உட்கிடக்கைக்குள் குதிக்கும் முத்தன் பள்ளம்...
------------------------------------------------------------
நதியோடும் கரையோரம்
ஒரு ராகம் அலைபாயும்
அதிலே இரு உயிரே
தினம் கரையும்...
என்ற இந்தப் பாடலின் ராகமும், பாவமும் அதன் பின்னணியில் ஏதோ ஒரு சோகம் இழையோடுவதை உணர்த்துவதைப் போல, ஒரு வீரம் செறிந்த இனக்குழுவின் துயரார்ந்த வீழ்ச்சியினூடாக, அதன் சமூக அரசியல் வரலாற்றை, அதன் இயல்பான பழமையின் நீட்சியுடன் அதிநவீனத்தையும் இணைத்து "முத்தன் பள்ளம்" என்ற பெயரில் புதினமாக்கியிருக்கிறார் அண்டனூர் சுரா. இக்கதையினுள் வருகின்ற கதைசொல்லிக் கதாபாத்திரமாக வாசகர்களாகிய நாமும், அக்கதாபாத்திரத்திற்கான வழிகாட்டியாக இருக்கின்ற "போக்கிமான" என்கின்ற ஆண்ட்ராய்டு விளையாட்டு மென்பொருளாக அண்டனூர் சுராவாக இருப்பதாகவும், இவ்விரண்டு பாத்திரங்களும் சேர்ந்து ஒரு அழகிய அதிகாலையில் துவங்கும் பயணமானது, பகட்டான பதாகைகள் பொதிந்திருக்கின்ற பல கிராமங்களைக் கடந்து, அக்கிராமங்களின் பராக்கிரமங்களைச் சொல்லி சொல்லிக் கடந்து, பல்வேறு விவரணைகளை விவாதித்து முத்தன் பள்ளம் என்ற கிராம எல்லையைத் தொடுகின்றவரை ஒரு பகுதியாகவும், முத்தன் பள்ளத்தின் வரலாற்றை விளக்கி முடிப்பதோடு அக்கிராமத்திலேயே இறுதியாக போக்கிமான் பூச்சியைக் கண்டறிகின்றதாகவும் முடிப்பதை இரண்டாவது பகுதியாகவும் வைத்து கதையை நிறைவு செய்கிறார் அண்டனூர் சுரா.
இடம்பெயர்தல் அடிப்படையில் ஒரே ஒருவர் ஓரிடத்தில் குடிலமைத்துத் தங்குவதும், பின் அந்த இடம் பகுதியாவதும், பின்னர் குடும்பங்களாக வளர்ந்து ஒரு ஊராக உருவெடுப்பதும் என இதுபோன்ற ஆயிரக்கணக்கான கிராமங்கள் உற்பத்தியான கதைகள் ஏராளமாக இருக்கின்றன. அந்தந்த காலகட்டத்திற்கேற்ப, காரணகாரியங்களுக்கு ஏற்ப அக்கிராமங்களின் ஒரு பெயர் உருவாகி, அப்பெயர்களும் மாற்றம் கண்டுதான் வந்திருக்கின்றன. அந்த வகையில் பல படிநிலை மாற்றங்களைக் கடந்து இறுதியாக தற்போது நிலைப்பெற்றிருக்கின்ற முத்தன் பள்ளம் என்ற கிராமத்தை, இடம்பெயர்தல் அடிப்படையில் முதன்முதலாய் நிர்மாணித்தவன் "பாட்டன்" என்ற முத்திரையர்கள் இனக்குழுவைச் சேர்ந்தவன். இக்கதையின் கதைசொல்லியாகிய நாம் முத்தன் பள்ளத்தில் சந்திக்கின்ற சமகாலத் தோழன் வாயிலாக நம் மனக்கண் முன்னே பரந்து விரிவதில், பாட்டன் கால வரலாற்றுக்குள் எத்தனை தகவல் திரட்டல்கள், எத்தனை எத்தனை தேடல்களுடன், குரோதம், விரோதம், துரோகம், அடிமைத்தனம், விசுவாசம், பாசம், தந்திரம், போர், வெற்றி, தோல்வி என வாழ்வியல் தருகின்ற படிப்பினைகள் அத்தனையும் வெகுநேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. நாகரீக வளர்ச்சி உச்சத்திற்கு வந்துவிட்டதாக நம்பவைக்கப்படுகின்ற இவ்வேளையில் "முத்தன் பள்ளம்" என்ற இழிந்த நிலையிலிருக்கின்ற கிராமம் அரசாள்கிறவர்களின் பார்வையிலிருந்து புறக்கணிக்கப்படுகின்றதே என்ற ஆதங்கமும், இதைப்போன்ற எத்தனை எத்தனை கிராமங்கள் நாட்டில் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளனவோ என்கின்ற ஆதங்கத்தையுமே இக்கதையின் அடிநாதம் என்பதை விழிநீர் பொங்கச் செய்கின்ற அற்புதமான தன் எழுத்து நடையின் மூலமாக நிறுவியிருக்கிறார் அண்டனூர் சுரா.
சுரை இலையில் உணவுண்டால், சுரை இலை சூடான உணவில் வெந்து அவ்விலையும் உணவாகிக் கரைந்துபோவதைப் போல, இக்கதையைக் கடந்து முடிக்கையில் நம் மனமும் உருகிக் கரைந்து வெறுமையாகி நிற்கிறது. ஒரு எழுத்தாளன் என்ன செய்துவிட முடியும்...? "வயதான ஜோவும் தச்சனும்" என்கின்ற வாய்மொழிக் கதை ஒன்று, அதில், வயதான ஜோ என்பவரும் தன்னுடைய அண்டை வீட்டுக்காரனும் மிகுந்த நட்புடன் வாழ்ந்து வருகின்றார்கள். ஒரு சமயத்தில் அவர்கள் வீட்டருகே வருகின்ற கன்றுக் குட்டியானது, யாருக்குச் சொந்தம் என்கின்ற விவாதத்தில் இருவருக்கும் பிணக்கு ஏற்பட்டுவிடுகிறது. அதில் அண்டைவீட்டுக்காரன் தன் பண்ணைக்கும், ஜோ வீட்டிற்குமிடையே ஒரு பிளவான வாய்க்காலை வெட்டிவிடுகின்றான். அவ்வேளையில் ஒரு தச்சன் ஜோவை சந்தித்து உணவு கேட்க வருகின்றான். அவனுக்கு உணவளித்த ஜோ, "நீதான் தச்சனாயிற்றே, எதிரே ஒரு பண்ணை இருக்கிறது பார்த்தாயா, அது என் கண்ணில் படாதபடிக்கு ஒரு உயரமான வேலி ஒன்றை அமைத்துவிடு" என்கிறான். தச்சனும் சரி என்று ஒப்புக்கொண்டு வேலையைத் துவக்குகின்றான். வேலி அமைப்பதாகச் சொன்ன தச்சன், அண்டைவீட்டுக்காரன் வெட்டிய கால்வாயையும் ஜோ வீட்டையும் இணைக்கும் பாலம் ஒன்றை அமைத்து, யாரும் விழுந்துவிடாதபடிக்கு பாலத்தை கைப்பிடிகளோடு நேர்த்தியாக அமைக்கின்றான். இப்போது அண்டைவீட்டுக்காரன் அப்பாலத்தின் வழியாக நடந்துவந்து ஜோவை கட்டி அணைப்பதோடு, அந்தக் கன்றுக்குட்டி உன்னுடையதான் என்று சொல்லி, நாம் என்றும்போல நண்பர்களாக இருக்கலாமே என்கிறான். அப்போது தச்சன் ஜோவிடம், "நான் போய்வரட்டுமா" என்கிறான். அதற்கு ஜோ, "இங்கேயே இரு தச்சனே, நான் உனக்கு வேலைகள் தருகின்றேன்" என்கிறான். "இல்லை ஜோ, எனக்கு நிறைய பாலம் கட்டுகின்ற வேலைகள் இருக்கின்றன" என்றவாறு தச்சன் அங்கிருந்து கிளம்புகின்றான்.
அச்த தச்சனைப் போலத்தான், இக்கதையப் புனைந்த அண்டனூர் சுராவும். மனித குலத்தின் மீதான தீராத அன்பும், அக்கறையும் மட்டுமே இவ்வாறான இலக்கியப் பால ங்களை எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி கட்டமைத்திட முடியும். மகத்தான எழுத்தாளர்கள் வரிசையில் தனக்கொரு இடத்தை இப்புதினத்தின் வாயிலாக அண்டனூர் சுரா தடம் பதிக்கின்றார் என்று தயக்கமின்றிச் சொல்லலாம். புத்தகம் முழுக்க தழுதழுக்க வைக்கின்ற வார்த்தைகளைத் தழுவிக்கடந்த பின்னர் நம் அனைவரையும் முத்தன் பள்ளங்களை நோக்கிப் பயணிக்க வைக்கின்ற நம் தோழன் அண்டனூர் சுராவிற்கு நன்றி அறிதலோடு வாழ்த்தையும் பகிர்கின்றோம்.
நன்றி : தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக