//வெளிமாவட்டங்களில் இருந்து குறிப்பாக வன்னியர், முத்தரையர், கவுண்டர் என தென்மாவட்டங்களுக்கு சம்பந்தமில்லாத அதிகாரிகளை நியமிக்கவேண்டு//
திருநெல்வேலி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் டி.எஸ்.பி.,இன்ஸ்பெக்டர் அளவிலான அதிகாரிகளை மாற்றம் செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே நிலவுகிறது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை தாமிரபரணி ஆறு மட்டும் ஒன்றிணைக்கவில்லை. ஜாதிய சிந்தனைகளும், வெட்டுக்குத்துகளும் கூட ஒரே மாதிரியாகத்தான் நடக்கிறது. 1986ல் நெல்லை மாவட்டம் பிரிக்கப்பட்டது. 1995ல் தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளத்தில் துவங்கிய கலவரம், நெல்லை மாவட்டம் வீரசிகாமணியில் துவங்கிய கலவரம் இன்றளவும் நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது.
ஜாதிய சிந்தனைகள் பெரியவர்களை மட்டுமின்றி பள்ளி மாணவர்களையும் தற்போது ஆட்டிவிக்கிறது. மாணவர்கள் கைளில் ஜாதிக்கலர் கயிறு கட்டுவது துவங்கி, ஊர்எல்லையில் இருக்கும் எரியாத மின்விளக்கு கம்பத்திற்கு பெயிண்ட் அடிப்பது, ஊர்த்திருவிழா கச்சேரியில் ஜாதிப்பாட்டு வரையிலும் ஜாதிபுரையோடிப்போய்விட்டது. 95 கலவரம் அ.தி.மு.க.,ஆட்சியின்போதுதான் ஏற்பட்டது. தற்போதும் அ.தி.மு.க.,ஆட்சியில்தான் கலவரம் எட்டிப்பார்க்கிறது. இரண்டு கலவர காலங்களும் ஏதேச்சையாக ஒரே காலகட்டத்தில் நடந்தாலும் ஜாதிஅரசியலும் ஒரு காரணமாக இருக்கிறது.
அரசாங்கம் என்னவோ ஜாதியை ஓட்டுக்களாக பார்க்கிறது. ஜாதித்தலைவர்களோ கொலைகளின் எண்ணிக்கையை தங்களுக்கு கிடைக்கும் அரசியல் அங்கீகாரமாக பார்க்கிறார்கள். 95ல் ஏற்பட்ட ஜாதிக்கலவரத்திற்கு பிறகு நடவடிக்கை எடுத்த அரசு, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பணியாற்றிய டி.எஸ்.பி.,இன்ஸ்பெக்டர் அளவிலான அதிகாரிகளில் குறிப்பிட்ட நாடார், தேவர்,பட்டியல் இனத்தவர் என முக்கிய மூன்று ஜாதியினரையும் வெளிமாவட்டத்திற்கு அனுப்பிவைத்தனர். இதற்காக அரசு ஒரு உத்தரவை பிறப்பித்து நடவடிக்கை எடுத்தது. அப்போது வெளியேறிய நெல்லை, தூத்துக்குடி அதிகாரிகள் தற்போதும் தர்மபுரி, வேலூர்,சென்னை, தஞ்சை என வெளிமாவட்டங்களில் நிம்மதியாக பணியாற்றுகிறார்கள்.
தற்போதும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மூன்று ஜாதியினருக்குள்தான் அதிக எண்ணிக்கையில் மோதல்கள் நடக்கின்றன. எனவே ஒவ்வொரு முறை ஜாதிக்கொலை நடக்கும்போதும் சம்பந்தப்பட்ட அதிகாரியை அனுப்பித்தான் குடும்பத்தை சமாதானப்படுத்துகின்றனர். குற்றவாளிகளை பிடிக்கவும் சம்பந்தப்பட்ட ஜாதி அதிகாரிகளை பயன்படுத்துகின்றனர். இதனால் குற்றவாளிகளுக்கு பயம்இல்லாமல் போய்விட்டது. எனவே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 96ல் அமல்படுத்தியதைப்போல மீண்டும் இரண்டு மாவட்டங்களிலும் கோலோச்சும் ஜாதிஅதிகாரிகளை நியமிப்பதை நிறுத்தவேண்டும். வெளிமாவட்டங்களில் இருந்து குறிப்பாக வன்னியர், முத்தரையர், கவுண்டர் என தென்மாவட்டங்களுக்கு சம்பந்தமில்லாத அதிகாரிகளை நியமிக்கவேண்டும். இவ்வாறு அமல்படுத்திப்பார்த்தாலே சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். ஐகோர்ட் <உத்தரவின்பேரில் "மனித உரிமை' என பெயர் வைத்த தன்னார்வ அமைப்புகள் மீது போலீசார் வழக்குப்போட்டு கைது செய்தனர். நெல்லையில் அதிலும் ஜாதிப்பார்த்துதான் கைது நடவடிக்கை பாய்ந்தது. ஒரு சிலர் ஜாதிஆதிக்கத்தால் தப்பிக்கொண்டனர். நெல்லையில் எஸ்.பி.,க்கு தகவல் தெரிவிக்கும் ஸ்பெஷல் பிராஞ்ச் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள், தங்களுக்கு கீழாக தங்களின் ஜாதிஆட்களை அதிக எண்ணிக்கையில் தேர்வு செய்து நியமித்துக்கொள்கிறார்கள். அவர்களோ உண்மையான தகவல்களை தெரிவிப்பதில்லை. இதனால் எஸ்.பி.,டிஐஜி உள்ளிட்டோருக்கு தேவையான தகவல்கள் கிடைப்பதில்லை. நெல்லையில் உளவுப்பிரிவிலும் கூட ஒரு குறிப்பிட்ட ஜாதியினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே நுண்ணறிவுப்பிரிவு(ஐ.எஸ்.,) சிறப்பு பிரிவு(எஸ்.பி.,) உளவுப்பிரிவு (எஸ்பிசிஐடி) என அனைத்து முக்கிய பிரிவுகளிலும் வெளிமாவட்ட அதிகாரிகளை நியமித்தால் மட்டுமே 24 மணிநேரமும் கண்காணிப்பும் கவனிப்பும் செலுத்த வாய்ப்புள்ளது.
News source : http://www.dinamalar.com/news_detail.asp?id=1209857
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக