சனி, 10 அக்டோபர், 2015

இடஒதுக்கீட்டில் மாற்றம் வேண்டும்

கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து சமூகத்தினரும் பயன்பெறும் வகையில் இட ஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றார் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. மணி.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் நினைவிடத்தில் புதன்கிழமை அவர் அஞ்சலி செலுத்தினார்.
அதன்பிறகு செய்தியாளர்களுக்கு ஜி.கே. மணி அளித்த பேட்டி:
தமிழகத்தில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அதிமுக அரசு தவறிவிட்டது. தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீடு முறை மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏமாற்றத்தையே அளிக்கிறது.
அதனால் இந்த முறையை மாற்றி, கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களில் இருக்கும் தொகுப்பு இட ஒதுக்கீடு முறையை கொண்டு வர வேண்டும்.
திருச்சி விமான நிலையத்துக்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பெயரை சூட்ட வேண்டுமென தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
அதிமுக முன்னாள் அமைச்சர் அ. வெங்கடாசலம் கொலை செய்யப்பட்டு, 5 ஆண்டுகள் கடந்தும் இதுவரை கொலைக்கான உண்மை நிலையையும், குற்றவாளிகளையும் கண்டுபிடிக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. அதனால், இந்த வழக்கை பாமக ஏற்று நடத்தும்.
முதல்வர் வேட்பாளராக அன்புமணி முன்னிறுத்தப்பட்டதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அன்புமணி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுமக்கள், வழக்குரைஞர்கள், பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களிடம் கருத்துக்கேட்க உள்ளார். அதன்பின்னர், பாமக தேர்தல் அறிக்கை 2016, ஜனவரியில் வெளியிடப்படும் என்றார்.
பேட்டியின்போது, கட்சியின் மாநில துணை பொதுச் செயலர் சுப. அருள்மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News Source : DINAMANI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக