சனி, 28 ஜூலை, 2012

தொழிலாளி கொலையில் 4 பேர் கைது போலீஸ் நிலையம் முற்றுகை

மேட்டுப்பாளையம், : மேட்டுப்பாளையம் அருகே விவசாய தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி என்ற பாலாஜி(33). விவசாயி. இவரது தோட்டத்தில் நீலகிரி மாவட்டம் சோலூர்மட்டத்தை சேர்ந்த வீராசாமி(30) கடந்த சில மாதங்களாக குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 25ம் தேதி மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் விழாவை காண சென்ற வீராசாமி மர்மமான முறையில் இறந்தார். அவரது கழுத்தில் காயம் இருந்தது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் ஜோதிகுமார் என்பவர் புகார் செய்தார். வீரா சாமியை பாலஜி,அவரது தம்பி ஈஸ்வரன், பாலமுருகன், டிரைவர் சுரேஷ் ஆகியோர் தாக்கினர் என்று புகாரில் அவர் கூறியிருந்தார். வீராசாமியை கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் கோவை எஸ்.பி,(பொறுப்பு) பொன்னி(ஈரோடு), நீலகிரி எஸ்.பி,நிஜாமுதீன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். வீராசாமி சாவுக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் தர வேண்டும், வீராசாமியின் மனைவிக்கு அரசு வேலை தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். எஸ்.பி. நிஜாமுதீன் கூறுகையில், வீராசாமி மரணத்திற்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு அவரது மனைவிக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வருவாய்துறை மூலம் பரிசீலிக்கப்படும் என்றார். அதை ஏற்ற உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த கொலை தொடர்பாக விவசாயி முத்துசாமி என்கிற பாலாஜி(33) அவரது தம்பி ஈஸ்வரன்(31), சதீஷ்குமார்(20), பாலசுப்பிரமணியம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை வழக்கு, ஆயுதம் வைத்து தாக்குதல், கூட்டுகொலை முயற்சி, வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை, கொங்குநாடு முன்னேற்ற சங்கம்,முத்தரையர் சங்கம், சோளிய வேளாளர் பேரவை ஆகியவற்றை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் கொங்குநாடு முன்னேற்ற சங்க அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். வீராசாமி கொலையில் வன்கொடுமை சட்டம், ஆயுதம் ஏந்தி தாக்குதல் ஆகிய பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும், உரிய விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த மனுவையும் கொடுத்தனர்.
NEWS FROM : DINAKARAN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக