மறைந்த மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையரின், 1,337வது சதயவிழா, கடந்தாண்டு மே மாதம், 23ம் தேதி நடந்தது. அதையொட்டி, திருச்சி கண்டோண்மென்ட் பாரதியார் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
*ரணகளம்: தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச்சங்கத்தினர் மாலையில் ஊர்வலமாக வந்து மாலை அணிவிக்க, தங்களது சங்கத்தை சேர்ந்தோருக்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஸ்ரீரங்கம், சமயபுரம், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேன், கார்களில் ஊர்வலமாக வந்த சங்கத்தினர், கையில் உள்ள சவுக்கு மர கொடியினால், சாலையில் சென்ற மக்கள், டூவீலர்களில் செல்பவர்கள், கார், பஸ்களின் மீது அடித்து ரகளை செய்தனர்.
கும்பல், கும்பலாக கலவரத்தில் ஈடுபட்டவர்களால், மாலை முதல் இரவு வரை மாநகர மக்கள் பீதியுடனே சாலைகளில் நடமாடினர். சதயவிழா கலவரம் தொடர்பாக, முத்தரையர் முன்னேற்ற சங்கத்தலைவர் விஸ்வநாதன், அவரது மகன்கள், மருமகன்கள் உள்ளிட்ட, 69 பேர் மீது, கோட்டை, கண்டோண்மெண்ட், காந்தி மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டது.
அதிகபட்சமாக விஸ்வநாதனின் மகன் ராம்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பாய்ந்தது. கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், மாநகர போலீஸார் மீது கடும் அதிருப்தியடைந்தனர். அடுத்தாண்டு சதயவிழா ஊர்வலத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று அனைத்துத்தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
அலறல்: இன்று (23ம் தேதி) நடக்கவிருக்கும் பெரும்பிடுகு முத்தரையரின், 1,338வது சதயவிழாவை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்கம் சார்பில் ஒரு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
அதில், "சதய விழாவன்று, பேரணியோ, ஊர்வலமாகவோ வந்தால் சமூக விரோதிகள் இடையில் ஊடுருவி கலவரத்தை ஏற்படுத்தி, நமது சமுதாய மக்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விடுகின்றனர். எனவே, சதயவிழாவன்று அந்தந்த ஊரில் மன்னர் படத்துக்கு மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜாதி அரசியல் செய்யும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மீதான அதிரடி கைது நடவடிக்கையும், அவர்களது கட்சியினர் மீது பாய்ந்த அதிரடி வழக்குகள் காரணமாகவே, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச்சங்கத்தினர் சதயவிழா ஊர்வலம் விவகாரத்தில் பின்வாங்கியிருப்பதாக தெரிகிறது. இவர்களின் அறிவிப்பு மாநகர மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் கெடுபிடி: சதயவிழா தொடர்பாக பல்வேறு முத்தரையர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன், மாநகர போலீஸ் டி.சி., செல்வக்குமார் ஆலோசனை நடத்தினர். அப்போது, சங்கிலி போல வாகனங்களில் ஊர்வலம் வரக்கூடாது. மாலை அணிவிக்க வரும் வாகனங்கள், 100 மீட்டர் இடைவெளி விட்டே வரவேண்டும்.
மது அருந்திவிட்டு, சாலையில் பட்டாசு வைத்து, பாதசாரிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது போன்ற பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர். நிபந்தனைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். மாநகரத்தின் முக்கிய பகுதிகளில் செக்போஸ்ட் அமைத்து போலீஸார் கண்காணிக்க உள்ளனர்.
நேற்று மாலை, ஒத்தக்கடை பகுதியில் அனுமதியின்றி, உணர்ச்சியை தூண்டும் வகையில் வைக்கப்பட்டிருந்த ஃப்ளக்ஸ் பேனர்களை அதிரடியாக போலீஸார் அகற்றினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக