அ.தி.மு.க-வின் கோட்டையாக இருந்த பெரம்பலூர் தொகுதியை கடந்த
மூன்று முறையாக வசப்படுத்தி வைத்திருக்கிறது தி.மு.க.
இந்த முறை இங்கு உதயசூரியன் சார்பில் சீமானூர் பிரபுவும்
இரட்டை இலை சார்பில் மருதராஜாவும் தாமரை வேட்பாளராக இந்திய ஜனநாயகக் கட்சியின்
நிறுவனர் பாரிவேந்தர் என்கிற பச்சமுத்துவும் காங்கிரஸ் சார்பில் முன்னாள்
எம்.எல்.ஏ-வான ராஜசேகரனும் நிற்கின்றனர்.
தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் தொகுதியில் பரவலாக
உள்ள முத்தரையர் வாக்குகளைக் குறிவைக்கின்றன. ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர்,
உடையார் சமூக வாக்குகளைக் குறிவைத்துள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் மருதராஜா இருப்பில் இருந்தது எல்லாம்
காலியாகி, பூர்வீக சொத்தையும் விற்று தேர்தல் செலவு பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
பெரம்பலூரைத் தாண்டி இவர் பிரபலம் இல்லை என்றாலும் அவர் கணிசமான முத்தரையர்
வாக்குகளைப் பெறுவார். பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர் சிவபதி, திருச்சி
புறநகர் மாவட்டச் செயலாளரும் எம்.பி-யுமான ரத்தினவேல் ஆகியோர் திடீர் திடீரென
காணாமல் போய்விடுவதால் திணறுகிறார் மருதராஜா.
தி.மு.க. சார்பில் சீமானூர் பிரபு போட்டியிடுகிறார். இவரை
ஜெயிக்க வைக்க கே.என்.நேரு துடியாய் துடிக்கிறார். சிட்டிங் எம்.பி-யான நடிகர்
நெப்போலியன் தொகுதிப் பக்கமே வராததால் அந்தக் கோபம் தி.மு.க. மீது இருக்கிறது.
முத்தரையர் சமூக வாக்குகள் மூன்று வேட்பாளர்களுக்கும் பிரிந்தாலும் மற்ற சமுதாய
ஓட்டுகள் கணிசமாகத் தி.மு.க-வுக்குக் கிடைக்கும் என கணக்கு போடுகிறார்கள். குரும்ப
கவுண்டர்கள் சங்க ஆதரவு தி.மு.க-வுக்குக் கிடைத்துள்ளதால் கூடுதல் தெம்புடன்
உள்ளது சூரியன் தரப்பு.
தான் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் தாராளம்
காட்டுகிறார் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர். தனது கல்லூரிகளிலிருந்து
பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் என பெரும்படை பெரம்பலூரில் முகாமிட்டு
தேர்தல் வேலைகளைக் கவனித்து வருகிறது. தே.மு.தி.க. தவிர ம.தி.மு.க., பி.ஜே.பி.,
பா.ம.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு வங்கி இல்லை. இது பாரிவேந்தருக்கு
மைனஸ்.
காங்கிரஸ் சார்பில் நிற்கும் ராஜசேகர், தி.மு.க., அ.தி.மு.க.
உள்ளிட்ட கட்சிகளை வெளுத்து வாங்கினார். நாளடைவில் அவரது பிரசார வேகம்
குறைந்துவிட்டது.
தி.மு.க-வுக்கும் ஐ.ஜே.கே., அ.தி.மு.க-வுக்கும்தான் கடுமையான போட்டி. அதில் வேந்தரை
முந்துகிறார் பிரபு.
News Source : VIKADAN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக