ஞாயிறு, 10 அக்டோபர், 2010

தினமலர் செய்தி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளிகள் விட்டுச்சென்ற பயங்கர ஆயுதங்களை போலீஸார் மீட்டுள்ளனர்.



ஆலங்குடி, வடகாடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூன்றாவது நாளாக நேற்றும் பதட்டம் நீடித்ததால் பஸ்கள் ஓடவில்லை.புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் கடந்த ஏழாம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். மூகமூடி அணிந்த மர்ம நபர்கள் மூன்றுபேர் பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து அவரை வெட்டி சாய்த்துவிட்டு காரில் தப்பிச் சென்றனர்.கொலையாளிகள் விட்டுச்சென்ற மாருதி-800 கார் பட்டுக்கோட்டை அடுத்த நடுவிக்கோட்டையில் ஏற்கனவே மீட்கப்பட்டது. அவர்கள் விட்டுச் சென்ற ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளது.கறம்பக்குடி அருகில் உள்ள குமரகுளத்தில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் கிடப்பதாக அப்பகுதியினர் கொடுத்த தகவலின்பேரில், அங்கு விரைந்த கறம்பக்குடி போலீஸார் குளத்தின் கரையில் கிடந்த அரிவாள், பட்டாக்கத்தி, பர்தா மற்றும் பெட்ரோல் குண்டுகள் தயார் செய்வதற்கான பாட்டில், பிளாஸ்டிக் டப்பாக்கள் ஆகியவற்றை மீட்டனர்.



ஆயுதங்களில் ரத்தக்கறை படிந்திருந்ததால் அவை வெங்கடாசலம் கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளிகள் விட்டுச்சென்ற ஆயுதங்களாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.கார் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்ட இடங்களை வைத்து பார்க்கும்போது வடகாட்டிலிருந்து தப்பிச்சென்ற கொலையாளிகள் வாணத்தன்காடு, கருக்காக்குறிச்சி வழியாக பட்டுக்கோட்டைக்கு தப்பிச்சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.கொலையாளிகளை கைது செய்வதற்காக இன்ஸ்பெக்டர்கள் பாலகுரு, பன்னீர்செல்வம், தமிழ்மாறன், பாலமுருகன் ஆகியோர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடர்கிறது.இதற்கிடையே வெங்கடாசலம் படுகொலையைத் தொடர்ந்து ஆலங்குடி, வடகாடு மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் மூன்றாவது நாளாக நேற்றும் பதட்டம் நீடித்தது.



ஆலங்குடி அடுத்த கல்யாணராமபுரத்தில் நேற்று அதிகாலையில் 15 பேர் கொண்ட கும்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ரோட்டோரம் இருந்த மரத்தை வெட்டி ரோட்டின் குறுக்கே போட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீஸார் அந்த மரத்தை அகற்றினர். ஆலங்குடி, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் மூன்றாவது நாளாக நேற்றும் பஸ்கள் ஓடவில்லை. இயல்புநிலை திரும்பியபின்னரே அப்பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் சூழ்நிலை உள்ளது.ஆலங்குடி தாலுக்கா முழுவதும் மூன்றாம் நாளாக நேற்றும் அரசு பள்ளிகள், தனியார் கல்லூரிகள், தனியார் இன்ஜினியரிங் கல்லூரி என கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட வில்லை.இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். "கொலையாளிகளை கைது செய்யும் வரை இயல்புநிலை திரும்புவது சந்தேகம்' என, போலீஸார் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக