ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி முத்தரையர் நகரில் வசிக்கும் மீனவர் உமையனின் இரண்டாவது மகள் செல்லம்மாள், 38. மூத்த மகளும், மகனும் திருமணமாகி தனிக்குடித்தனம் சென்ற பின்னர் குடும்பம் தத்தளித்தது. வயதான தந்தையையும்,உடல் நலமில்லாத தங்கை செல்வராணியை, 30, காப்பாற்ற செல்லம்மாள், கட்டட வேலைக்கு சென்றார். கொத்தனார் செய்யும் பணிகளை உன்னிப்பாக கவனித்து வந்தார். சில மாதங்களில் கொத்தனாரிடம், தனது மேஸ்திரி ஆர்வத்தை வெளிப்படுத்தினார். உணவு இடைவேளையில் சிமென்ட் பூச்சு பணி வாய்ப்பு கிடைத்தது. படிப்படியாக சிமென்ட் கலவைகளின் அளவை அறிந்து,அடுத்த மூன்று ஆண்டுகளில் கட்டட மேஸ்திரியாக தன்னை உயர்த்திக் கெண்டார். கான்ட்ராக்ட் எடுத்து வீடு கட்டி கொடுக்கும் நிலைக்கு தயாரானார். தங்களது நிறுவன சிமென்ட், கம்பிகளை உபயோகிக்கும்படி வினியோகஸ்தர்கள் இவரை நோக்கி படையெடுத்தனர். 15 ஆண்டுகளுக்கு முன் ஆறு ரூபாய் கூலியில் தொடங்கிய வாழ்க்கை, இவரது இவரது தன்னம்பிக்கையால் கை நிறைய சம்பாதிக்கும் நிலைக்கு மாறியுள்ளது.
அவர் கூறியதாவது: திருமணமாகி விவாகரத்து பெற்றும், மன உறுதியை மட்டும் கைவிடவே இல்லை. சாதிக்க வேண்டும் என்ற வெறி, வெற்றியை தேடி தந்தது. குடும்பத்தினர் அனைவரும் கடலை நம்பி வாழ்ந்தாலும், நான் மட்டும், கட்டட வேலைக்கு சென்றேன். தற்போது எனது தலைமையில் 12 சித்தாள், ஒரு மண்வெட்டியாள் உள்ளனர். வசதி படைத்தவர்கள் இன்ஜினியரிடம், வீட்டின் வரைபடம் வாங்கி வந்து, வீடு கட்டச் சொல்வர். பலர் நிலத்தின் அளவைக் கூறி வீட்டிற்கு தேவையான வசதிகளை என்னிடம் தெரிவித்து விடுவர். அவர்கள் விரும்பும் வகையில் வரைபடம் தயாரித்து, இதுவரை 20க்கும் அதிகமான வீடுகளை கட்டி முடித்துள்ளேன். கேலி பேசியவர்கள் எல்லாம் காணாமல் போய் விட்டனர். ஏற்றுக்கொண்ட பணியை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பணி புரிந்து வருகிறேன், என்றார்.
NEWS FROM தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக