தமிழகத்தில், திராவிட இயக்கங்கள் மீது அதிருப்தியில் உள்ள ஜாதி மக்களை, பா.ஜ., பக்கம் ஒருங்கிணைக்கும் முயற்சி யில் அமித் ஷா ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.நாடார் கூட்டமைப்பினர் நடத்திய காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, கடந்த, 15ம் தேதி, தமிழகம் வருவதாக இருந்தது.
நிகழ்ச்சி ரத்து:ஆனால், 'நிடி ஆயோக்' கூட்டம் உட்பட, பல முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டியிருந்ததால், அவரால், தமிழகம் வர முடியவில்லை; அவருக்கு பதிலாக, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, தமிழக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
ஆனால், தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை சார்பில், மதுரையில், அன்றைய தினம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சி, ஆகஸ்ட், 6ம் தேதி, மதுரையில் நடக்கிறது.அதில் அமித் ஷா கலந்து கொள்கிறார்.
தமிழகத்தில், திராவிட இயக்கங்களுக்கு எதிரான சிந்தனையில் உள்ள ஜாதி மக்களை, பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஒருங்கிணைக்க அமித் ஷா உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து,
பா.ஜ., வட்டாரங்களில் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள கட்சி முக்கியஸ்தர்கள் மூலம், நிறைய புள்ளி விவரங்களை அமித் ஷா திரட்டினார். மத்திய அரசு திரட்டி உள்ள, ஜாதிவாரி புள்ளி விவரங்கள் மூலமும், நிறைய விவரங்களை அறிந்தார். அதன்பின்தான் தமிழகத்தில், திராவிட கட்சிகளுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் ஜாதியினரை, பா.ஜ., பக்கம் திரட்ட உத்தரவிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
கையெழுத்து இயக்கம்:அதன் முதல்கட்டம் தான், நாடார் கூட்டமைப்பினர் மூலம் ஏற்பாடு செய்த கூட்டங்கள். அடுத்து தேவேந்திரர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அமித் ஷா, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து தங்களை விடுவிக்க, தேவேந்திரர்கள் நடத்தும் கையெழுத்து இயக்கத்தில், முதல் ஆளாக கையொப்பம் இடுகிறார். அவர்கள் கோரிக்கையை, மத்திய அரசு மூலம் செய்து கொடுக்கவும் உறுதி அளித்து உள்ளார்.அடுத்தடுத்த கட்டங்களில் வன்னியர், முத்தரையர் இனத்தவர்களை யும் பா.ஜ., பக்கம் ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் அமித் ஷா தீவிரமாக ஈடுபடுவார். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.- நமது நிருபர் -
News Source : DINAMALAR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக