புதன், 14 அக்டோபர், 2015

நிர்வாகிகள் நியமனத்தில் அதிருப்தி மாஜி எம்எல்ஏ தலைமையில் அதிமுக அவசர ஆலோசனை ஆலங்குடி அருகே பரபரப்பு


ஆலங்குடி, : நிர்வாகிகள் நியமனத்தில் ஏற்பட்ட அதிருப்தியால், முன்னாள் எம்எல்ஏ  தலைமையில் அதிமுகவினர் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் சமீபத்தில் அதிமுகவில் புதிய  நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஒன்றியத்தை சேர்ந்த  32 ஊராட்சிகளில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு அறந்தாங்கி தெற்கு, வடக்கு ஒன்றியங்களில் செயலாளர் பதவி கொடுக்கப்படவில்லை என்ற அதிருப்தி எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இதுதொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் ஆலங்குடி அடுத்த மேற்பனைக்காடு கிராமத்தில் நடைபெற்றது. இங்குள்ள மழை மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த அவசர ஆலோசனை கூட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏ அரசன் தலைமை வகித்தார். இதில் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளைச் சேர்ந்த  அதிமுக பிரமுகர்கள், ஊராட்சி தலைவர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 
இதில், தலைமைக்குத் தவறான புள்ளி விவரம் கொடுக்கப்பட்டதால், பெரும்பான்மை வகுப்பை சேர்ந்த கட்சியினருக்கு ஒன்றியச் செயலாளர் பொறுப்பு உள்ளிட்ட பிரதிநிதித்துவம் உரியமுறையில் கொடுக்கப்படவில்லை. எனவே, இதுதொடர்பாக சிறப்பு குழு ஒன்று அமைத்து அதன் தலைமையில் ஊராட்சி செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளை 15க்கும் மேற்பட்ட பஸ்களில் சென்னைக்கு அழைத்துச் சென்று, கட்சியின் பொது செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தங்கள் தரப்பு நியாயத்தை சொல்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆலங்குடி அருகே முன்னாள் எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் நடத்திய இந்த ரகசிய ஆலோசனை கூட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News Source : DINAKARAN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக