எழுத்து : திரு. இரா.மணிகண்டன், நன்றி : குமுதம் இதழ்
குமுதம் இதழில் நான் தமிழன் என்ற தொடர் (தமிழர்களின் பழமை, பெருமை, பாரம்பரியம் பற்றியது) எழுத்தாளர் திரு. இரா. மணிகண்டன் அவர்களால் எழுதப்பட்டது அதில் 30.09.2009 ந் தேதி இட்ட இதழில் "முத்தரையர்" பற்றிய கட்டுரை.
போர்! பெரும்போர்! பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனுக்கும் பாண்டிய மன்னனுக்கும் கடும்போர். ஏறத்தாழ பல்லவ மன்னன் தோற்றுப்போகும் நிலை, பல்லவ நாட்டின் பெரும் நகரங்கள், கிராமங்கள், ஆறுகள், குளங்கள் என்று ஒவ்வொன்றாக வீழ்ந்து கொண்டே வந்தன. நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே பல்லவ மன்னன், மாமன்னன் பெரும்பிடுகு முத்தரையரிடம் உதவி கேட்கிறான். நட்பு நாடி வந்தவருக்கு நம்பிக்கையுடன் பெரும்பிடுகு உறுதியளிக்கிறார் அதற்க்குப் பின் நடந்தது வரலாற்று உண்மைகள்.
பாண்டிய மன்னனை வென்று, சோழ மன்னனை வென்று தொடர்ந்து பல போரில் வெற்றிவாகை சூடினார் பெரும்பிடுகு முத்தரையர். சத்துருகேசரி, அபிமானதீரன், நெடுமாறன் உள்ளிட்ட 16 விருதுகள் அவர் பெற்ற வெற்றிக்காக சூட்டப்பட்டன!
முத்தரையர் சமுதாயத்தை காலம் காலமாக வரலாற்றில் இடம்பெறச் செய்த சரித்திர நிகழ்ச்சி இது
தமிழகத்து வரலாற்று கதாபாத்திரங்களில் முத்தரையர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். முத்தரையர்கள் தோற்றம் பற்றி வரலாற்று அறிஞர்களிடையே நிறைய கருத்து முரண்பாடுகள் உண்டு, ஆனால் தமிழகத்தின் கலை, இலக்கிய பண்பாட்டைக் கட்டிக் காத்தவர்கள் முத்தரையர்களே.
அவர்கள் பல்லவப் பேரரசுக்கு உட்பட்டு தஞ்சாவூர், பழைய புதுக்கோட்டை சமஸ்தானம் ஆகிய நிலப்பகுதிகளை ஆண்டு வந்தனர். திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் இப்போது ஒரு சிற்றூராக காட்சியளிக்கும் செந்தலை என்பதுதான் அன்றைய முத்தரையர்களின் தலை நகரமாக செயல்பட்டு வந்தது, பாண்டியர்களோடும், சோழர்களோடும் பல்லவர்கள் போர் புரிந்த போதெல்லாம் முத்தரையர்கள் பல்லவருக்குத் துணை நின்று வெற்றிக்கு உதவியுள்ளனர்.
செந்தலை கல்வெட்டு ஆதரப்படி முதன் முதலாக (கி.பி 655) நமக்கு அறியவருவது பெரும்பிடுகு முத்தரையன் என்ற மன்னன்தான். இவருடைய மகன் இளங்கோவடியரையன் அவரது மகன்தான் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையன் (கி.பி 705- 745) இவரது காலத்தில்தான் முத்தரையர்கள் பெரும் செல்வாக்குப் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். "பிடுகு" என்றால் "இடி" என்று பொருள்.
அவருக்குப் பிறகு அடுத்தடுத்து பலர் ஆட்சிக்கு வந்தனர். பல்லவர்களின் உற்ற தோழர்களாக அரசியலில் இருந்தாலும், அவர்களுக்குப் போட்டி போடும் வகையில் கலை பண்பாட்டில் விஞ்சி நின்றவர்கள் முத்தரையர்கள்.
ஆலம்பாக்கத்தில் உள்ள "மார்ப்பிடுகு ஏரி" திருவெள்ளாறையில் "மார்ப்பிடுகு பெருங்கிணறு" ஆகியவற்றை உருவாக்கி அப்பகுதி மக்களின் தாகத்தைத் தீர்த்தவர்கள்.
சைவ, வைணவ சமய வளர்ச்சிக்கு முத்தரையர் பெரும் பங்காற்றியுள்ளனர். அதோடு சமண சமயத்திற்க்கும் பேராதரவு தந்திருக்கிறார்கள். முத்தரையர் காலத்தில் தான் " நாலடியார்" என்ற நூல் இயற்றப்பட்டிருக்கிறது.
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் அக்காலத்திலேயே முத்தரையர்கள் உதவி வந்திருக்கிறார்கள், பாச்சில்வேள் நம்பன், ஆசாரியர் அநிருத்தன், கோட்டாற்று இளம் பெருமானார் ஆகியோர் முத்தரையர்களின் அரசவையை அலங்கரித்த பெரும் புலவர்களில் சிலர்.
யாப்பருங் கலவிருத்தி என்ற நூலில் "முத்தரையர் கோவை" என்ற நூல் பற்றிய குறிப்பு வருகிறது. இது மட்டும் கிடைத்திருந்தால் முத்தரையர் பற்றிய முழுமையான வரலாறு நமக்குக் கிடைத்திருக்கும். பழியீசுவரம் குகைக்கோயில், திருமெய்யம் அருகில் உள்ள புஷ்பவனேசுவரர் கோவில், தேவர்மலை கற்றளி, மலையடிப்பட்டி வாகீஸ்வரர் குகைக்கோயில் ஆகியவை முத்தரையர்கள் செதுக்கி நமக்களித்த கொடையே.
"தஞ்சாவூர்" என்ற சரித்திரப் புகழ் வாய்ந்த நகரத்தை உருவாக்கியதே முத்தரையர்கள்தான். தனஞ்சயன் என்பவரால் உருவாக்கப்பட்ட ஊர் "தனஞ்சய ஊர்" என்று அழைக்கப்பட்டு அதுவே பின்னர் தஞ்சாவூர் என்று பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
சுதந்திரப் போராட்டத்தில் முத்தரையர் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசியப்படையில் பலர் இணைந்து நாட்டிற்கு உழைத்திருக்கிறார்கள்.
எட்டரைக் கோப்பு ஆகிய கிராமங்களில் சுதந்திரப் போராட்ட வேள்வித் தீயில் உயிர் தியாகம் செய்தவர்கள் அதிகம், பாதரப்பேட்டை முத்தையா, அண்ணாவி, அப்பர் முத்தரையர் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
தற்கால அரசியல் வானிலும் முத்தரையர்களின் பங்கு அதிகம் பாதரப்பேட்டை முத்தையா முத்தரையர்களின் முதல் எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட தியாகி, முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், அண்ணாவி, புலவர் செங்குட்டுவன், கே.கே.பாலசுப்பிரமணியன், பேராவூரணி எம்.ஆர்.கோவேந்தன் (தமிழக அமைச்சரவையில் இடம் பெற்ற முதல் முத்தரையர்), ஆலங்குடி வெங்கிடாசலம், இப்போதைய (கட்டூரை எழுதப்பட்டபோது..!) திமுக அரசில் வனத்துறை அமைச்சராக இருக்கும் என்.செல்வராஜ் உள்ளிட்ட பலரை தந்த சமூகம் இது. (தற்போதைய அதிமுக அரசில் சிறிது காலம் அமைச்சராக இருந்த திரு. பரஞ்சோதி, இன்றைய கல்வித் துறை அமைச்சர் திரு. என்.ஆர்.சிவபதி ஆகியோர் நம் மக்களுக்கு தெரிந்திருக்கும்)
நத்தம் தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பாக சட்டமன்றத்திற்க்கு தேர்ந்தெடுக்கப் பட்ட ஆண்டி அம்பலம், தொட்டியம் முன்னாள் எம்.எல்.ஏ சிங்கார வேலு (!?), பேராவூரணி முன்னாள் எம்.எல்.ஏ குழ.செல்லையா, (இவர் தனியே முத்தரையர் சங்கம் நடத்தி வந்தார் சமீபத்தில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்) தொட்டியம் ராஜசேகரன், முசிறி ராஜரெத்தினம், தொட்டியம் கண்ணையன், பிரின்ஸ் தங்கவேலு, புதுக்கோட்டை -ஆலங்குடி ராஜசேகரன் (இ.கம்யூ), மல்லிகா சின்னச்சாமி, புதுக்கோட்டை ராஜா பரமசிவம் (முன்னாள் எம்.பி) உள்ளிட்ட பலர் தி.மு.க, அதிமுக எம்.எல்.ஏ க்களாக முத்தரையர் சமூகத்திலிருந்து சட்டசபைக்குச் சென்று சாதனை படைத்திருக்கிறார்கள். ( இந்த கட்டூரையில் விடுபட்ட சிலர்... திரு. திருஞானசம்பந்தம் பேராவூரணி, திரு. புஷ்பராஜ் - ஆலங்குடி)
காமராஜர் ஆட்சியில் தலைமைச் செயலராக இருந்து திறம்பட நிர்வகித்த இ.பி.ராயப்பாவை தமிழகம் மறக்காது (இன்றைய முத்தரையர்களுக்கு இவர் யார் என்றே தெரியாது..!!??), விளையாட்டுத் துறையில் உயரம் தாண்டுவதில் சர்வதேசப் போட்டியில் பதக்கம் வென்று தமிழகத்தை தலை நிமிர வைத்த நல்லுச்சாமி அண்ணாவி, சர்வதேச கபடிப் போட்டியில் சாதித்த மணமேடு சுப்பிரமணியன் போன்றோர் முத்தரையர் தந்த கொடையே. ( இன்றைய நிலையை சிந்தித்துப் பார்ப்போமா ? உறவிகளே).
சிறந்த பேச்சாளரான திருச்சி செல்வேந்திரன் உள்ளிட்ட பலர் எழுத்துத் துறையில் முத்தரையர் சமூகத்திற்க்குப் பெருமை சேர்கின்றனர், முத்தரையர் சங்கத் தலைவர் ஆர்.விஸ்வநாதன், நடிகர் பரதன் உள்ளிட்ட பலர் முத்தரையர் சமூக வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள்.
முத்தரையர்களிடையே திருமணச் சடங்குகள் நிறைய உண்டு எனினும் எளிமையான திருமணத்தையே மேற்கொள்கின்றனர். மணமகனுக்கு காதுக்குத்தியிருக்க வேண்டும், மணமகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்தியிருக்க வேண்டும், என்பதுதான் மணமக்களுக்கு தகுதி மற்றப்படி பரிசம் போடும்போது மாப்பிள்ளை வீட்டார்தான் பெண்ணுக்கு நகை போட வேண்டும், திருமணத்தின் போது மணமக்களுக்கு தோஷம் கழிய நூல் பிடி சடங்கு செய்வது அதிகம், திருமணத்திற்க்கு அழைப்பிதழோடு "பணம் வைத்து அழைத்தல்" என்ற முறை முத்தரையர் சமூகத்திலும் உண்டு.
வரலாற்றுக் காலம் முதல் அறியப்படும் முத்தரையர்கள் இன்றைக்கும் பல்வேறு துறைகளில் வரலாறுகளைப் படைத்தவண்ணம் உள்ளனர்.
இந்த கட்டூரையில் பல செய்திகள் விடுபட்டிருந்தாலும் பல்வேறு கோணங்களில் தகவல்களை திரட்டி இந்த கட்டூரையின் மூலம் மறக்கப்பட்டு வரும் முத்தரையர்களின் கலை, பண்பாடு, பழக்கவழக்கங்களை முத்தரையர்களுக்கும், ஏனைய தமிழ் சமூகத்திற்க்கும் சொந்த விருப்பு விருப்பு இன்றி தொகுத்து அளித்த திரு. இரா.மணிகண்டன் அவர்களுக்கும், இந்த கட்டூரையினை வெளியிட்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு எங்களின் சுருங்கிய வரலாற்றினை தெரிந்துக் கொள்ள செய்த "குமுதம்" இதழுக்கும் முத்தரையர் சமூகத்தின் சார்பில் "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக