வெள்ளி, 16 செப்டம்பர், 2011

தி.மு.க வில் வெடிக்கும் கோஷ்டி மோதல்

அ.தி.மு.க. ஆட்சியில், தமிழகத்தின் முதல் இடைத்தேர்தலைச் சந்திக்க திருச்சி மேற்குத் தொகுதி தயாராகி வருகிறது. ‘அக்டோபர் 13’ என்று தேர்தல் தேதியும் அறிவிக்கப்ப ட்ட நிலையில், தொகுதியில் கட்சிகளின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்று அலசினோம்.

அமைச்சராகவும் தி.மு.க. மாவட்டச் செயலாளராக அதிகாரத்தோடு வலம் வந்த கே.என். நேருவைத் தோற்கடிக்கப்பட்ட தொகுதி என்பதால் இங்கே போட்டியிட அ.தி.மு.க.வினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. கட்சிக்கு உழைத்தவர்கள், கட்சிப் பொறுப்புகளில் உள்ளவர்கள், பணம் இருப்பவர்கள், ஏற்கெனவே போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர்கள், சீனியர்கள், என பல்வேறு தகுதிகளையும் ஆளாளுக்குத் தாங்களே நிர்ணயித்துக் கொண்டு சீட்டுக்கு மல்லுக்கட்டுகிறார்கள். போதாக்குறைக்கு ‘சசிகலா இந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறார்’ என்ற தகவல் வேறு கட்சிக்காரர்களை மிரட்டுகிறது.
தி.மு.க.விலோ நிலைமை ரொம்பப் பரிதாபமாக இருக்கிறது. யாருக்குமே தேர்தலில் போட்டியிட தைரியம் இல்லை என்பதுதான் உண்மை. ஏற்கெனவே போட்டியிட்டுத் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் நேரு தற்போது ஜெயிலில் இருக்கிறார். அவர் வெளியே வருவாரா? அவருக்குத்தான் சீட் கொடுக்கப்படுமா? சீட் கொடுத்த பிறகு மீண்டும் பிடித்து உள்ளே போட்டால் என்ன செய்வது? என்று பல்வேறு கேள்விகள் கட்சிக்காரர்கள் மனதில் அலையடித்துக் கிடக்கிறது. வெகு ஆர்ப்பாட்டமாக அவர்கள் ஆரம்பித்த மனு கொடுக்கும் திருவிழாவும் ஓய்ந்து போய்க் கிடக்கிறத

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க.வில் சீட் பெறுபவர் பலியாடுதான் என்பது தி.மு.க.வினர் அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது. அதிலும் முன்னாள் அமைச்சர் நேரு, மு ன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், நேருவின் தம்பி ராமஜெயம், அமைச்சரின் வலதுகரமான காஜாமலை விஜய், துணை மேயரும் நகரச் செயலாளருமான அன்பழகன் என முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து ஜெயில் நோக்கி வரிசை கட்ட, தொண்டர்கள் மனதளவில் ரொம்பவும் சோர்ந்து போய்விட்டனர். கூடவே, ‘அஞ்சு வருசம் ஆட்டம் போட்டாங்கல்ல அனுபவிக்கட்டும்’ என்ற மனநிலையும் தி.மு.க. தொண்டர்களிடம் இருப்பதைக் காண முடிகிறது.

கடந்த ஐந்து வருடங்கள் அ.தி.மு.க. அமைதியாக அரசியல் செய்தது போலவே நாமும் செய்யலாம் என்றே தி.மு.க.வில் பலரும் நினைக்கிறார்கள். இரண்டாம் கட்டத் தலைவர்களும் அந்த முடிவுக்கு வந்தே விட்டார்கள்.

இதுதான் இப்படி என்றால், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தி.மு.க.வின் தேர்தல் பணிக்குழுவில் உள்ளோரின் பட்டியலைப் பார்த்த தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்து விட்டனர். காரணம், அதில் குறிப்பிடப்பட்டிருந்த மாவட்ட துணைச் செயலாளர் அம்பிகாபதி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.என். சேகரன் மாவட்டப் பொருளாளர் கே.கே.எம். தங்கராசா ஆகிய மூவருமே கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான்.

அதிகாரத்தில் இருந்தபோது நேருவை எதிர்த்து அரசியல் செய்து வந்த முத்தரையர் இனத்தைச் சேர்ந்த அமைச்சர் செல்வராஜின் தரப்பில் ‘நேரு ஜெயிலுக்குப் போன நிலையிலாவது எங்களுக்கு வாய்ப்புத் தந்திருக்கக் கூடாதா?’ என்ற கேள்வியுடன் சுணங்கிப் போயிருக்கின்றனர். வெடித்திருக்கும் கோஷ்டி மோதலால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பள்ளக்காடு ஒன்றிய கவுன்சிலர் ராஜவேலு “இது திராவிட முன்னேற்றக் கழகமா? இல்லை கள்ளர் பேரவையா? ஒரு தகுதியான முத்தரையர் கூடவா இங்கு இல்லை? முன்னாள் அமைச்சரும், நேருவுக்கு முந்தைய மாவட்டச் செயலாளருமான செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. மாயவன் ஆகியோர் தி.மு.க. தலைமையின் நினைவில் இ ல்லையா? முத்தரையர் இனத்தை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்திருக்கும் தி.மு.க. வுக்கு நாங்கள் ஒரு பாடம் புகட்டுவோம்’’ என்றார்.

தவிரவும், அ.தி.மு.க.வை எதிர்த்து தேர்தல் வேலை செய்தால் நம் மீதும் ஏதேனும் வழக்கு வந்துவிடுமோ என்ற அச்சமும் தி.மு.க.வினரைத் தொக்கி நிற்கிறது.

காங்கிரஸ் வழக்கம்போல் கண்ணைக் கட்டிவிட்ட பூனை போல் மருண்டு போய் நிற்கிறது. மொத்தத்தில் திருச்சி மேற்குத் தொகுதியின் இடைத்தேர்தலில் தி.மு.க. தயவில் எந்த சிரமமும் இல்லாமல் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்றே தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக