வெள்ளி, 1 செப்டம்பர், 2017

மருத்துவர் அனிதா..

மருத்துவர் அனிதா...

எனக்கு எப்போதும் தற்கொலைகள் மீது பரிதாபம் கிடையாது, விவேகமற்ற செயல், காரணம் ஆயிரம் இருந்தாலும் தற்கொலை அவசியமற்றது. அது ஒருபுறம் இருக்கட்டும், நடந்த தற்கொலைக்கான காரணம் ?

நேற்றிலிருந்து இதுவரை இந்திய குடிமகன்கள் பலரும் எழுதிய‌ ஆதங்கங்கள், ஆத்திரங்களை காண முடிந்தது, எல்லோருக்குமே யாரோ ஒருவர் மீது பலிபோட மட்டுமே நோக்கம் இருக்கிறது. நரேந்திரமோடி, எடப்பாடி பழனிச்சாமி, டாக்டர் விஜயபாஸ்கர், நிர்மலா சீத்தாராமன், ராதாகிருஷ்ணன், தமிழிசை , ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது,

எனக்கு எழும் கேள்வி இவர்களெல்லாம் யார் ? வானத்திலிருந்து குதித்து வந்தவர்களா ? இவர்கள் யாரும் வேற்றுகிரகத்தில் இருந்து வந்தவர்களா ? இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை கால்கடுக்க வரிசையில் நின்று வாங்கிய ஐநூறுக்கும், ஆயிரத்துக்கும் தேர்வு செய்த நீங்கள் குறைபடுவது நியாயமா ?

எவனோ ஒருவன் உங்களுடைய நியாயங்களுக்காக உரத்து குரல் கொடுப்பான், தன் குடும்பம், தன் சுகங்களை தியாகம் செய்து தெருவில் இறங்கி போராடுவான் அவனை உங்களின் பிரதிநிதியாக ஆக்கினால் உங்களுக்காக உங்கள் பிள்ளைகளுக்காக அவன் தேவையான இடங்களில், நேரங்களில் போராடுவான்,

நீங்கள் யாரை தேர்வு செய்தீர்கள், இதை எழுதிக்கொண்டு இருக்கும் இந்த நிமிடம் நீங்கள் தேர்வு செய்த 20 எம் எல் ஏக்கள் புதுச்சேரி சொகுசுவிடுதியில்தானே இருக்கிறார்கள் ? இதற்கு முன்பு கூவாத்தூரிலும் அவர்கள்தானே கூத்தடித்தார்கள் ? எங்கே ஆதங்கப்பட்ட நீங்கள் இவன்களில் ஒருவனை தெருவில் இழுத்துபோட்டு செருப்பால் அடியுங்கள் பார்ப்போம் முடியாது காரணம் உங்களுக்கு கொடுத்த ரூபாய் கணக்கை சொல்லி அங்கேயே அப்போதே உங்கள் வாயை அடைப்பான்.

அவர்கள்தானே உங்களின் பிரதிநிதி ? அவர்கள்தானே உங்களுக்காக பேச வேண்டும் ? எந்த தகுதியின் அடிப்படையில் அவர்களை தேர்வு செய்தீர்கள் ? இதற்கு முன்பு எப்போதாவது மக்களின் பிரச்சனைக்காக இவர்கள் போராடிய வரலாறு எதாவது ஒன்று உண்டா ?

நீங்கள் தேர்வு செய்த 39 பாராளுமன்ற உறுப்பினர்களை எந்த தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்தீர்கள் ? உங்களின் எந்த பிரச்சனைக்காக (நீட், காவிரி, மீத்தேன், கெயில்,கூடங்குளம்.....) இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை முறை நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறார்கள் ? எத்தனை முறை நாடாளுமன்ற அவையை முடக்கி இருக்கிறார்கள் ? எத்தனை முறை குறைந்தபட்சம் இந்த பிரச்சனைகள் பற்றி கருத்துரைத்திருக்கிறார்கள் ? எதுவுமே செய்யாத இவர்களில் எத்தனைபேர் இரண்டாவது, மூன்றாவது முறையாக நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க்கீறார்கள் ?

இந்த ஒரு அனிதாவல்ல, இன்னும் உங்களின் செல்லமகள்கள், மகன்கள் அது அனிதா, சுவிதா, கவிதா, மலையாண்டி, மாயாண்டி என்று எல்லோரும் சாக நீங்கள்தான் காரணம். குறையை மற்றவன் மீது சுமத்தி நீ யோக்கியன் என நடிக்காதே....

கா.சஞ்சய்காந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக