புதுக்கோட்டைக்கு வந்த பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
மறைந்த முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் 5ம் ஆண்டு நினைவு தினத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துவதற்காக பாமக சார்பில் கலந்துகொண்டேன். அவர் என்னுடன் சட்டமன்றத்தில் ஒன்றாக இருந்தவர், நல்ல மனிதர். கட்சியை மறந்து அஞ்சலி செலுத்த வந்துள்ளோம்.
திருச்சி விமான நிலையத்திற்கு மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் பெயரினை சூட்ட வேண்டும். இதற்கு தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு அன்புமணிராமதாஸ் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. பல மண்டலங்களில் பாமக சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. தற்போது வரும் 11ம் தேதி திருநெல்வேலியில் மாநாடு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பாமக திட்டங்களை வகுத்துள்ளது. மதுவிற்கு எதிராக பல போராட்டங்கள் பாமக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
ஆயிரங்களில் நடப்பது லஞ்சம், லட்சம் கோடிகளில் நடப்பது தான் ஊழல். பாமக தலைமையில் மாற்று அணி தேர்தல் நேரத்தில் அமையும். பாமக ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு மது கூட தமிழகத்தில் இருக்காது, லஞ்சம் ஊழல் ஒழிக்க சேவை உரிமை சட்டம், லோக் ஆயுக்தா கொண்டுவரப்படும், கல்வி செலவை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பிற்கு படித்த இளைஞர்கள் மாணவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
2011ம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. ஆனால் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த தவறிவிட்டது. 2011ம் ஆண்டு பொன்னி அரிசி 35 ரூபாய இருந்தது தற்போது 55க்கு விற்கப்படுகிறது. 72 ரூபாய்க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு தற்போது 155 ரூபாய்க்கு ஏறிவிட்டது. இந்த அதிமுக ஆட்சியில் அனைத்து பொருட்களும் 100 அல்ல 200 சதவீதம் அளவிற்கு விலை உயர்ந்துவிட்டது. பதுக்கல், ஆன்லைன் வர்த்தகமும் விலைவாசி உயர்வுக்கு காரணமாக உள்ளது. தனிமனித வளர்ச்சிக்கு கல்வி தான் அவசியம் தேவை. எனவே மத்திய அரசு கல்விக்காக நிதியை அதிக அளவில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மக்களின் இறுதி புகழிடமாக நீதிமன்றங்கள் உள்ளது. நீதிமன்ற கண்ணியத்தையும், புகழினை நீதிபதிகள், வக்கீல்கள் காக்க வேண்டும்.
சட்டமன்ற தேர்தலில் பாமக முதலமைச்சர் வேட்பாளராக அன்புமணியை அறிவிப்பது கட்சியின் உரிமை. விஷ்ணுபிரியா கொலை வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. எனவே கருத்து சொல்ல இயலாது. பாமக தொண்டர்கள் எங்களுக்கு தெரியாமல் மது குடிப்பதை தடுக்க இயலாது. ஆனால் கட்சி நிர்வாகிகள் யாரும் மது குடிக்க கூடாது என்று கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம்.
மத்திய அரசு வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு உரிய இடம் கிடைப்பதில்லை, புறக்கணிக்கப்படுகிறது. அதிக வேலைவாய்ப்புகள் மத்திய அரசு பணியில் தான் உள்ளது. எனவே தமிழகத்தில் மத்திய அரசு பணிக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கிட வேண்டும். இதேபோல் மற்ற அந்தந்த மாநிலத்தவர்களுக்கு மாநிலங்களில் மத்திய அரசு பணி வழங்கிட வேண்டும். காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கவில்லை. இதில் மத்திய அரசும் பாராமுகமாக உள்ளது. தமிழக மக்கள் 80 சதவீதம் பேர் காவிரி குடிநீரை நம்பி உள்ளனர். அனைத்து தமிழக கட்சிகளுக்கு இதில் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். ஆசிரியர்களின் ஜேக்டோ அமைப்பின் கோரிக்கைகள் நியாயமானது தான். தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அன்புமணிராமதாஸ் தமிழகம் முழுவதும் சென்று பொதுமக்கள், வணிகர்கள், பொறியாளர்கள், வக்கீல்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைவரையும் கருத்துகேட்புக்கு சந்திக்க உள்ளார். இந்த கருத்து கேட்புக்கு பின் பாமக மக்கள் தேர்தல் அறிக்கையாக 2016 ஜனவரி மாதம் வெளியிடப்படும். பல கட்சிகளில் மாறி மாறி கூட்டணி வைத்ததற்காக பாமக மக்களிடம் மன்னிப்பு கேட்டது. இதேபோல் மற்ற கட்சிகள் மன்னிப்பு கேட்டது உண்டா என்றார்.
இந்த பேட்டியின்போது மாநில துணை பொதுச் செயலாளர்கள் மூர்த்தி, அருள்மணி, மாவட்ட செயலாளர் வெள்ளைச்சாமி, நகர செயலாளர் பெரியசாமி, மாவட்ட தலைவர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பகத்சிங்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக