டியலில் இருப்பதும், பலன்களை முழுவதுமாக அனுபவிப்பதும் கண்கூடு...
#தேவை மறுபரிசீலனை...!
சஞ்சய்காந்தி அம்பலக்காரர் //
சாதியும் நீதியும்
ஜாட் சமூகத்தினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவித்த மார்ச் 4, 2014 அறிவிப்பாணையை உச்சநீதிமன்றம் இரு நாள்களுக்கு முன்பு ரத்து செய்தது. பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் தனது அறிக்கையில், "ஜாட் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோராகக் கருத முடியாது' என்று தெரிவித்திருந்தும், அதைப் புறக்கணித்து அறிவிப்பாணை வெளியிட்ட மத்திய அரசின் முடிவு தவறு என்று நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிவிப்பாணை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியால், மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பாணைக்கு எதிர்ப்புத் தெரிவித்த ரக்ஷா சமிதி, "இது அரசியல் ஆதாய முடிவு' என்று கூறி உச்சநீதிமன்றத்தை அணுகியது. நீதிமன்றம் அளித்த தீர்ப்பும், இந்த அறிவிப்பாணை அரசியல்தனமானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பாணை தொடர்பாக நீதிமன்றம் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபோது, புதிதாகப் பொறுப்புக்கு வந்துள்ள பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் ஜாட் சமூகத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க ஆதரவு தெரிவித்தது. சமூக அறிவியல் ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சில் தெரிவித்திருந்த முடிவின் அடிப்படையில், இந்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டது என்று கூறியிருந்தது. எந்த அரசியல் கட்சியும் ஜாட் சமூகத்தினரின் வாக்கு வங்கியை இழக்கத் தயாராக இல்லை.
ஒரு சமூகத்தை பிற்படுத்தப்பட்ட சமூகமாக அறிவிக்க சாதி மட்டுமே போதுமானது அல்ல என்று நீதிமன்றம் கூறியிருப்பதும், பிற்படுத்தப்பட்டது என அரசியல் தலைமை முடிவெடுப்பதாலேயே ஒரு சமூகத்தை பிற்படுத்தப்பட்டோராக அறிவிக்க முடியாது என்று நீதிமன்றம் வழிகாட்டியிருப்பதும் இந்த விவகாரத்தில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளன.
மண்டல் குழு அறிக்கை மீதான போராட்டங்கள் 1989-இல் இந்தியா முழுவதும் தீவிரமாக நடைபெற்றன. பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்வதில் இந்தப் போராட்டங்கள் அடிப்படையாக அமைந்தன. மண்டல் குழுவின் பரிந்துரையில் இந்திய மக்கள் தொகையில் 52% பிற்படுத்தப்பட்டோர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வளவு பெரிய வாக்கு வங்கியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்தான், புதிய சாதி அமைப்புகள், புதிய கட்சிகள் தோன்றக் காரணமாகின.
அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு சாதி அமைப்புகள், கட்சிகள் தோன்றி, தங்களைத் தலித்துகளாக, பிற்படுத்தப்பட்டவராக, மிகவும் பிற்படுத்தப்பட்டவராக அறிவிக்க வேண்டும் என்று போராடும் நிலைமை, கடந்த 30 ஆண்டுகளாக அதிகரித்து விட்டிருக்கிறது. இந்த சாதி அமைப்புகள் அல்லது கட்சிகளுக்குத் தனித்து நிற்கும் பலமில்லாதபோதும் இவை குறிப்பிட்ட பகுதியில் தனக்கான வாக்கு வங்கியைக் கொண்டுள்ளன. ஆகவே, இந்த அமைப்புகளின் கூட்டணி அல்லது ஆதரவைப் பெற, அரசியல் கட்சிகளும் இவர்களுக்கு ஆதரவாக வாக்குறுதிகளை அளிக்கின்றன.
ஜாட் சமூகத்தை பிற்படுத்தப்பட்டதாக அறிவிக்கும் அறிவிப்பாணை வெளியாவதற்கு முன்பாகவே, பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் பரிந்துரைப்படி, 13 மாநிலங்களைச் சேர்ந்த 115 சாதிகள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டன. பிப்ரவரி 2014-இல் வெளியான இந்தப் பட்டியலில் ஜாட் சமூகம் இடம் பெறாததால் அவர்கள் போராட்டம் நடத்தினர். அதன் பிறகே அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
தேசிய ஆணையத்தின் பரிந்துரைப்படி சேர்க்கப்பட்ட 115 சாதிகளையும் நுட்பமாக ஆய்வு செய்தால் அவற்றில் பெரும்பாலானவை அதற்கான தகுதி உள்ளவை அல்ல என்பதை அறியலாம். அவை அரசியல் காரணங்களுக்காகப் பட்டியலில் சேர்க்கப்பட்டவையாக இருக்கும்.
ஒரு சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதால் அந்தச் சமூகம் அடையும் பலனைவிட, அந்தச் சமூகத்தை வைத்துத் தன்னை முன்னிலைப்படுத்தும் அரசியல்வாதியும் அவருக்குத் துணை நிற்போரும் மட்டுமே பயன் அடைகின்றனர். சமூகத்தில் இவர்களுக்கு ஆதரவாக நிற்போர் சிலருக்கு பதவி உயர்வு, புதிய பதவியைப் பெற்றுத் தரவும் முடிகிறது. அந்தச் சமூகம் அடையும் பயன் மிகக் குறைவே.
கடந்த ஆண்டு 115 சாதிகளை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்த பிறகு, இந்தப் பட்டியலில் இடம் பெறும் சாதிகளின் எண்ணிக்கை 2,343 ஆக உயர்ந்துள்ளது. தற்போதும்கூட, பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம், சில கணக்கெடுப்புகளை நடத்தி வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்திலும்கூட, அசாம் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையக் கூட்டம், புதிய சாதிகளை சேர்ப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்தியது. இந்த ஆணையம் புதிய சாதிகளை சேர்ப்பதற்கு மட்டும்தானா? பிற்படுத்தப்பட்ட நிலையிலிருந்து முன்னேறிவிட்டது குறித்து ஆய்வு செய்யாதா?
கடந்த அரை நூற்றாண்டு காலத்தில், ஒவ்வொரு சமூகமும் எத்தகைய வளர்ச்சியைப் பெற்றுள்ளன. இவர்கள் தொடர்ந்து அதே நிலைமையில்தான் இருக்கிறார்களா? கல்வி வேலைவாய்ப்புகளால் முன்னேறியிருக்கிறார்களா? இவர்களின் சமூக வாழ்க்கைத் தரம் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பதையெல்லாம் ஆய்வு செய்து, இடஒதுக்கீட்டு அளவை அதற்கேற்ப மாற்றியமைப்பதும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகளுக்கான பட்டியலை திருத்துவதும் காலத்தின் கட்டாயம்.
இல்லையெனில், பயனடைந்த சிலர் மட்டுமே தொடர்ந்து பயனடைவதும், உரிய தகுதி இல்லாதபோதும் அரசியல் காரணங்களுக்காகப் பட்டியலில் சேர்க்கப்படுவதும் தொடரும்!
News source : http://www.dinamani.com/editorial/2015/03/20/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article2721877.ece