பிரச்னையாகி இருக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், இப்போது உச்சநீதிமன்றம்வரை சென்றுவிட்டிருக்கிறது. கடந்த ஜனவரி 9 ஆம் தேதி, மூத்த வழக்குரைஞர் ஆர். காந்தியின் மனு மீதான விசாரணையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கான நீதிபதிகள் நியமனப் பரிந்துரைப் பட்டியலின்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று மத்திய சட்ட அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை ரத்து செய்து, இந்தப் பிரச்னையை உச்சநீதிமன்றமே விசாரிக்கத் தீர்மானித்திருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கான 60 நீதிபதிகளில், தற்போது 48 நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனைய 12 நீதிபதிகளின் நியமனத்திற்கான பட்டியல் நீதிபதிகளின் "காலேஜியம்' என்று அழைக்கப்படும் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அகர்வாலின் தலைமையிலான நீதிபதிகள் நியமனக் குழு (காலேஜியம்) பரிந்துரைத்திருக்கும் 12 பேரின் பெயர்களும் நீதிமன்ற வளாகத்தில் போஸ்டர் அடித்து ஒட்டப்படாத குறையாக எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.
புகழேந்தி, வாசுதேவன், ராஜசேகரன், ரவிக்குமார், கிருஷ்ணகுமார், சுந்தர், ஸ்ரீகாந்த், அப்துல் குதூஸ், ஜாபருல்லா கான், கலையரசன், ராஜதுரை, நிர்மலா ராணி ஆகிய 12 பேரில் வாசுதேவனும், கிருஷ்ணகுமாரும் கீழமை நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள். இவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி உயர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் இரண்டு பேர் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அல்ல. ஏனைய இருவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு வாதாடுவதில்லை என்பது சிலரது குற்றச்சாட்டு.
என்னதான் பிரச்னை?
சமூக நீதி பேணப்படவில்லை, எல்லா ஜாதிப் பிரிவினருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதுதான் வழக்குத் தொடுத்திருக்கும் மூத்த வழக்குரைஞர் ஆர். காந்தியில் தொடங்கி, சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த பலருடைய குற்றச்சாட்டு.
அரசியல் சட்டப்படி ஜாதி ரீதியிலான இடஒதுக்கீடு என்பது நீதிபதிகள் நியமனத்தில் கிடையாது என்பதைத் தனது மனுவில் ஏற்றுக் கொள்ளும் வழக்குரைஞர் காந்தி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கான பட்டியலில் மூன்று பிராமணர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். தமிழகத்தில் எழுதப்படாத சட்டமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சமூக நீதி மரபு இந்தப் பட்டியலால் மீறப்படுகிறது என்று குறிப்பிடுகிறார் அவர்.
இதன் பின்னணியில் வேறு பல லாபிகள் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. ""சென்னை உயர்நீதிமன்றம் என்று சொன்னாலே, ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் சமூகத்தினரின் ஆதிக்கத்தில் உள்ள உயர்நீதிமன்றம் என்கிற பெயர் நெடுங்காலமாக உண்டு. அந்த சமூகங்களைச் சேர்ந்த நீதிபதிகள் குறைந்தது ஐந்தாறு பேராவது சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறார்கள். சமீபகாலமாக அவர்களது எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டிருப்பதும்கூட, இந்தப் பிரச்னை கிளப்பப்படுவதற்குக் காரணம்'' என்கிறார் மூத்த வழக்குரைஞர் ஒருவர்.
""ஜாதிய ரீதியாகப் பார்த்தால், தமிழகத்தில் கணிசமாக இருக்கும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் மட்டுமே இருக்கிறார். மீனவர், முத்தரையர், அருந்ததியர் போன்றவர்கள் நீதிபதிகளாக இல்லை. நீதிபதி நியமனத்தில் ஜாதியையும் மதத்தையும் இழுப்பது ஆபத்தானது. தகுதி மட்டுமே அடிப்படையாக இருக்க வேண்டும்'' என்று பல வழக்குரைஞர்கள் கருத்துத் தெரிவித்தாலும், பணியிடச் சூழல் காரணமாகத் தங்கள் பெயர் வெளியிடப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.
பட்டியல் வகுப்பினரின் ஆதங்கம்
முன்பெல்லாம் எந்தவொரு நீதிபதிகள் நியமனத்திற்கான பட்டியல் பரிந்துரைக்கப்பட்டாலும், அதில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இடம் பெறாமல் இருப்பதில்லை. இந்தப் பட்டியலில் தங்களுக்கு இடமில்லை என்பதுதான் பட்டியல் வகுப்பினரின் குமுறலுக்குக் காரணம் என்கிறார்கள்.
""அவர்களுடைய கோரிக்கையில் நியாயமே கிடையாது. இதற்கு முன்னால் உச்சநீதிமன்றமே அவர்களுக்கு சாதகமாக இருந்து, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நியமிக்கப்பட்டு வந்தனர். இப்போதேகூட நீதிபதிகளில் அதிகமான எண்ணிக்கையில் இருப்பவர்கள் அவர்கள்தான்'' என்கிறார் வழக்குரைஞர் தாமஸ்.
பட்டியல் இனத்தவர்களில்கூட, அதிகமாக ஆதிதிராவிடர்கள்தான் நீதிபதி நியமனங்களைப் பெறுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் பரவலாக இருக்கிறது. அருந்ததியர் யாரும் இதுவரையிலும் உயர்நீதிமன்ற நீதிபதிகளானதில்லை என்று கூறப்படுகிறது.
அப்துல் குதூஸூக்கு எதிரான நிழல் யுத்தம்?
பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்து அப்துல் குதூஸின் பெயரை அகற்ற வேண்டும் என்பதில் ஒரு "லாபி' குறியாக இருப்பதாகத் தெரிகிறது. நேர்மையானவர், விஷயம் தெரிந்தவர், நியமிக்கப்பட்டால் தனது கடமையை செவ்வனே நிறைவேற்றுவார் என்று பரவலாகப் பாராட்டப்படும் அப்துல் குதூஸ், நீதிபதியானால் அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக வருங்காலத்தில் வருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அப்படியே ஆகாவிட்டாலும் "காலேஜியம்' எனப்படும் மூத்த நீதிபதிகளின் குழுவில் கட்டாயம் இடம் பெறுவார். அவர் பட்டியலில் இடம் பெறுவதைப் பலர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
""நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும், எல்லா சமூகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்களுக்கும் நியமனத்தில் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பது இந்தியா முழுவதிலுமான நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொள்கைத் தொடர்பானது. இது சென்னை உயர்நீதிமன்றத்தின் பிரச்னை மட்டுமல்ல என்பது எல்லோருக்குமே தெரியும்.
அகில இந்திய அளவிலான போராட்டமாக இல்லாமல், இங்கே மட்டும் இந்தக் கோரிக்கைகள் அவ்வப்போது எடுக்கப்படுவதும், பின்னால் அமுங்கிப் போவதும், இது ஒருவகை லாபியோ என்கிற ஐயப்பாட்டை எழுப்புகிறது. நீதிபதிகள் நியமனப் பட்டியலில் இடம் பெறாத அல்லது மேலும் இடம் கேட்கும் வகையுள்ள பிரிவினரின் (க்ரீமிலேயர்) வெளிப்பாடாகவும் அழுத்தமாகவுமே இது காட்சியளிக்கிறது'' என்கிறார் 18 ஆண்டுகளாக உயர்நீதிமன்றத்தின் வழக்குரைஞராகப் பணியாற்றும் ம. பாரி.
""நேர்மையான, சட்ட அறிவு மூப்புடைய வழக்குரைஞர்களின் பட்டியலை வெளிப்படையாகத் தயாரித்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் காலேஜியத்திடம் அந்தப் பட்டியலை பார் கவுன்சிலோ, வழக்குரைஞர்கள் சங்கமோ அளிப்பதுதான் சட்டத்திற்கு உட்பட்ட வெற்றிக்கான வழி'' என்கிறார் அவர்.
சமூக நீதி என்கிற பெயரில் நடத்தப்படும் போராட்டமா அல்லது தங்களது பெயர் பட்டியலில் இடம் பெறாததால் ஏற்பட்ட வெறுப்பிலும் ஆத்திரத்திலும் சிலர் பின்னணியில் இருந்து தூண்டிவிடும் போராட்டமா என்பது தெரியவில்லை. ஒன்று மட்டும் தெரிகிறது. இதற்குப் பின்னணி இருக்கிறது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதுபற்றித் தெரிவித்திருக்கும் கருத்து- ""மகேஷ் சந்திர குப்தா இந்திய அரசிற்கு எதிராகத் தொடுத்த வழக்கின்படி, நீதிபதி நியமனத்திற்குப் பரிந்துரைக்கப்பட்ட பெயரை அவர் தகுதியுடையவரா என்று மறு ஆய்வுக்கு உட்படுத்துவது சாத்தியமில்லை. உயர்நீதிமன்றம் வழக்குரைஞர் ஆர். காந்தியின் மனுவை பரிசீலனைக்கே எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது''.
ஒருவேளை பட்டியலிலிருந்து யார் பெயராவது நீக்கப்பட்டு சேர்க்கப்படும் பெயர் எது என்று தெரிந்தால், இந்தக் குழப்பத்தின் பின்னணியில் இருந்தது யார் என்பது அப்போது வெட்ட வெளிச்சமாகும்.
யார் அந்த 12 பேர்?
- புகழேந்தி
- வாசுதேவன்
- ராஜசேகரன்
- ரவிக்குமார்
- கிருஷ்ணகுமார்
- சுந்தர்
- ஸ்ரீகாந்த்
- அப்துஸ் குதூஸ்
- ஜாபருல்லா கான்
- கலையரசன்
- ராஜதுரை
- நிர்மலா ராணி
உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும், நீதிபதிகளும் அரசியல் சட்டப்பிரிவு 217இன் கீழ் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். ஒரு நீதிபதியின் பதவிக் காலம் முடிவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அந்தக் காலியிடத்துக்கான நீதிபதி நியமனம் செய்யப்பட வேண்டும் என்கிறது அந்தச் சட்டம். சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, ஆறு மாதத்திற்கு முன்பே அது தொடர்பான நடவடிக்கையை முடுக்கிவிட்டு, அவரால் தேர்வு செய்யப்படும் நபரைப் பற்றி முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும்.
நிரப்பப்பட வேண்டிய பதவிக்கு ஒருவரைப் பரிந்துரைக்கும் முன்னால், தலைமை நீதிபதி இரண்டு மூத்த நீதிபதிகளிடம் பரிந்துரைக்கப்படுபவர் பற்றிய கருத்தை எழுத்துமூலம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். முதல்வருக்கு அனுப்பும் தகவலுடன் மூத்த நீதிபதிகளின் கருத்தும் இணைக்கப்பட வேண்டும். பரிந்துரைக்கப்படுபவர் தொடர்புடைய முக்கியமான வழக்குகள், அவர் பெற்ற தீர்ப்புகள், அவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் வாதாடியதற்கான சான்றுகள் போன்றவையும் இணைக்கப்பட வேண்டும். முதல்வர் யாரையாவது பரிந்துரைக்க விரும்பினால் அவரது கருத்தை தலைமை நீதிபதிக்குத் தெரிவிக்கலாம்.
மாநில ஆளுநர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பான இந்தப் பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்புவார். ஆறு வாரங்களில், பரிந்துரைக்கப்பட்டவர் பற்றிய தகவல்களை எல்லாம் தீர ஆராய்ந்து, அதை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மத்திய சட்ட அமைச்சகம் அனுப்பும்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, இரண்டு மூத்த நீதிபதிகளின் கருத்தைக் கேட்டுப் பெற்றுத் தனது பரிந்துரையுடன் மீண்டும் சட்ட அமைச்சகத்திற்கு நான்கு வாரத்தில் அனுப்பி வைப்பார். அத்தனை ஆலோசனைகளும் பரிந்துரைகளும் எழுத்துமூலம் இருக்க வேண்டும். அடுத்த மூன்று வாரத்தில் சட்ட அமைச்சகம் அதில் தேர்வு செய்யப்பட்ட பெயர்களைப் பிரதமரின் பார்வைக்கு வைக்கும். பிரதமர் அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பார். அவரது ஒப்புதலைப் பெற்ற பிறகு நியமனம் அறிவிக்கப்பட்டு, அரசிதழில் வெளியிடப்படும்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில், ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி 12 பேரின் பெயர்களை முதல்வரின் பார்வைக்கு அனுப்பி வைத்தார். அந்தப் பட்டியல் ஆளுநர் மூலம் மத்திய சட்ட அமைச்சகத்திற்கும் அனுப்பப்பட்டு விட்டது. சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட பட்டியலில் இருக்கும் பெயர்கள் கசிந்துவிட்டதால் (கசிய விடப்பட்டதால்?) ஏற்பட்டிருக்கும் பிரச்னைதான் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அறையை முற்றுகை இடும் அளவுக்கு வளர்ந்துவிட்டிருக்கிறது.
News Source : DINAMANI
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக