ஒன்பதாவது முறையாக அமைச்சரவையை மாற்றி மூன்று புதுமுகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. 'அம்மா’வின் பாதம் தொட்டு வணங்கி அமைச்சர்களாக பதவி ஏற்று இருக்கும் பூனாட்சி, வைகைச்செல்வன், கே.சி.வீரமணி ஆகிய மூவரும் கட்சிக்கு வந்த கதையும், வளர்ந்த கதையும் இதோ...
ஒரு கல்... ஒரு கண்ணாடி!
டாக்டர் பட்டம் பெற்ற வைகைச்செல்வன், கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டவர். எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர் என்ற தகுதிகளின் மூலமாக ஜெயலலிதாவின் நேரடி அறிமுகம் ஆரம்பம் முதலே இவருக்கு உண்டு. இலக்கிய அணியை அலங்கரிக்கும் பொறுப்பை அவருக்கு கொடுத்தார். கடந்த தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதி தரப்பட்டது. அசைக்க முடியாத மனிதராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனைத் தோற்கடித்தார். அப்போதே அவர் மந்திரி ஆவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் சசிகலா வட்டாரத்துக்கு நெருக்கமான உதயக்குமார் அமைச்சர் ஆனார். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாநிலச் செயலாளர் பதவியை வைகைச்செல்வனுக்குக் கொடுத்தார் ஜெயலலிதா. அரசு கொறடாவாக யாரைப் போடலாம் என்று பேச்சுவார்த்தை வந்தபோது, 'நம்ம வைகைச் செல்வனை நியமிக்கலாம்’ என்று ஜெயலலிதா சொன்னார். அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றார்.
'சென்னையில் ஒரு கல். மதுரையில் ஒரு கண்ணாடி. இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதுதான் ஒரு கல் ஒரு கண்ணாடி. மக்கள் ஓகே... ஓகே என்று அடித்தார்கள்’ என்று வைகைச்செல்வன் சட்டசபையில் பேச, குலுங்கிக் குலுங்கி சிரித்தார் ஜெயலலிதா. இப்படிப் பல வழிகளில் ஜெயலலிதாவை இம்ப்ரெஸ் செய்தார் வைகைச்செல்வன். பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக வைகைச்செல்வன் பொறுப்பேற்று இருக்கிறார். வைகைச்செல்வனுக்கு பக்கத்து ஊர்க்காரர்தான் முன்னாள் தி.மு.க- ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு என்பது ஒற்றுமை. சில பாடல்களையும் எழுதி இருக்கிறார். 'நானாக நானில்லை தாயே.. நல்வாழ்வு தந்தாயே நீயே...’ இதுதான் வைகைச்செல்வன் செல்போனில் ஒலிக்கும் ரிங்டோன். பொருத்தமானதுதான்!
வெண்தாடி வீரமணி!
எப்போதும் வெண்தாடியுடன் இருக்கும் கே.சி.வீரமணிக்கு, பீடி தயாரிப்புதான் ஆரம்ப காலத் தொழில். தற்போது வேலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரான வீரமணி, தொகுதி சீரமைப்பில் புதிதாக உருவாக்கப்பட்ட ஜோலார்பேட்டை தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினர். இளநிலை வரலாறு படித்தவர். இவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய பா.ம.க. வேட்பாளரான பொன்னுசாமி, ஒரு வகையில் வீரமணிக்கு உறவுக்காரரும்கூட. தூக்குத் தண்டனைக் கைதியாக இருக்கும் பேரறிவாளனின் சொந்த சித்தப்பா மகன்தான் இந்த வீரமணி. இவர்களது குடும்பமே திராவிடர் கழகத்தைச் சேர்ந்தது. 1993-ம் வருடம் வீரமணி, அந்த இயக்கத்தில் இருந்து விலகி, அ.தி.மு.க-வில் இணைந்தார். இப்போது அமைச்சராகிவிட்டார். டாக்டர் விஜய் வகித்துவந்த மக்கள் நல்வாழ்வுத் துறை கே.சி.வீரமணிக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அமைச்சராக பதவி ஏற்பு விழாவுக்குக் கிளம்பிய வீரமணியிடம் அவரது நண்பர்கள், 'அம்மாவைப் பார்க்கப் போறீங்க. தாடியை எடுத்துட்டுப் போங்கண்ணே..’ என்று சொன்னார்களாம். 'தாடியை எடுத்துட்டா, என்னையே எனக்கு அடையாளம் தெரியாதுப்பா... அப்படியே இருக்கட்டும்’ என்று சொல்லி தாடையைத் தடவினாராம்.
மருமகள் வந்த நேரம்!
தங்க நகைகளில் வைக்கப்படும் செயற்கை வைரம் கட் செய்யும் தொழில் செய்துவந்த பூனாட்சி, ஒன்றிய அளவில் அ.தி.மு.க-வில் பல்வேறு பொறுப்புக்களில் இருந்தவர். விவசாயமே இவருடைய பிரதான தொழில். எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் மண்ணச்சநல்லூர் தொகுதியில், தி.மு.க. அமைச்சரான செல்வராஜை எதிர்த்துப் போட்டியிட ஸீட் கொடுத்தார் ஜெயலலிதா. 'என்னிடம் அவரை எதிர்த்து செலவு செய்ய வசதி இல்லைங்கம்மா’ என்று பவ்யமாக சொல்லி இருக்கிறார் பூனாட்சி. 'நீங்க வேலைகளைப் பாருங்க. நான் பார்த்துக்கிறேன்’ என்று சொல்லி அனுப்பினாராம் ஜெயலலிதா. சொன்னபடி வேலைகளைப் பார்த்தார் பூனாட்சி. வெற்றியும் பெற்றார்.
முத்தரையர் சமுதாயத்தில் ஒருவருக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தரவேண்டும் என ஜெயலலிதா முடிவெடுத்ததும், பூனாட்சி பெயரை டிக் செய்திருக்கிறார். கடந்த 13-ம் தேதி தன்னுடைய மகனுக்கு முசிறியில் சிம்பிளாகத் திருமணத்தை நடத்தினார் பூனாட்சி. 'மருமகள் வந்த நேரம்தான் பூனாட்சிக்கு அமைச்சர் யோகம் அடித்திருக்கிறது’ என்பதே ஊரெங்கும் பேச்சு.
சந்தோஷத்தைக்கூட சத்தமாகக் கொண்டாட முடியாமல் இருக்கிறார்கள் புதிய அமைச்சர்கள்
News From (Thanks To) : Thedipaar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக