திருச்சி: "அ.தி.மு.க., திருச்சி புறநகர் மாவட்ட செயலாளராக, ரத்தினவேல் நியமனம் செய்யப்பட்டதன் மூலம், ஜாதி அரசியலுக்கு முதல்வர் ஜெயலலிதா முற்றுப்புள்ளி வைத்துள்ளதார்' என, அக்கட்சியினர் தெரிவித்தனர்.கடந்த, 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, திருச்சி புறநகர் மாவட்ட, அ.தி.மு.க., செயலாளர் பதவி பல முறை மாற்றி வழங்கப்பட்டது.தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சியை பிடிப்பதற்கு முன், புறநகர் மாவட்ட செயலாளராக சுப்பு என்ற சுப்ரமணியம் இருந்தார். ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அமைச்சராக நியமனம் செய்யப்பட்ட சிவபதிக்கு, அந்த பதவி வழங்கப்பட்டது.ஒரு சில மாதங்களிலேயே இவரிடமிருந்து, அப்பதவி பறிக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்பிரமணியனுக்கு வழங்கப்பட்டது. அடுத்த ஒரு சில மாதங்களிலேய, புறநகர் மாவட்ட செயலாளர் பதவி, திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பரஞ்ஜோதிக்கு வழங்கப்பட்டது.டாக்டர் ராணி விவகாரம் தொடர்பாக அமைச்சர் பதவியை இழந்த பரஞ்ஜோதியிடம் இருந்து, புறநகர் மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டு, மீண்டும் அமைச்சரான சிவபதிக்கு வழங்கப்பட்டது. இப்படி புறநகர் மாவட்ட செயலாளர் பதவி, மாறி மாறி, முத்தரையர் இனத்தை சேர்ந்தவர்களுக்கே அளிக்கப்பட்டு வந்தது. இது கட்சியில் உள்ள இதர சமூகத்தினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.இதனால் வேறு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இப்பதவியை வழங்க ஜெயலலிதா முடிவு செய்தார். இதன் காரணமாகவே புறநகர் மாவட்டத்திற்கு, தனியாக செயலாளர் நியமனம் செய்யாமல், மாநகர் மாவட்ட செயலாளர் மனோகரனையே கூடுதலாக கவனிக்க சொல்லியிருந்தார். அமைச்சர் பதவியை மட்டும் பூனாட்சிக்கு வழங்கினார்.எப்படியும் சுற்றி சுற்றி மாவட்ட செயலாளர் பதவி, நமக்கு தான் வரும் என்ற தீவிர நம்பிக்கையில், முத்தரையர் இனத்தை சேர்ந்த, "மாஜி'க்கள் பலர் ஆவலுடன் காத்திருந்தனர்.ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில், முத்தரையர் அல்லாத, கட்சியில் மிகவும் சீனியரான ரத்தினவேலுவை மாவட்ட செயலாளராக, ஜெயலலிதா நியமனம் செய்துள்ளார். இது திருச்சி புறநகர் மாவட்ட, அ.தி.மு.க.,வில் உள்ள ஒரு பிரிவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனினும், புறநகர் பகுதியில் குறிப்பட்ட ஒரு ஜாதியினருக்கு அளிக்கப்பட்டு வந்த முக்கியத்துவத்தை நிறுத்தி, ஜாதி அரசியலுக்கு ஜெயலலிதா தடை விதித்துள்ளதாக கட்சியில் மற்றொரு பிரிவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.திருச்சி, பெரம்பலூர், அரியலூர் என, முந்தைய ஒருங்கிணைந்த, திருச்சி மாவட்ட செயலாளராக ரத்தினவேல் பதவி வகித்தவர். திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும், கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் மற்றும் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற நிர்வாகியாக இருந்துள்ளார்.தி.மு.க.,வைச் சேர்ந்த அன்பில் பொய்யாமொழி மரணத்தைத் தொடர்ந்து நடந்த, திருச்சி, 2வது தொகுதி இடைத்தேர்தலில் ரத்தினவேல், அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.இந்த தேர்தலின் போது பலத்த கலவரம் நடந்தது. ஆளுங்கட்சியான, தி.மு.க.,வினரை எதிர்த்து இவரும், மறைந்த முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சையும் போராடியதன் விளைவாக, தேர்தல் முடிந்தவுடன், ரத்தினவேலுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது.இவர் மூலம் அரசியலில் பிரபலமான மரியம்பிச்சை, அமைச்சர் பதவி வரை முன்னேறிச் சென்ற நிலையிலும், ரத்தினவேல் மட்டும் டம்மியாக இருந்தார்.நீண்ட இடைவேளைக்கு பிறகு, ரத்தினவேலுக்கு மீண்டும் பதவி கிடைத்துள்ளது. "புறநகர் பகுதியில் அரசியல் செய்ய, அவருக்கு ஏற்கனவே உள்ள அனுபவம் கை கொடுத்தாலும், தற்போது கட்சியில் நிலவும் பல ஜாதி அரசியல் மையங்களை சமாளிக்க அவர் போராட வேண்டியிருக்கும்' என, கட்சியினர் கூறுகின்றனர்."எனினும், முதல்வர் ஜெயலலிதா, நியமனம் செய்திருப்பதால், எதிர்ப்புகள் நேரடியாக இருக்காது என்றும், மறைமுக எதிர்ப்புகளை ரத்தினவேல் கண்டிப்பாக சந்தித்தே தீர வேண்டியிருக்கும்' என, கட்சியில் உள்ள சீனியர் நிர்வாகிகள் அடித்துக் கூறுகின்றனர்.