ஞாயிறு, 27 மார்ச், 2011

THANKS TO DINAMALAR

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து பல்வேறு கட்சியினர், சுயேச்சை என நேற்று வரை 115 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
நேற்று பேராவூரணி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளர் கே.மகேந்திரன் (36), உதவி தேர்தல் அலுவலர் தருமையனிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இவருக்கு திருமணமாகவில்லை. இவரது தந்தை கல்யாணசுந்தரம், தாய் கமலா. பி.ஏ., வரை படித்துள்ள இவர் தென்னை விவசாயம் செய்து வருகிறார். வேளாளர் இனத்தைச் சேர்ந்த இவர் பட்டுக்கோட்டை அடுத்த தாமரங்கோட்டை வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் மாணவர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளராக இரண்டு முறை இருந்தார். தற்போது, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளராக செயல்படுகிறார்.
பேராவூரணி சட்டசபை தொகுதியில் போட்டியிட சுயேச்சையாக முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனர் ஆர்.விஸ்வநாதன் மகன் ஆர்.வி.பரதன் தஞ்சை துணை கலெக்டர் ரவிகுமாரிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இவர் சங்கத்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பி.ஏ., பி.எல்., படித்துள்ளார். தவிர, பல சுயேச்சைகள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
நேற்றுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்ற நிலையில் தஞ்சை தொகுதிக்கு தி.மு.க., சார்பில் உபயதுல்லா, அ.தி.மு.க., சார்பில் ரெங்கசாமி என 14 பேர், ஒரத்தநாடு தொகுதிக்கு தி.மு.க., சார்பில் மகேஷ்கிருஷ்ணசாமி, அ.தி.மு.க., சார்பில் வைத்திலிங்கம் என பத்துப்பேர், திருவையாறு தொகுதியில் தி.மு.க., சார்பில் கல்லணை செல்லக்கண்ணு, அ.தி.மு.க., சார்பில் ரெத்தினசாமி என 12 பேர், பாபநாசத்தில் காங்கிரஸ் சார்பில் ராம்குமார், அ.தி.மு.க., சார்பில் துரைகண்ணு என 15 பேர், கும்பகோணத்தில் தி.மு.க., சார்பில் அன்பழகன், அ.தி.மு.க., சார்பில் ராமராமநாதன் என 15 பேர், திருவிடைமருதூரில் தி.மு.க., சார்பில் கோவி.செழியன், அ.தி.மு.க., சார்பில் பாண்டியராஜன் என 12 பேர், பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் சார்பில் ரெங்கராஜன், தே.மு.தி.க., சார்பில் செந்தில் என 16 பேர், பேராவூரணியில் காங்கிரஸ் சார்பில் மகேந்திரன், தே.மு.தி.க., சார்பில் அருண்பாண்டியன் என 21 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மாவட்ட அளவில் எட்டு தொகுதியிலும் சேர்த்து 115 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இருந்தும், 28ம் தேதி நடக்கும் வேட்பு மனு பரிசீலனை, 30ம் தேதி மனுவை திரும்ப பெறுதல் ஆகிய நாட்களில் இதில், மாற்று வேட்பாளராக தாக்கல் செய்தவர், அதிருப்தி வேட்பாளர், ஒரே வேட்பாளர் இரண்டாவது மனுத்தாக்கல் என சில மனுக்கள் தள்ளுபடி அல்லது திரும்ப பெறப்பட்டபின் களத்தில் நிற்கும் வேட்பாளர் பட்டியல், சின்னத்துடன் வெளியிடப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக