சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பும், முத்தரையர் சமூகமும்....!!
இடஒதுக்கீடு :
இருக்கும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப (சாதி, மதம் உள்ளிட்ட எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறதோ) எல்லோருக்கும் உரிய பங்கு என்பதுதான் "இடஒதுக்கீடு" என்பதன் பொருளாக இருக்க முடியும் ஆனால் நடைமுறையிலோ இடஒதுக்கீடு என்பது "முத்தரையர்" சமூகத்தை பொருத்தவரை "இருக்கிறது ஆனால் இல்லை" என்பதுதான். இந்தியாவில் எத்தனையோ ஆயிரம் சாதிகள் இருக்கிறது, தமிழகத்திலோ நூற்றுக்கும் மேற்பட்ட சாதிகள் இருக்கின்றது, இன்றுவரை சுதந்திரத்திற்க்கு முன்பாகட்டும், பின்பாகட்டும் எப்போதும் அரசாங்கங்களால் புறக்கணிக்கப்படும் ஒரே ஒரு சமூகம் "முத்தரையர்" சமூகம். இடஒதுக்கீடு மட்டுமல்ல... எல்லா நிலைகளிலும்,
ஆனால் அந்த சமூகத்து இளைஞர்களுக்கு இன்றும் எதாவது ஒரு சங்கத்துக்கு கொடி பிடிக்கவும், கோசம் போடவும் மட்டும்தான் தெரிகிறதே தவிர, அரசாங்கம் எப்படி நம்மை புறக்கணிக்கிறது ? ஏன் புறக்கணிக்கிறது ? என்ற எந்த சிந்தனையும் ஒருபோதும் வரவில்லை, சரி அவர்களுக்குதான் இல்லை என்றால் சங்கம் வைத்து சாதி வளப்பவர்களுக்காவது இதுகுறித்த புரிதல், கொள்கை, நோக்கம் எதாவது இருக்கிறதா ? என்றால் அதுவும் பூஜ்யம். இன்று அரசாங்க பணிகள் பற்றி சொல்லப்போனால் மொத்தமுள்ள 32 மாவட்டங்களிலும் ஒரே ஒரு மாவட்ட ஆட்சியர் அதாவது IAS ஆபிஸர் ஒருவர் மட்டுமே...! சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரே ஒரு நீதிபதி கூட கிடையாது, அரசுதுறைகளில் எதிலும் முத்தரையர்களுக்கு செயலாளர் என்ற அந்தஸ்த்து கிடையாது, காவல்துறையில் மாவட்ட அளவில் கூட அதிகாரி பதவி கிடையாது, ஆனால் எண்ணிக்கையிலோ அதிகம்..? இது முரண்பாடாக யாருக்குமே தோன்றுவதில்லை, ஏனென்றால் பாதிக்கப்பட்டது என் சாதியல்லவா,
கணக்கெடுப்பும், முத்தரையரும் :
1934 ஆம் ஆண்டு கடைசியாக ஆங்கிலேய அரசாங்கம் எடுத்து வெளியிட்ட சாதிவாரி கணக்கெடுப்பை மட்டுமே இதுவரை அடிப்படையாக கொண்டு இடஒதுக்கீடு தந்து கொண்டு இருக்கிறது இந்திய அரசாங்கம் இதுதான் சமூக நீதியா..? 2011 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பின் ஒரு பகுதியை கடந்த வாரம் மத்திய அரசு வெளியிட்டது, அதில் சமூக பொருளாதார நிலைகள் குறித்த தகவல்களை மட்டுமே வெளியிட்டுள்ளது "சாதிவாரியான கணக்கீடுகளோ" சாதிவாரியான மக்களின் நிலைகளையோ வெளியிடவில்லை, இன்றுவரை "இடஒதுக்கீடு" என்ற பெயரில் 120 சாதிகளோடு இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோராக (Most Backward Class) ஒருசில பிரிவுகளையும், பிற்படுத்தப்பட்டவராக (Backward Class) சிலபிரிவுகளையும் வைத்து ஒட்டுமொத்த "முத்தரையர்" சமூகத்திற்க்கும் இடஒதுக்கீட்டின் பலனாக ஒன்றுமே இல்லாமல் வைத்திருக்கிறார்கள், இன்றுவரை இடஒதுக்கீட்டின் பலன்களை சில ஆயிரம் எண்ணிக்கையுடைய சமூகங்கள் "திருப்தியாக" பலனடையும்போது, எண்ணிக்கையில் லட்சங்களை தாண்டி கோடிகளில் கணக்கு சொல்லி பெருமைப்படும் "முத்தரையர்" சமூகத்தின் பலனோ "பூஜ்யம்" இன்னும் சொல்லப்போனால் கல்வி நிலையை பொருத்தவரை "பட்டதாரிகளே" இல்லாத (முதல்தடவைக்கூட) முத்தரையர்களின் குடும்பம் மட்டுமே சுமார் 60% இருக்கும் இதுவும் இன்று இருக்கும் இடஒதுக்கீட்டின் காரணமாகதான்.
சாதி அமைப்புகளும், கணக்கெடுப்பும் :
சாதியே இல்லை என்று கூப்பாடு போடும் திராவிடர் கழகம் தொடங்கி திராவிட முன்னேற்ற கழகம் வரை "சாதிவாரி கணக்கெடுப்பை" வெளியிட வலியுறுத்தும்போது, சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட்டால் உண்மையான மக்கள் எண்ணிக்கை தெரியும், மக்கள் எண்ணிக்கை தெரிந்தால் சரியான இடஒதுக்கீட்டை பெறமுடியும், சரியான இடஒதுக்கீட்டை பெற்றால் சாதிமக்கள் சம உரிமையோடு வாழ்வார்கள் என்று தேர்தல் நேரங்களில் எதாவது கட்சிக்கு ஆதரவு தரும் சங்க தலைவர்கள் வலியுறுத்த வேண்டாமா..? கேட்டால் நான் பிரிவினை ஏற்படுத்துகிறேன் என்பார்கள், எது பிரிவினை..? என் சாதிக்கான உரிமை பறிக்கப்படும்போது பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்பவர்கள், எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்த சமூகத்தினை தேர்தல் நேரங்களின் அடகு வைக்க துடிக்கிறார்கள் என்று கேட்பது பிரிவினையா..?
இப்படி எல்லா நிலைகளிலும் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் போராடாமல் எந்த பலனையும், ஏன் வாழ்வுரிமையை தக்க வைக்கக்கூட போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு சமூகத்தின் இன்றைய பிரச்சனை என்ன தெரியுமா..? என் தலைவன் பெரியவனா..? உன் தலைவன் பெரியவனா..? என்பது.
ஏன் வெளியிட வேண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு ? :
ஒரு உண்மையை சொல்லட்டுமா..? இப்போது எடுக்கப்பட்ட கணக்கை அதாவது சமூக பொருளாதார சாதிவாரி கணக்கை சேர்த்தே வெளியிடட்டும் அப்போது தெரியும் முத்தரையர்களின் சமூக அவலம், இன்று தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த குடிசைவீடுகளில் 70%மும், நிலமற்ற ஏழைகளில் 80% மும் "முத்தரையர்" சமூகமும்தான் இருக்கிறது இந்த கணக்கெடுப்பு மட்டும் திருந்தம் இல்லாமல் முழுமையாக வெளியிடப்படுமேயானால் இந்த உண்மைகள் வெளியே தெரிந்துவிடும். இந்த உண்மை தெரிந்து ஒருவேளை உறங்கிக்கொண்டே இருக்கும் ஒரு சமூகம் விழித்துக்கொண்டால்...? ஆகவே இந்த கணக்கெடுப்பை சேர்த்தே வெளியிட ஒருபோதும் எந்த அரசாங்கமும் துணியாது. இந்த கணக்கெடுப்பிலே மாதம் ஐந்தாயிரத்திற்க்கும் குறைவான வருமானம் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, அதிலும் உறுதியாக சொல்லமுடியும் "முத்தரையர்களின்" எண்ணிக்கை 90% இருக்கும் என்று.
ஆகவே சாதிவாரியான கணக்கெடுப்பை முழுமையாக வெளியிட வேண்டும், முத்தரையர் சமூகத்தின் எண்ணிக்கைக்கு ஏற்ப தனி இட ஒதுக்கீட்டை தர வேண்டும் (அதேபோன்று எல்லா சமூகங்களுக்கும் உரிய பங்கினை தர வேண்டும்) இதை இங்கு இந்த சமூகத்தை வைத்து அரசியல் செய்பவர்கள், செய்ய நினைப்பவர்கள் வலியுறுத்த வேண்டும், முக்கியமாக போராட வேண்டும். சமூக நீதியை என் சாதியும் பெற வேண்டும்.
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்,
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்