வியாழன், 30 நவம்பர், 2017

முரண்பாடுகளின் மொத்த உருவமா தமிழக அரசு நிர்வாகம் ?



முரண்பாடுகளின் மொத்த உருவமா தமிழக அரசு நிர்வாகம் ?

நேற்று தஞ்சாவூரில் தமிழக அரசின் ஏற்பாட்டில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இப்படி குறிப்பிடுகிறார்

 // எட்டாம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட தனஞ்சய முத்தரையரின் பெயரையே தன் பெயராக கொண்டு உருவானது தஞ்சை என்றும்தனஞ்சயன் ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என மாறியது என்றும் கூறப்படுகிறது.//


இதே கருத்துதான் செல்வி.ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தஞ்சையில் கூட்டிய "எட்டாவது உலக தமிழ் மாநாட்டு மலரிலும்" இடம் பெற்று இருக்கிறது.

ஆனால் தஞ்சை மாவட்ட அரசின் அதிகாரபூர்வ இணையதளம் (http://www.thanjavur.tn.nic.in/history.htmlமட்டும் கற்பனையான அரக்கன் கதையை அளந்துக்கொண்டு இருக்கிறதுஇது தொடர்பாக பலமுறை நேரில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இன்றைய தேதிவரை எந்த மாற்றமும் அந்த இணையதளத்தில் செய்யப்படவில்லை....

ஆக தமிழக அரசின் தலைமைப்பொருப்பில் இருப்பவர்கள் சொல்வது ஒன்றாகவும் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் மாவட்ட நிர்வாகம் சொல்லும் வரலாறு ஒன்றாகவும் இஒருக்கிறது இதுதான் தமிழக அரசின் லட்சணம் என்பதுதான் வேதனையாக இருக்கிறது.




கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்


வெள்ளி, 24 நவம்பர், 2017

குழ.செல்லையா

குழ.செல்லையா அவர்களை பற்றி இன்றைய செய்திதாள்கள், இணையதளங்கள் வெளியிட்ட செய்திகளின் தொகுப்பு :

தினமணி

தமிழ் ஹிந்து


சொல்லரசு குழ.செல்லையா...

சொல்லரசு குழ.செல்லையா...

24.11.2017 05:57

ஒரு மனிதனின் மரணத்தில் தெரியும் என்பார்கள் அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தம், ஆயிரமாயிரமாய் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியவர்களை காணும்போது அப்படி ஒரு நல்வாழ்க்கையை சொல்லரசுவும் வாழ்ந்திருப்பதை உறுதிபடுத்தியது.

1971 இன்றுபோல எந்த தொழில்நுட்ப வசதியும் இல்லாத காலகட்டம், பொது போக்குவரத்தும் பெரிய அளவில் இல்லாத காலம், அந்த காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லையில் துவங்கி தஞ்சை மாவட்டத்தின் கடற்கரை மற்றும் உள்பகுதி முழுவதும் பரவி இருந்த பெரிய தொகுதியான பேராவூரணி தொகுதி உட்பட தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற தேர்தல்.

35 வயதே நிரம்பிய இளைஞன் ஒருவன் திமுகவின் தீவிர தொண்டன், ஆர்வத்தோடு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்கிறான் கட்சியில், கடைந்தெடுத்த அயோக்கியர்களின் கூடாரத்தில் இள வயதுகாரனுக்கு, அதுவும் ஒரு அறியப்படாத, அரசியல் அரிசுவடி அறியாத சாதியில் பிறந்தவனுக்கு சீட்டா...? என்று எள்ளிநகையாடி வாய்ப்பு மறுத்து அரசியலில் கரைகண்ட கிருஷ்ணமூர்த்தி தேவரை வேட்பாளராக அறிவிக்கிறது திமுக. வெகுண்டெழுந்த அந்த இளைஞன் அப்போதே தீர்மானிக்கிறான் "தான் தான் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர்" என்று.

சுயேட்சையாக களம் காண தீர்மானித்தாகிவிட்டது, அதிர்ஷ்டமான "சிங்கம்" சின்னமும் கிடைக்கிறது.(இதுதான் சிங்கம் சின்னம் முத்தரையர் சின்னமாக மாறிய தருணம்)  ஓய்வில்லாமல் ஒவ்வொரு கிராமமாக சுற்றி அவ்வளவு பெரிய தொகுதி முழுவதும் சுற்றி எல்லா மக்களையும் நேரில் சந்தித்து ( வேறு வழியே இல்லை நேரில் மட்டுமே சந்திக்க முடியும்) தன்னுடைய கணீர் குரலெடுத்து பேசி வாக்கு கேட்க, அறியாமையும், படிப்பறிவும் இல்லாத மக்களுக்குள் அந்த பேச்சுக்கள் ஏதோ தீப்பொறியை பற்றவைக்க 2020 வாக்குகள் வித்தியாசத்தில் "பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர்" ஆக தேர்வாகிறார் திருமிகு. சொல்லரசு குழ.செல்லையா...!

இருந்தாலும் தனக்கு வாய்ப்பு மறுத்த கட்சிக்கு பாடம் புகட்ட மறக்கவில்லை இந்த மாணிக்கம், திமுகவுக்குள் உட்கட்சி குழப்பம் ஒன்று வருகிறது திமுக பொருளாளர் எம்.ஜி.ஆர் கட்சியின் தலைவர்கள் அனைவரும் தங்கள் சொத்துகணக்கை காட்ட சொல்கிறார், சொத்துக்கணக்கை காட்டுவதென்றாலே அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு அலர்சியாகிறது, பூசல் முற்றி எம்.ஜி.ஆர் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்.

புதிதாக அண்ணாவின் நாமம் தாங்கி "அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை" தோற்றுவிக்கிறார் எம்.ஜி.ஆர் அவரோடு (அவரையும் சேர்த்து) 4 சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவில் இருந்து வெளியேறுகிறார்கள், எம்.ஜி.ஆர் குழ.செல்லையாவையும் கட்சிக்கு அழைக்கிறார் நேராக கட்சிக்குள் சென்றிருக்க முடியும். ஆனால் அப்படி செய்யாமல் ஒரு காரியம் செய்கிறார், திமுகவோடு பேச்சுவார்த்தை நடத்துகிறார் "உங்கள் கட்சிக்கு திருப்பி வருகிறேன் என்று" உட்கட்சி குழப்பம் மிகுந்த அந்த நேரத்தில் ஒரு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் கட்சிக்கு வருவது நல்லதுதான் என்று அரசியல் சாணக்கியர் கலைஞர் கருதுகிறார், சரியென சம்மதிக்கிறார், இவரும் கட்சியில் இணைகிறார். அடுத்த நாளே "திமுக சட்டமன்ற உறுப்பினர் அதிமுகவில் இணைந்தார்" என நாளேடுகள் செய்தி வெளியிட அரசியல் சாணக்கியர் முகத்தில் ஈ ஆடவில்லை, அதனால்தான் எம்.ஜி.ஆர் குழ.செல்லையாவை "எல்லாருக்கும் தலையில மூளை, செல்லையாவுக்கு மட்டும் உடம்பெல்லாம் மூளை" என்று. அப்படி மூளையோடு இருப்பவனை யார்தான் சீராட்டி பாராட்டி வைத்துக்கொள்வார்கள் ? அதனால்தான் அரசியல் அரங்கில் அவரால் கோலச்ச முடியவில்லை...

அவரோடு அதிமுகவின் முதல் படிவத்தில் கையெழுத்து போட்ட 12 பேரில் எம்.ஜி.ஆருக்கும் குழ.செல்லையாவுக்கும்தான் கல்வி நிறுவனங்கள் கிடையாது என்பதுதான் குழ.செல்லையாவின் சம்பாத்தியம்.

1906 ஆம் ஆண்டு முத்துராஜா மஹாசன சங்கம் தொடங்கி இருந்தாலும், சில மாநாடுகள் பல இடங்களிலும் நடத்தி இருந்தாலும், தமிழகமே அதிரும் வண்ணம் ஒரு பிரமாண்டமான முத்தரையர் மாநாட்டை நடத்தி அதில் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரை மேடையில் ஏற்றி "முத்தரையர்களுக்கு" இன்றுவரை தொடரும் அமைச்சரவை பங்களிப்பை உறுதி செய்த பெருமையும் திரு.குழ.செல்லையாவையே சேரும்.

எம்.ஜி.ஆர் அதிமுக தொண்டர்களை முட்டாள்களாக வைத்திருக்க எண்ணி தனது கட்சி தொண்டர்கள் அனைவரும் கட்சியின் சின்னத்தை கையில் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கிறார், இயல்பிலேயே சுயமரியாதை கொண்டவர் இதனை எதிர்த்து கட்சியில் இருந்து வெளியேறுகிறார். பின்னர் "தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தில்" தலைவராக சிறிதுகாலம் பணியாற்றுகிறார்.

2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அன்றைய ஆளும்கட்சியான திமுக ஒரு கூட்டணி அமைக்கிறது, தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு சாதிசங்கம் கூட்டணியில் இடம்பெருகிறது, அதற்கு முன்புவரை தேர்தல் கூட்டணி என்றாலே அது அரசியல் கட்சிகளுக்குள் மட்டுமே தொகுதி பங்கீடாக இருக்கும் அன்றைக்கு திமுக அமைத்த கூட்டணியில் முத்தரையர்களின் அரசியல் கட்சியாக இருந்த கு.ப.கிருஷ்ணனின் "தமிழர்பூமியும்" குழ.செல்லையாவின் "தமிழ்நாடு முத்தரையர் சங்கமும்" அங்கம் வகிக்கிறது.

அந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம்வகித்த தமாகாவின் திருஞானசம்பத்தம் (முத்தரையர்) எதிர் வேட்பாளர் அவரிடம் 28659 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைகிறார்.

தொடர்ச்சியாக அரசியலில் பயணப்பட்டாலும் பெரிதாக எதையும் அவருக்காகவோ ,அவர் சார்ந்த சாதிக்காகவோ சாதித்துவிட முடியவில்லை அதே நேரம் அவரை தவிர்த்துவிட்டு முத்தரையர் வரலாற்றை எழுதிவிடவும் முடியாது.

நினைவுகளுடன்...

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்









 









   

செவ்வாய், 21 நவம்பர், 2017

தமிழக அரசின் புதிய பாடத்திட்ட வரைவு

தமிழக அரசின் புதிய பாடத்திட்ட வரைவு இந்த இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள், இதில் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் கலை மற்றும் கட்டிட கலை (Art and architecture TamilNadu) என்ற தலைப்பில் "பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகர மற்றும் நாயக்கர்கள்" அதனோடு சேர்த்து "குடைவரை கோவில்கள்" என்று பாடதிட்டத்தில் இணைக்க இருக்கிறார்கள், இதில் பல்லவர், சோழர், பாண்டியர், இவர்களுக்கு சற்றும் குறைவில்லாத பேரரசாக வீற்றிருந்த "முத்தரையர்கள்தான்" இந்த குடைவரை கோவில்களை எடுப்பித்தவர்கள், மேற்சொன்ன அரச மரபினரை பெயரோடு குறிப்பிடும்போது "முத்தரையர்" மட்டும் , குடவரையாக சுருங்கி போனதுதான் மர்மம் புரியவில்லை....
அதேபோல வட இந்தியாவில் அத்தனை இராஜ வம்சங்களையும் இந்த பாடபுத்தகத்தில் இடம்பெற செய்யும்வண்ணம் இந்த வரைவு இருக்கிறது, ஆனால் மருத்துக்காககூட "முத்தரையர்" பற்றி இல்லை...
இதுதொடர்பான உங்கள் கருத்துக்களை (நாகரீகமான முறையில் வலியுறுத்தலாக)http://tnscert.org/webapp2/tn17syllabus.aspx
இந்த இணையதளத்தில் இருக்கும் "கருத்து கேட்பு படிவத்தில்" பூர்த்தி செய்யுங்கள்.
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

திங்கள், 6 நவம்பர், 2017

விமான நிலையம்

விமான நிலையம்

வசதி படைத்தவன் முதல் வசதி படைத்துவிட வேண்டும் என்று பாலைவன நாடுகளுக்கு பறப்பவன்வரை கண்களில் கனவுகளோடு ஏறி இறங்கும் விமானங்களையே ஆச்சர்யமோடு பார்க்கும் அழகிய இடம் "விமான நிலையம்" ஒவ்வொரு விமான நிலையங்களுக்கும் பின்னால் சில கண்ணீர் கதைகள் இருக்கும், ஆசையாசையாய் கட்டிய வீடுகள் இருந்த இடங்களில் விமான சக்கரங்கள் சுகமாய் ஓடிக்கொண்டு இருக்கும்.

விமான நிலையம் என்பது ஒவ்வொரு நாட்டின் அடையாளம், ஏறி இறங்கும் விமானங்களின் எண்ணிக்கையே அந்நாட்டின் செல்வசெழிப்பை பறைசாற்றும். விமான நிலையம் என்பது ஏதோ ஒரு ஊரின் சந்தைமடமோ, பேருந்து நிலையமோ அல்ல....

அப்படியான விமான நிலையத்துக்கு ஒரு பெயரை சூட்டினால்  அது உலகளவில் கவனத்தை பெரும், அப்படி ஒரு விமான நிலையத்துக்கு "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" என்று பெயர் சூட்டினால் அது வரலாற்றில் இரட்டிப்பு செய்யப்பட்ட ஒரு மாமன்னருக்கு, அவரின் வழிதோன்றலாய் மாபெரும் ஜனசமுத்திரமாய் இருக்கும் "முத்தரையர்" மக்களுக்கு உலகளவில் மிகப்பெரிய அங்கிகாரம் கிடைத்துவிடும்.

இருக்கும் எல்லா விமான நிலையங்களுக்கும் ஒரே பெயரை சூட்டிவிட முடியுமா ? அது நடைமுறை சாத்தியமா ? கோரிக்கை ஒன்றை / விருப்பம் ஒன்றை தெரிவிக்கும் முன்பு அறிவு சார்ந்த மக்களிடம் கருத்துரு பெறாமல் தான் தோன்றிதனமான கோரிக்கைகளுக்கு எவ்வளவு பலம் கிடைத்துவிடும் ?

திருச்சி விமான நிலையத்துக்கு "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" பெயரை சூட்ட வேண்டும். இது ஒரு கோரிக்கை இந்த கோரிக்கைக்கு வலு சேர்க்க பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ஒரு அறிக்கைவிட்டார், அத்தோடு முடிந்துவிட்டது, இதற்காக அடுத்தகட்ட திட்டமென்ன ? இந்த கோரிக்கைக்காக மக்கள் ஆதரவு திரட்டுதல், அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துதல், ஒத்த கருத்தினை உருவாக்குதல் எதுவுமே எனக்கு தெரிந்து இதுவரை கிடையாது, திருச்சி விமான நிலையத்துக்கு வேறு எந்த பெயரையும் சூட்டகோரி இதுவரை எந்த கோரிக்கையும் எழுந்ததாக தெரியவில்லை, ஆக பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் ஆட்சிபரப்புக்கு உட்பட்ட, அருகாமை விமான நிலையமான திருச்சி விமான நிலையத்துக்கு பெயர் சூட்டகோருவது ஒரு நியாயமான கோரிக்கை..

அதேபோல மதுரை விமான நிலையத்துக்கும் "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை சிலர் முன் வைக்கிறார்கள், அது எவ்வளவு தூரம் சரியான கோரிக்கை, விமான நிலையம் அமைக்க நிலம் கொடுத்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் "முத்தரையர்கள்" என்பதனால் இந்த கோரிக்கைக்கு ஒரு வலு சேர்கிறது, ஆனால் "பெரும்பிடுகு முத்தரையர் பெயரை விடுத்து"  "கண்ணப்பநாயனார் விமான நிலையம்" என்று பெயர் சூட்ட கோரினால் இரு விமான நிலையங்களுக்குமான கோரிக்கையில் ஒரு வித்தியாசம் இருக்கும், அதேபோல ஹிந்துத்துவா பாஜகவின் கவனத்தையும் எளிதில் பெற முடியும்.

இதே மதுரை விமான நிலையத்துக்கு "முத்துராமலிங்க தேவர்" பெயரினை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை "முக்குலத்து மக்கள் / அமைப்புகளையும் தாண்டி" இந்தியாவின் ஆட்சி அதிகாரங்களின் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் சுப்பிரமணியசுவாமி, தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் போன்றோரும் முன்வைக்கிறார்கள், ஒருவேளை நாளை திமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்தால் இந்த கோரிக்கையை ஒட்டி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி "முத்துராமலிங்க தேவர்" பெயரினை சூட்டிவிடுவார்கள்.

அதேபோல மதுரை விமான நிலையத்துக்கு பள்ளர் சமூகமும் "தியாகி இம்மானுவேல் சேகரனார்"  பெயரினை வைக்க கோரிக்கை வைத்திருக்கிறது, அது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பது தெரியவில்லை..

ஆனால்...

கடந்தகால வரலாற்றை பார்த்தால் பள்ளர் சமூகத்தை குறைத்து மதிப்பிட முடியாது 1997 ஆம் ஆண்டு வீரர் சுந்தரலிங்கனார் பெயரை போக்குவரத்து கழகத்துக்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மிகப்பெரிய போராட்டங்களும் / கலவரங்களும் நடந்து தென் தமிழகமே பற்றி எறிந்தது, இந்த போராட்டத்தின் விளைவாகவே அன்று மாவட்ட தலைநகரங்கள் (திருச்சி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மாவட்டம் உட்பட), போக்குவரத்து கழகங்களின் பெயர்களை அதிரடியாக நீக்கியது அன்றைய திமுக அரசு... ஆக பள்ளர் சமூகத்தின் கோரிக்கை ஏற்க்கப்படாத பட்சத்தில் அது வேறுவிதமான போராட்டத்தை அந்த சமூகம் முன்னெடுக்கவே வாய்ப்புகள் அதிகம்.

ஆக போட்டியே இல்லாத திருச்சி விமான நிலையமா ? போட்டிகளோடு கலவரம் சூழ்ந்த மதுரை விமான நிலையமா ? எதற்கான போராட்டத்திற்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும், கோரிக்கையினை வலுப்படுத்த வேண்டும் ?

விவாதியுங்கள்

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்