ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டுமென்றால், ரத்தம் சிந்தவேண்டும். அதிலும் விழுந்த சாம்ராஜ்யத்தைத் திரும்ப உருவாக்க வேண்டுமென்றால், சிந்தும் ரத்தத்திற்கு சமமாய் இரண்டு மடங்கு கண்ணீரும் சிந்தவேண்டியிருக்கும். கண்ணுக்குத் தெரியக் காத்திருக்கும் எதிரிகளைவிட கண்ணுக்குப் புலப்படாமல் அருகிலேயே நடமாடும் எதிரிகளையும், கூடவே இருந்து குருதி குடித்துக் குந்தகம் பேசும் எதிரிகளையும் கண்டுபிடிப்பதுதான் சவால்களின் கூட்டுத்தொகை. விஜயாலயனுக்கு அப்படியொரு வாய்ப்பு!
மறுபடியும் புலிகளின் பதாகையை உயர்த்தி உலகிற்குக் காட்ட ஒரு அரிய சந்தர்ப்பம் வாய்த்தது. ஆமரப் பூவிலைகள் அதிரப் பனிகொட்டிக் கொண்டிருந்த கூதிர்காலம். நார்த்தா மரநிழலில் நந்தியாவட்டைகள் படர்ந்து கொண்டிருந்தன. வைக்கோல் திரிகள் வரப்போரங்களில் குவியத் துவங்கும் தொழிற்காலம்!
உறையூர் எத்தனையோ நூற்றாண்டு இரவுகளைச் சுமந்து, அன்றைய இரவையும் கனத்த மௌனத்தோடு சுமந்தபடி பெருவளத்தான் கட்டிய கற்கோட்டை இறுக அமர்ந்திருந்தது.
அர்த்த ஜாமத்தில் இரண்டாம் பொழுது துவங்கியது. ஏனாதிகளும் அமைச்சர்களும் சூழ... காவிரிப் புனல் சிறைப்பட்ட கரைமண்டபத்திற்கு அருகே கருஞ்சிறுத்தைபோல் உலவிக் கொண்டிருந்தான் விஜயாலயன்.
இரும்பை அப்படியே உருக்கி, ஆள் செய்ததுபோல் ஒரு வடிவத்திரட்டு. நல்ல முரட்டுக்காளைகளின் வால் கறி மட்டுமே சுவைத்துண்டு பழகிய தடித்த நாவுகள் மடிபட, கனல் கக்கிய கண்களுடன் காவிரியினுள் குதித்து நீந்தினான்.
வெப்பத்திலிருந்து உடம்பும் குருதியும் குளிர்பட சாமத்திலிருந்து இதுவரை ஏழெட்டு தடவைக்கும் மேல் காவிரியினுள் தலைமூழ்கி தண்ணீராடி எழுந்தாயிற்று. எண்பேராயமும் பரிதவித்து நின்றது. விஜயாலயன் எடுக்கும் முடிவில் உள்ளது, சோழர்களின் சூரியோதயம். அது அவசரத்தில் அஸ்தமனத்தையும் அறிமுகம் செய்யலாம்.
ஈரம்சொட்டச் சொட்ட எஃகு மலைபோல் நீருள் இருந்து எழுந்தவன், கல்மண்டபத்தில் ஏறினான். இடைக்கச்சைத் தவிர, துணி-நகை-ஆடை இல்லை அவன் தேகத்தில். வெகுநாட்களாய் ஒழுங்குபடுத்தப்படாத மயிர்க்கால்கள் முகம்-மார்பில் மண்டிக்கிடந்தன.
இழந்ததைப் பெறும்வரை இழந்தவனின் வலி கணம் கணம் ஆயிரமாயிரம் மடங்காய் அதிகரிக்கும். நாடி, நரம்பு, நார்மண்டலம்வரை ஊடுருவி சித்ரவதை செய்ததன் அடையாளங்கள் சோபிதமற்ற தேகத்தில் தென்பட்டாலும், விழிமட்டும் விருட்விருட்டென வேகம் குறையாது உருண்டன.
ஒருவனது கண்கள் சொல்லிவிடும், அவனது வலு என்னவென்பதை!
உடைந்துபோகக் கூடியவனா..? உடைத்துப் போடக் கூடியவனா என்பதை ஒருவனது பார்வையின் அழுத்தத்தில், இமைப்பின் தீவிரத்தில் இருந்து அறியலாம். விஜயாலயனின் விழிகள் மூன்று நூற்றாண்டு இருளை கண்களில் இருந்து கசங்கிப் பிழிந்துவிட்டு, அதற்கு விலையாக சூரியனை அள்ளிக் குடிக்கும் வெறிகொண்டு திரிந்தன.
‘ஏனாதி’ என வீறிட்டு அழைத்தான் விஜயாலயன். அக்குரல் நான்கு சுற்றுச்சுவர் கோட்டையில் மோதி, எட்டாம் அடுக்கு மாடவீதி இராக்காவல் படைக்கும் கேட்டது.
வெற்றியை ஒரு வெறியுடன் அணுகுகிறவன், அதை அடையும்வரை குடிக்கும் தண்ணீரைக்கூட அடித்தொண்டையில் ஈயங்காய்ச்சி இறங்குவதாகவே உணர்வான். விஜயாலயன் ஏனாதியின் குத்துவாளை மார்க்கச்சை மறைவிலிருந்து எடுத்துத் துடைத்தான்.
‘திருப்புறம்பயம் யுத்தம் எழுதப் போகிறதடா சோழர் சரித்திரத்தை மீண்டும் உலகத்திற்கு!’ என்றவன், ஏற்கெனவே தன் உடலெங்கும் தென்பட்ட 96 விழுப்புண்களோடு, மற்றொரு காயத்தையும் ஏற்படுத்தினான். கருஞ்சிவப்பு உதிரம் முகம் காட்டியது. ‘இது ரத்த சத்தியமடா அமைச்சா... என் மண்ணில் என்னை புதைத்தேகினும், என் விலா எலும்பை உருவித் தொகுத்தேகினும் தொலைந்த சிம்மாசனத்தைத் தோண்டி எடுப்பேன் போ..!’ அதுவொரு அரசனின் அறைகூவலாய் அல்ல... அசரீரியின் தீர்ப்புக் குரலாய் கேட்டது.
மெல்ல விடியலுக்கான புணர்வை முகில்களோடு நிகழ்த்த ஆரம்பித்திருந்தன ஒளிக்கற்றைகள். அன்றில்கள் கண் விழித்து சிறகு சிலிர்த்தன. கருஞ்சாம்பல் நிறக் குயில்கள் பேடுகளைத் துளாவின. உறையூர் மொத்தமும் ஒருதுளி உறக்கமின்றி இரா முழுதும் ஆங்காங்கே கிடந்தது கண்விழித்தபடி. பகலில் பிறந்த சிசு கூட அன்று இரவில் துயிலவில்லை. யாவர் இதயத்திலும் ஒரே வினா! ‘சோழனின் பாசறை பழைய பகையாளர்களும் பெரும் பலசாலிகளுமான பாண்டியன் வரகுண வர்மனோடு இணையுமா அல்லது களப்பிரரிடமிருந்து சோழ தேசத்தை மீட்டுத் தன்வசமாக்கிக் கொண்டு சிற்றரசாய் சோழரை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கும் பல்லவன் அபராஜிதனோடு இணையுமா?’
விடை கிடைத்தது! விடிந்தது கிழக்கு! விஜயாலயன் சொன்னான், ‘நாற்றங்காலை அறுக்கும் கத்திபோதும், கொடியறுத்த சிசுவை வீட்டில் கிழத்திடம் கிடத்தி வரட்டும் பெண்டுகள் கூட! ஈரலில் காற்று ஓடும் எக்கிழவனும் வரலாம், ஆறு சிரசாவது அறுத்து எடுத்து வர. யுத்தம் பாண்டியனோடுதான்! பாண்டியன் வரகுண வர்மனுக்கு துணைபுரியும் முத்தரையரே நமது முதல் வைரி! அபராஜிதன் நமக்கு இஷ்ட தெய்வமல்ல. ஆனால், சோழ வம்சத்தை ஒரு சிற்றரசாகவாவது தளைக்க விட்ட தயோன் அவன். சற்று பலம் நலிந்திருந்தாலும் அபராஜிதனுக்கு கை சேர்ப்பதும் மிகுந்த பலம் கூடிய பாண்டிய முத்தரையரை எதிர்ப்பதுமே புலியின் முடிவு!’
‘இது விபரீத முடிவல்லவா? முடிந்தது சோழிஸ்வரம்!’ என மூர்ச்சை அடைந்து விழுந்தார் ஏனாதியார்.
‘ச்சீ... அறுத்தெறிக அவச்சொல் நாக்கை... என் பாட்டனும் முப்பாட்டனும் நெஞ்சுயர்த்தி நடந்த தஞ்சை மண்ணில் இன்று பகைவனின் சிறுநீர் பாசனம் ஆகிறது. முத்தரையர் வசமிருக்கும் தஞ்சையே நமது முதல் குறி. யுத்தத்தில் வெல்வது. தஞ்சையை மீட்பது. அபராஜிதனுக்கு இருக்கும் அல்லோக்கத்தில் யுத்தப் புறப்பாடு நீதிப்பட்டையம் வகுக்க அவனுக்கு காலம் இல்லை. நாமே முடிவெடுப்போம். போரில் வென்று, தஞ்சையைக் கேட்போம்.’
‘வென்றபிறகு தஞ்சையைத் தர பல்லவன் மறுத்தால்...’ என்ற அமைச்சரின் செவிப்பறை அறுந்து தொங்கும் வண்ணம் சிரித்தான் விஜயாலயன்.
‘தீட்டிய கத்தியை திசைமாற்றித் திருப்புவதற்கு எத்தனை இமைப்புகள் ஆகும்’ என்றவன் சொற்கள் கிளப்பின, ரோஷத்தைச் சுற்றி நின்று காத்துக்கிடந்த உறையூர்வாசிகளின் உதிரத்தில்.
வேள்விக்குடி செப்பேடுகள் விளம்பும் வண்ணம் ‘அளவறிய ஆதிராஜரை அகலநீங்கி அகலிடத்தைக் களப்ப நின்றும் கலிய அரசன் கைக்கொண்டனன்’ என 6-ஆம் நூற்றாண்டில் கடுங்கோல் பாண்டியன் களப்பிரரை வென்றதை அறிய முடிகிறது. அதேகாலகட்டத்தில் பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணு, சோழ தேசத்தை களப் பிரரிடம் இருந்து கைப்பற்றினான் என பள்ளன் கோயில் செப்பேடுகள் செப்புகின்றன.
சிம்மவிஷ்ணுவைத் தொடர்ந்து மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன் (மாமல்லன்), மகேந்திரவர்மன்-2, பரமேஸ்வர வர்மன், ராஜசிம்மன் என நீண்டு அபராஜித வர்மன் வரை சோழர்கள் அந்நிய உரிமைக்குள் அடைந்து கிடந்தனர். ஆளுமையில் இருந்தவர்கள் யாரால் ஆளப்பட்டாலும் அடங்காது மனம் துடிப்பர். ஆனால், விஜயாலயன் தீர்மானித்தபடி பாண்டியன் வரகுண வர்மனுக்கு துணைசேரும் முத்தரையரே எதிர்த்து வீழ்த்தினால் தன்னையாளும் அபராஜிதனின் நிலைகுலைந்த படையும் நிமிரும், அபராஜிதனுக்கு ஒரு கடனும் உருவாகும். கடனுக்கு வட்டியாய் தஞ்சையைப் பெறுவது, பிறகு கடனைத் திருப்பிக் கேட்பது என்ற வியூகத்தில் விஜயாலயன் வகுத்த பாதை மிகப்பெரிய வெற்றியைத் தந்தது.
முத்தரையர்களிடமிருந்து தஞ்சையை மீட்க, மூச்சில் வெப்பமேற்றி முன்னேறினர் சோழர்கள். முத்தரையர் என்பவர் சேர, சோழ, பாண்டியர் எனும் மூன்று தரைகளை அரசாண்டவர் எனும் பொருள் நிறைய சொல்லுவதாக இருக்கலாம். முத்தரையர் களப்பிரர் அல்லர் எனவும், ஆம் எனவும் இருவேறு கருத்து நிலவுங்கால் அதுபற்றி விரிவாக்க விரும்பவில்லை.
ஏனெனில், எந்த மன்னர் குலத்தின் பின்புலத்திலும் இன்று ஒரு சாதி அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சாதியால் வீழ்ந்த சமூகம் நம் தமிழ்ச் சமூகம். தெருவுக்குத் தெரு சாதிகள் ஓட்டுக்களாய் மாறிவிட்டதால், நிஜவரலாறு எழுதும்போது சில இடங்களைத் தவிர்த்து விலக நேரிடுகிறது.
முத்தரையரிடம் இருந்த தஞ்சை பறிக்கப்பட்டதில் முத்தரையரைவிட முகம் கருகியது பாண்டிய வரகுண வர்மனே! இப்பின்னடைவை சமன்செய்ய விஜயாலயனை நேரே நின்றழிக்க, பெரும்படை கொண்டு காவிரி வடகரை பகுதியிலுள்ள இடவை எனும் இடத்தை அடைந்தான்.
இந்த இடத்தில் பல காட்சிகள் நிகழ்கின்றன.
2. இந்த யுத்தத்தால் சோழப் பேரரசை மீண்டும் நிறுவ விதையூன்றிய விஜயாலயன் ஒட்டக்கூத்தரால் 96 விழுப்புண் பெற்றவன் என்ற புகழ் தாங்கியபடி மரணத்தைத் தழுவுகிறான்.
3. அடுத்த ஆட்சிக்கு விஜயாலயன் மகன் முதலாம் ஆதித்தன் இந்த யுத்தத்தின் கூடே பொறுப்பேற்கிறான்.
4. அதேநேரம் உதவ வந்த கங்க மன்னன் பிருதிவீபதி மரணமடைகிறான்.
5. கடைசியில் யுத்தம் பல்லவருக்கே வெற்றியைத் தர, விஜயாலயன், பிருதிவீபதி ஆகியோரையும் இழந்து, பாண்டியரை வெல்கிறது பல்லவ சாம்ராஜ்யம்.
6. இறுதியில் போர் வருவாய் பங்குக்கு ஓர் ஆள் குறைந்ததால், மொத்தமாக முதலாம் ஆதித்தனுக்கே கிடைக்கிறது. தஞ்சையோடு சேர்த்து பல்லவன் அபராஜிதன் மேலும் சில பகுதிகளையும் ஆதித்தனுக்கு அளிக்கிறான்.
வரலாற்றி8ன் பக்கங்களில் காலம் இப்படி திடுக்திடுக்கென காட்சிகளைப் புரட்டிப் புரட்டி எழுதிக் கொண்டிருக்க, ஒரு வலுவான அஸ்திவாரம் சோழர்களுக்கு முதலாம் ஆதித்தன் காலத்திலேயே துவங்கிவிடுகிறது.
கி.பி 871 முதல் 901 வரை நீளும் ஆதித்தன் ஆட்சியில் மிக முக்கியத் திருப்பம்... பகைவனா, நண்பனா என அறுதியிட முடியாத அபராஜிதனுடன் ஒரு கட்டத்தில் நேருக்கு நேர்நின்று களமிறங்குகிறான் ஆதித்த சோழன்.
(புலி பாயும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக