சனி, 3 அக்டோபர், 2015

காசு கொடுத்தால் மட்டுமே வேலை நடக்குது

அவிநாசி:""கருவலூர் மின்வாரிய அலுவலகத்தில், காசு கொடுத்தால் மட்டுமே, வேலை நடக்கிறது; லஞ்சம் அதிகரித்து விட்டது,'' என, அவிநாசி ஒன்றிய கூட்டத்தில், கவுன்சிலர் கணேசன் குற்றஞ்சாட்டினார்.அவிநாசி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது; ஒன்றிய தலைவி பத்மநந்தினி தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் மணிகண்டன், துணை தலைவி சிவகாமி முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் வரவேற்றார்.
கூட்ட விவாதம்:சக்திவேல் (சுயே.,): வளர்ச்சி பணிகள் பாக்கியுள்ளன. தாளக்கரை லட்சுமி நரசிங்கப்பெருமாள் கோவிலுக்கு செல்லும் ரோட்டை சீரமைக்க வேண்டும். லூர்துபுரத்தில், "சம்ப்' கட்ட, குடிநீர் வினியோகிக்க வேண்டும்.
ஆணையாளர்: அம்மா சிமென்ட் கிடைப்பதில், தாமதம் ஏற்பட்டுள்ளது; வந்ததும் பணிகள் துவக்கப்படும்.
மகேஸ்வரி (தே.மு.தி.க.,): தத்தனூர் ஊராட்சியில், பல இடங்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. கொசு மருந்து தெளித்து, புகை அடிக்க வேண்டும்.
சுப்ரமணியம் (அ.தி.மு.க.,): காசிகவுண்டன்புதூர், ஏ.டி., காலனி, கொடிகாத்த குமரன் நகர், மங்கலம் ரோட்டிலுள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல, "டிஸ்போஸல் பாயின்ட்' இல்லை. சின்ன கருணைபாளையத்தில், குடிநீர் வினியோகம் முறையாக இல்லை. மங்கலம் ரோடு பிரிவில் இருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் ரோடு, மோசமாக உள்ளது.
கணேசன் (கொ.ம.தே.க.,): கருவலூர் மின் வாரிய அலுவலகத்தில், எதற்கொடுத்தாலும் லஞ்சம்
கேட்கின்றனர். மின் கணக்கீடு அட்டைக்கு, 500 ரூபாய் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் என்கின்றனர். எந்த வேலையாக இருந்தாலும், காசு கொடுத்தால் மட்டுமே காரியம் நடக்கிறது. மனப்பாளையம் துவக்கப்பள்ளியில் அங்கன்வாடி மையம், ஏ.டி., காலனியில் பொதுக்கழிப்பிடம் அமைக்க வேண்டும் என, பலமுறை கூறியும், ஒன்றும் நடக்கவில்லை. கருவலூரில் நெடுஞ்சாலைத்துறையினர் கட்டிய சாக்கடை கால்வாயால், பிரச்னை ஏற்பட்டுள்ளது. கழிவு நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜயராகவன் (இந்திய கம்யூ.,): எளச்சிபாளையத்தில், பொதுக்கழிப்பிடம் இல்லாததால், பெண்கள் கஷ்டப்படுகின்றனர். முத்தரையர் காலனியில், மதிற்சுவர் கட்ட, ஏழு லட்சம் ரூபாய் ஒதுக்கி, டெண்டர் விட்டு, 21 மாதங்களாகிறது; இன்னும் வேலை நடக்கவில்லை.
ஆணையாளர்: போதிய ஆட்கள் வசதி இல்லாததால், பணிகளை விரைவாக செய்ய முடிவதில்லை. மக்களின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவோம்.
இவ்வாறு, விவாதம் நடந்தது.

News Source : DINAMALAR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக