இரும்புத்தாது சுரங்க ஊழல் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாயைக் குவித்து அந்தப் பண பலத்தைக் கொண்டு, மாநில அரசையே தீர்மானிக்கும் சக்தியாக மாறியவர்கள் கர்நாடகத்தின் ரெட்டி சகோதரர்கள். அவர்களுடைய சுரங்க ஊழலோடு ஒப்பிடும் அளவிற்கு தமிழ்நாட்டில் கிரானைட் ஊழல் நடைபெற்றுள்ளதாகத் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்றுள்ள கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்திருப்பது எதிர்க்கட்சிகளோ, சுற்றுச்சூழல் ஆர்வலர்களோ அல்ல. மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய சகாயம், எழுத்து மூலமான அறிக்கையின் மூலம் இதை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மே 1ம் தேதி, மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி, செம்மினிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கிரானைட் குவாரிகளில் அதிரடி சோதனை நடத்தினார் சகாயம்.
மே 17ம் தேதி, ஆர்.டி.ஓ., டி.ஆர்.ஓ. தலைமையில் குழு ஒன்றை அனுப்பி, அக்குவாரிகளில் மீண்டும் சோதனைநடத்தினார் சகாயம். அந்தச் சோதனைகள்மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மே 19ம் தேதி தமிழக அரசின் தொழில்துறை செயலாளருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார்.
அறிக்கை அனுப்பிய நான்கு நாட்களில், அதாவது மே 23ம் தேதி, மதுரையில் இருந்து அதிகார ரீதியாக அதிக முக்கியத்துவமில்லாத கைத்தறித் துறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார் சகாயம். அப்படி அதிரடியாக என்ன இருந்தது அந்த அறிக்கையில்?
சகாயம் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
- மேலூர் வட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு, பொதுப்பாதைகள், பஞ்சமி நிலங்கள், குளம் மற்றும் கண்மாய்கள் ஆக்ரமிப்பு செய்து விதிகளை மீறி, கிரானைட் கற்கள் எடுக்கப்படுவது தொடர்பாக வந்த புகார் மனுக்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு இந்த அறிக்கை அனுப்பப்படுகிறது.
- மூன்று குவாரிகளில் வருவாத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்ததில், அங்கு சட்டத்திற்குப் புறம்பாக பெருமளவில் கல் வெட்டப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டாமின் குவாரியில் இருந்து இயந்திரங்களின் உதவியோடு சட்டத்திற்குப் புறம்பாக கிரானைட் கற்களை அப்புறப்படுத்தி தனியார் கிடங்குகளில் வைக்கப்படுகின்றன. இதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன. போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி கிரானைட் கற்கள் கடத்தப்படுகின்றன.
- மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சட்டவிரோத கிரானைட் குவாரிகள் மூலம் அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள 91 குவாரிகளில் முறைகேடாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால் அரசுக்கு வர வேண்டிய பல நூறு கோடி ரூபாய் வருமானம் தனியாருக்குப் போகிறது.
- அரசு நிறுவனமான டாமின், சில லட்சங்களையே சம்பாதிக்கிறது. ஆனால், அதைச் சார்ந்து செயல்படும் தனியார் ஒப்பந்தக்காரர்கள் சம்பாதிக்கும் தொகை பல்லாயிரம் கோடிகள். டாமின் நிறுவனத்தின் கிரானைட் சுரங்கங்களை டாமின் நிறுவனமே நேரடியாக நடத்தினால், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.
- மேலூர் வட்டத்தில் நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. இப்பகுதியில் உள்ள கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி, செம்மினிப்பட்டி ஆகிய கிராமங்களில் கிரானைட் கற்கள் பெருமளவில் எடுக்கப்படுகின்றன. அப்பகுதியில் உள்ள குளங்கள், ஏரிகள் ஆகியவற்றிலும் கிரானைட் கற்கள் எடுக்கப்படுகின்றன. கிரானைட் கற்களை வைப்பதற்காக அங்குள்ள நீராதாரங்களும் விவசாயப் பகுதிகளும் அழிக்கப்பட்டுள்ளன. இதனால், விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, கிராம மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது. மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்பட்டதாலும் பாதைகள் அடைக்கப்பட்டதாலும் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் தரக்கூடிய கால்நடை செல்வங்களின் எண்ணிக்கை அருகி விட்டது.
- அத்துமீறி கிரானைட் கற்கள் எடுக்கப்படுவதற்கு எதிராக ஆவேசத்துடன் போராடிய விவசாயிகள், காலப்போக்கில் மிகப் பெரிய சாம்ராஜ்யமாக எழுந்து நிற்கும் கிரானைட் நிறுவனங்களைக் கண்டு அச்சமடைந்து மௌனமாகி விட்டனர். ஆட்சியாளர்களிடம் புகார் செய்தும் எவ்விதப் பலனும் இல்லை. அதனால், விரக்தியடைந்த விவசாயிகள் புகார் அளிப்பதையே நிறுத்தி விட்டனர்.
- வேளாண் பொருளாதாரம் சத்தமின்றி அழிக்கப்பட்டு, மரணத்தை தழுவிவிட்டது. ஆனால், இன்னொரு புறம் என்ன நடக்கிறது? பி.ஆர்.பி., பி.கே.எஸ். போன்ற தனியார் கிரானைட் நிறுவனங்கள் பிரமாண்டமாக வளர்ந்து, அசுரத்தனமான பண பலத்தாலும் ஆள் பலத்தாலும் மிரட்சியூட்டும் அளவிற்கு வளர்ந்துள்ளன.
- கனிம சுரங்கத்தில் நடைபெறும் முறைகேடுகளைப் தடுத்து நிறுத்திட கனிம வளத்துறை அலுவலர்களையும் வருவாய்த்துறை அலுவலர்களையும் அறிவுறுத்தி வந்தேன். ஆனால், அவர்கள் சரியான நடவடிக்கை எடுத்து முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த முயற்சி எடுக்கவில்லை. பி.ஆர்.பி. போன்ற கிரானைட் சாம்ராஜ்யங்களுக்கு எதிராக தங்களால் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணமும் தங்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு இருந்திருக்கலாம். மேலும் இந்த அலுவலர்கள், கிரானைட் நிறுவனங்களிடம் இருந்து பெருமளவில் நிதி ஆதாயம் அடைந்திருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
- எதிர்காலத்தில் டாமின் குவாரிகளில் ரைசிங் அண்ட் சேல் ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்தக்காரர்களை கிரானைட் கற்களை எடுப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் பயன்படுத்தாமல், அதை டாமின் நிறுவனமே நேரடியாகச் செய்தால் தனியார் நிறுவனங்களால் ஏற்படும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியிழப்பு தடுக்கப்படும்.
மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் குவாரிகள் உள்ள பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இத்தகவலை முன்கூட்டியே அறிந்த குவாரி அதிபர்கள், பல நூறு அடி ஆழமான பள்ளத்தில் கழிவுக் கற்களைப் போட்டு மூடிவிட்டனர்.
"சட்ட விதியை மீறுவோர் மீது அபராதம் விதிக்கவும் குவாரி உரிமையை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார் மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா.
கிரானைட் கொள்ளை என்பது சட்ட மீறல் பிரச்சினை மட்டுமல்ல, கிராம மக்களின் வாழ்வாதரங்களையும் சுற்றுச் சூழலையும் பாதிக்கும் பிரச்சினை.
"சில தனியார் குவாரி நிறுவனங்களால் எங்கள் கிராமமே அழிந்துவிட்டது. குவாரியின் கழிவுகளைக் கொட்டி எங்கள் பஞ்சாயத்துப் பகுதியிலுள்ள கோயில் ஊரணி, ஓடை, கண்மாய், குளம் போன்றவற்றை மூடிவிட்டார்கள். பொதுப்பாதைகளை அடைத்ததோடு மட்டுமல்லாமல், கிராம மக்களின் விவசாய நிலங்களுக்கும் பாதையே இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் நிலம் மற்றும் பஞ்சாயத்து நிலங்கள் பலவற்றையும் ஆக்ரமித்து விட்டனர். உள்ளூர் கோயிலை உடைத்து வேறு ஓர் இடத்தில் கட்டிவிட்டு, அங்கும் கல் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். நிலத்தடி நீர் மட்டம் படுபாதாளத்திற்குச் சென்றுவிட்டதால் எங்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை" என்று குமுறுகிறார்கள் கீழவளவு பகுதியில் உள்ள கிராம மக்கள்.
"குவாரிகள் அரசு நிர்ணயித்த ஆழத்தைவிடவும் பல மடங்கு ஆழமாகத் தோண்டப்படுகின்றன. பள்ளி, கோயில்கள், குடியிருப்புகளிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தூரத்தையும் மீறுகிறார்கள். இரவு நேரங்களில் வெடி வைக்கக் கூடாது, கற்களை அறுக்க பர்னர்களை பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறைகளையும் கண்டுகொள்வதில்லை. மேலூர் முழுக்க முழுக்க விவசாயப் பகுதி. நீர்நிலைகள் அனைத்தும் அழிந்து போய்விட்டதால், 85 சதவிகித விவசாயமும் அழிந்துவிட்டது. மழை, வெள்ளம் ஊருக்குள் புகுந்து விடுகிறது. கிரானைட் எடுத்த பள்ளங்களை மூடி, அந்த இடத்தை பழையபடி விவசாயப்பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பது விதி. ஆனால், அவை பின்பற்றப்படவில்லை" என்கிறார்கள் இதைக் குறித்து ஆராந்த சமூக ஆர்வலர்கள்.
"இந்தப் பகுதியில் ஜைனர்கள் தங்கி இருந்தற்கான ஆதாரங்கள் எழுத்துக்கள், சிற்பங்கள் இருந்தன. இப்போது அவை சுவடு தெரியாமல் அழிந்து விட்டன" என்கின்றனர் தொல்லியல் ஆர்வலர்கள்.
இயற்கை வளம், மக்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் தொல்லியல் ஆதாரங்கள் இவற்றையெல்லாம் அழித்து இப்படி ஒரு கொள்ளை நடப்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா?
இந்தக் கொள்ளையைப் பற்றி எல்லா அரசியல் கட்சிகளுக்கும் நன்றாகவே தெரியும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தா.பாண்டியன், சி.மகேந்திரன் உள்ளிட்டோர் இரண்டாண்டுகளுக்கு முன் இந்தப் பகுதிகளை நேரிலேயே சென்று பார்த்திருக்கிறார்கள். அதுகுறித்து அதிகாரிகளுக்கும் தெரிவித்திருக்கிறார்கள்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக மதுரைக்கு வந்து மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜெயலலிதா, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு சட்டவிரோதக் காரியங்களை நீண்ட பட்டியலிட்டார். அப்போது,‘மதுரை மாவட்டத்தில் டன் கணக்கில் கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக எடுக்கப்படுகின்றன. இந்தச் சட்டவிரோத கிரானைட் கொள்ளை மூலம் அரசுக்கு ஏற்பட்டுள்ள வரி இழப்பு 82 ஆயிரம் கோடி ரூபாய்’ என்று குறிப்பிட்டார். ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்திற்கு எந்த நடவடிக்கையும் இல்லை.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனான தயாநிதி அழகிரி, மேலூர் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை சட்டவிரோதமாக எடுப்பதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக சட்டமன்றத்தில் தெரிவித்தார் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அதற்கு மறுப்புத் தெரிவித்த மு.க.அழகிரி, தாம் ஒருபோதும் கிரானைட் குவாரி தொழிலில் ஈடுபட்டதில்லை என்று கூறினார். அதன்பின், தயாநிதி அழகிரிக்கு சொந்தமானது என்று கூறப்படும் ஒலிம்பஸ் கிரானைட் கம்பெனியில் திடீர் சோதனை நடத்திய அமைச்சர் வேலுமணி, ‘பத்து சதவிகித அளவுக்கு கிரானைட் எடுப்பதற்கு லைசென்ஸ்வாங்கிவிட்டு, 100 சதவிகித அளவுக்கு கிரானைட் எடுத்துள்ளனர்’ என்று குற்றம் சாட்டினார். அழகிரியின் மறுப்புக்குப் பிறகே, முதலமைச்சர் உத்தரவுக்கு இணங்க நேரடி சோதனையில் ஈடுபட்டதாக தெரிவித்தார் வேலுமணி.
ஆனாலும், கிரானைட் நிறுவனங்களின் சட்டவிரோத செயல்பாடுகள் தங்குதடையின்றி தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன என்பதையே சகாயத்தின் அறிக்கை உறுதி செய்கிறது.
‘பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்றுள்ள இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
"கிரானைட் ஊழல் குறித்து வெளிவந்துள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. மாவட்ட ஆட்சியர் சகாயம், மே 19ம் தேதி தொழில்துறை முதன்மைச் செயலாளருக்கு அறிக்கை அனுப்பியும் இரண்டரை மாதங்களாக தமிழக அரசு மௌனம் சாதித்தது ஏன்? கனிம வளங்கள் இந்த தேசத்தின் சோத்து, அவை கொள்ளையடிக்கப்படவும் தனியார் லாபத்துக்காகப் பயன்படுத்தப்படவும் அனுமதிக்கக்கூடாது. ஆகவே, இதைக் கடுமையான குற்றமாகக் கருதி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்கிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.
மதுரைப் பகுதிகளைக் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் அறிக்கை கொடுத்துள்ளதால், அந்தப் பகுதியிலுள்ள அத்துமீறல்கள் அம்பலமாகியுள்ளன. அதற்காக மற்ற பகுதிகளில் இதுபோன்ற சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதில்லை என்று சொல்வதற்கில்லை. மற்ற மாவட்டங்களிலும் இதுபோன்ற சட்ட மீறல்கள் அரங்கேறி வருகின்றன. ஓர் உதாரணம், புதுக்கோட்டை (காண்க: பெட்டிச் செய்தி).
சாராயக் கடைகளை அரசு நிறுவனத்தின் மூலம் நடத்துகிற அரசு, டாமின் போன்ற அரசு நிறுவனத்தின் மூலம் கிரானைட் தொழிலை நேரடியாக நடத்த முன் வருமா அல்லது கொள்ளைக்குத் துணை நிற்குமா?
லாபவெறிக்கு இரையாகும் வரலாற்றுச் சின்னங்கள்
‘‘தங்கள் பகுதி தொழில் வளம் பெறும் என்ற நம்பிக்கையில் குவாரிகளை மக்கள் வரவேற்றனர். அந்த மக்கள் இன்று வாழ்வதற்கே வழியின்றித் தவிக்கின்றனர். ஓங்கி உயர்ந்த பல மலைகள்இன்று காணாமல் போய்விட்டன. எல்லாவற்றையும் தரையோடு தரையாக அறுத்துச் சென்றுவிட்டார்கள்.’’
‘‘பதினாறு ஆண்டுகளுக்கும் மேலாக குவாரிகள் செயல்படுகின்றன. சமீபத்தில் கண்டுபிடித்ததை வைத்து மட்டுமே 16 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்றால், 16 வருடங்களில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கும். இந்த முறைகேடுகளை சகாயம் கண்டுபிடித்த பிறகு, டாமின் கழிவுகளைக் கொண்டுவந்து குழிகளை மூடுகிறார்கள். அதை மூடக்கூடாது என்று சொன்னதற்கு எனக்கு கொலை மிரட்டல் வருகிறது.’’
‘‘ஒரு வரலாற்றுத் தொன்மை வாய்ந்த நகரம் மதுரை. ஓவியங்கள், சமணப்படுகைகள், பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்துக்கள், குளங்கள், சமணப்பள்ளிகள் எனப் பல வடிவங்களில் இன்றும் நம் வரலாற்றை உறுதிப்படுத்தும் சின்னங்களாக 2500 ஆண்டுகளாக தலைநிமிர்ந்து நிற்கின்றன. இந்த வரலாற்றுச் சின்னங்கள் இருக்கும் மலைகளைச் சுற்றி 300 மீட்டர் தொலைவுக்கு எந்த குவாரி, சுரங்க நடவடிக்கைகளும் இருக்கக் கூடாது என்பதற்கு கறாரான விதிகள் இருந்தும் இந்தச் சின்னங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. கீழவளவு பாண்டவர் படுகைகள் குவாரி கற்கள் மத்தியில் தூசு படிந்து கிடக்கின்றன. வரிச்சூரில் மொத்த மலையையும் கபளீகரம் செய்துவிட்டனர். மேலக்குடியில் மொத்தப் படுகையுமே கற்குவியலாக மாற்றப்பட்டுவிட்டது. கீழையூர் வெள்ளூத்துமலையைக் காணவில்லை. இவ்வாறாக மதுரையின் வரலாற்றுச் சின்னங்கள் அனைத்தும் கிரானைட் மாஃபியாக்களின் லாபவெறிக்கு இரையாகி வருகின்றன. யானை மலையையும் விழுங்குவதற்கு பெரும்திட்டம் போட்டனர். ஆனால், உள்ளூர் மக்களின் வீரம் செறிந்த போராட்டத்தால் அது தடுக்கப்பட்டது. ஆனாலும், எல்லாவற்றையும் மீறி கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதியில் இயற்கை வளம் தொடர்ந்து சூறையாடப்பட்டு வருகிறது. மதுரையில் இருந்து சிவகங்கை, காரைக்குடி, தேனி என எந்தத் திசையில் பயணித்தாலும் இக்காட்சிகளைக் காண முடியும்.’’
ஆபத்தில் புதுக்கோட்டை!
அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே. தொல்லியல் துறையின் சட்டங்கள் மீறப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், இந்தப் புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால், குகைகளும் நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளன. இப்படியே தொடர்ந்தால், மத்திய தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக உருமாறும் நாள் வெகுதூரமில்லை.
மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும் அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண்டபோது, ‘யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களைத் தடுக்க முடியவில்லை’ என்று வருத்தமே தெரிவிக்கின்றனர். இனியும் தாமதியாமல், தமிழ்நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி (இல்லை, இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து), உடனேயே இந்தக் காலவரையற்ற குண்டு வெடிப்புகளைத் தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும். அரசு உடனடியாகக் கவனிக்குமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக