நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிற நேரத்தில் கட்சிக்காரர்களின் மனநிலையைப் பற்றி முதல்வர் ஜெயலலிதா ஒரு சர்வே நடத்தச் சொன்னார். அதன் ரிப்போர்ட் வந்தது. கட்சித் தொண்டர்களின் ஏக அதிருப்தியை சம்பாதித்த அமைச்சர்கள் பட்டியலைப் பார்த்தார். அதில், முதல் மூன்று இடங்களைப் பிடித்திருந்தவர்கள் சிவபதி, கோகுலஇந்திரா, விஜய். இவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனை மற்ற மந்திரிகளுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாராம் முதல்வர்.''
''ரிப்போர்ட்டைப் படித்த முதல்வர், 'இவர்கள் மூவரும் துறைகளைச் சரிவரக் கவனித்து வந்ததாகத்தானே நான் நினைத்திருந்தேன்?' என்றாராம். அதற்கு உளவுத் துறையினர், 'மேடம், அவர்களின் துறைகளைக் கவனிக்கும் செயலாளர்கள் திறமையானவர்கள். அதனால், உங்களுக்கு நன்றாக நடப்பதாகத் தெரிந்திருக்கும். இந்த மூவரும் கட்சி நிர்வாகிகளை சரிவர மதிக்கவில்லை. அவர்களின் கோரிக்கைகளுக்கே விலைவைத்து வசூலித்ததாகப் புகார்கள்' என்றார்களாம்.''
''நாடாளுமன்றத் தேர்தல் சம்பந்தமாக அ.தி.மு.க. ஆய்வுக் குழு திருச்சிக்கு வந்தபோது, கூட்டம் இல்லையாம். அதுபற்றி சமீபத்தில் சிவபதியிடம் முதல்வரே கோபத்தோடு விசாரித்தாராம். ஆய்வு நடத்த ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் ஆகியோர் திருச்சி சென்றபோது, 'மனசாட்சியோட அம்மாகிட்டே சொல்லுங்க' என்றாராம். இந்த வார்த்தைகள் ஜெயலலிதாவுக்கும் சொல்லப்பட்டுள்ளது. முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவர் கட்சி நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குத் தேவை என்று கேட்டதற்காக ரகசியமாக 10 லகரம் பார்சல் கைமாறியதாம். யார் அனுப்பினார்கள் என்கிற அதிர்ச்சி விவரத்தை ஆட்சி மேலிடத்துக்கு உளவுத் துறை சேகரித்து அனுப்பியதாம். கடந்த தீபாவளி நேரத்தில் அதுவரை நடந்த துறை ரீதியான வசூலில் கூட்டல் - கழித்தல் சரியாக இல்லாததால், சென்னை, திருச்சி, முசிறி ஆகிய இடங்களில் திடீர் ரெய்டும் நடந்ததாம்.''
''அமைச்சர் பதவியில் சிவபதி நீடிக்க வேண்டும் என்பதற்காகவே, சிவபதியின் நலன் விரும்பிகள் செய்த சில கோயில் பரிகாரங்கள் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கிவிட்டதாம். உதாரணத்துக்கு, சென்னையில் ஒரு புது சேர் ஒன்றை சிவபதி வாங்கினாராம். அதில் உட்கார்ந்தால் ராசி எப்படி இருக்கும்? என்று நலன் விரும்பிகள் சீட்டுக் குலுக்கிப்போட்டுப் பார்த்தார்களாம். உட்கார வேண்டாம் எனறு வந்ததாம். அதன்படியே, புது சேரை ஓரங்கட்டிவிட்டு, பழைய சேரிலேயே உட்கார்ந்தாராம் சிவபதி. சென்னிமலை சாமியார் ஒருவர் அடிக்கடி திருச்சி ஏரியாவுக்கு விசிட் அடித்து அமைச்சர் பெயருக்கு யாகம் செய்வாராம். இதேபோல, 15 நாட்களுக்கு ஒரு தடவை சிவபதிக்காக தொட்டியம் புத்தூர் கோயிலில் ஆட்டு கிடாவும் பலியிடப்படுகிறதாம். சிவபதியின் அதிருப்தியாளர்கள் இந்தக் காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்து மேலிடத்துக்கு அனுப்பினார்களாம்.''
''முசிறியைச் சேர்ந்த விவசாய பிரமுகரின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றார்களாம் சிவபதியின் நிழலாக இருக்கும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த இரட்டையர். அதேபோல், தொட்டியம் அருகே இரண்டு வருடம் முன்பு கல் குவாரி ஒன்றில் நடந்த வெடி விபத்தில் இருவர் இறந்தனர். அந்த குவாரியின் உரிமையாளர் மீது வழக்கு நடந்துவந்தது. அமைச்சரின் பெயரைச் சொல்லி சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பிடித்து அந்த வழக்கை பிசுபிசுக்கவைக்கும் படலமும் நடந்ததாம். இதையெல்லாம் உளவுத் துறை மோப்பம் பிடித்துவிட்டது. திருச்சி தில்லை நகரில் உள்ள ஒரு டாக்டர் வீட்டுக்கு அடிக்கடி சிவபதி போய் வருவதையும் நோட் போட்டது உளவுத் துறை. முதல்வரின் தொகுதியான ஸ்ரீரங்கத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சிவபதி, அந்தப் பணியில் விசேஷ அக்கறை செலுத்தவில்லை. ஊரில் இருக்கும்போதுகூட முதல்வரின் தொகுதி அலுவலகத்துக்கு அவர் செல்வது இல்லை. இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, தையற்பயிற்சி வகுப்புகளை நடத்தக்கூட சரிவர ஆள் இல்லை. இந்தத் தொகுதியில் உள்ள ஆறு வார்டுகளில் இதுவரை பெரும்பாலானவர்களுக்கு விலையில்லாத் திட்டங்கள் எதுவும் சென்றடையவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த மொத்த விஷயமும் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுபோனது உளவுத் துறை.''
அமைச்சர் பதவி எந்த நேரத்திலும் பறிபோய்விடும் என்று ஆறு மாதங்களாகவே எதிர்பார்த்திருந்தார் கோகுலஇந்திரா. அவரைப் பொறுத்தவரை அம்மா கொஞ்சம் லேட். பத்திரப் பதிவு மற்றும் வணிக வரித் துறை அமைச்சராக கோலோச்சிய கோகுலஇந்திரா, வந்ததும் வராதுமாய் வாளைச் சுழற்ற ஆரம்பித்தார். வணிக வரித் துறையில் அதிகாரிகள் சிலரை தெற்கு வடக்காய் தூக்கி அடித்து, அதை வைத்தே வளம் தேடிவிட்டார் என்று புகார்கள் பறந்ததால், சுற்றுலாத் துறைக்கு மாற்றப்பட்டார். அப்படியும் அலெர்ட் ஆகாதவர், கான்ட்ராக்ட் சமாசாரங்கள், குடும்ப ஆதிக்கம், அதிகாரத் தோரணை, கோஷ்டி அரசியல் உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி, இப்போது முன்னாள் அமைச்சர் பட்டியலுக்குப் போய்விட்டார்.''
'விளம்பரங்களில் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாகத் தனது படத்தையும் பெயரையும் போடவேண்டும் என்பதில் கவனமாக இருந்தார் கோகுலஇந்திரா. காரைக்குடி விழா ஒன்றில் இது தொடர்பாக ஒரு சர்ச்சை வெடித்து மோதல் வரைக்கும் போனதால்தான், 'இனிமேல் அமைச்சர்கள் உள்ளிட்ட யாருடைய படத்தையும் விளம்பரங்களில் போடக் கூடாது’ என்று ஜெயலலிதா அறிவித்தார். கோகுலஇந்திரா தரப்போ, 'இதுவரை அமைச்சர் பதவியைவிட்டுத் தூக்கப்பட்ட அத்தனை பேருக்கும் கட்சிப் பதவியையும் அம்மா பறிச்சுட்டாங்க. அக்காவுக்கு மட்டும் அமைச்சர் பதவி எடுத்தாலும், அமைப்புச் செயலாளர் பதவி கொடுத்திருக்காங்க’ என்று சொல்கிறார்கள்.''
அடுத்ததாகசுகாதாரத் துறை அமைச்சரும் வேலூர் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர். வி.எஸ்.விஜய் பற்றி உமது நிருபர் எழுதிவந்தார். அமைச்சரின் பெயரைச் சொல்லி அவரது உதவியாளர்கள் நடத்திய அராஜகங்களே விஜய் பதவிக்கு வேட்டுவைத்துவிட்டது. கடந்த எட்டு மாதங்களாகவே வேலூர் மேயர் கார்த்தியாயினிக்கும் விஜய்க்கும் இடையே நேரடியாகவே மோதல் இருந்தது. அமைச்சர் விஜய் நீக்கப்பட்டார் என்ற தகவல் கிடைத்ததும், வேலூர் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் பட்டாசு வெடித்தும், கோயில்களில் தேங்காய் உடைத்தும் கொண்டாடினார்களாம்.''
பல் மருத்துவக் கல்லூரி அனுமதி தொடர்பான சி.பி.ஐ. நடவடிக்கைகளை தொடர்ந்து உமது நிருபர் எழுதி வந்தார் அல்லவா? அதைத்தான் முக்கியமாகச் சொல்கிறார்கள். மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது, அனுமதி கொடுப்பது குறித்த விவகாரங்களில் அதிரடி ரெய்டுகளை சி.பி.ஐ. செய்துவருகிறது. அடிப்படை வசதிகள் இல்லாத இந்தக் கல்லூரிகளுக்கு கரன்சியைப் பார்த்து அனுமதிகொடுத்தார்கள். சென்னையைச் சேர்ந்த டாக்டர் முருகேசன், டாக்டர் குணசீலன் ராஜன் ஆகிய இருவரும் கைதானார்கள். இந்த டீலிங் சிலவற்றில் விஜய் பெயரை சிலர் பயன்படுத்தி ஆதாயம் அடைந்துள்ளதாக சி.பி.ஐ-க்கு சந்தேகம். இது தொடர்பான சில முக்கிய ஆதாரங்களை சி.பி.ஐ. எடுத்துவிட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகும்போது விஜய் பெயரும் அதில் இருக்கலாம். இதுசம்பந்தமாக விஜய்யை நேரில் அழைத்து விசாரித்தாராம் முதல்வர். அதன் பிறகு மறைக்கும் சில காரியங்களை மறைமுகமாகச் செய்துள்ளார் விஜய். இது முதல்வருக்கே சந்தேகத்தைக் கிளப்ப ஆரம்பித்தது. எனவேதான் விஜய் உடனடியாக நீக்கப்பட்டார் என்கிறார்கள். மேலும், சசிகலா குடும்பத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான டாக்டர் வெங்கடேஷ§டன் அதிகப்படியான நெருக்கம் காட்டியவர் விஜய் என்பதும் கூடுதலான தகவல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக