இந்நிலையில் சிவபதியிடமிருந்து பறிக்கப்பட்ட, திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க, முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் எம்.எல்.ஏ.,வும் களத்தில் இறங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விரைவில் வரவுள்ள, லோக்சபா தேர்தலை மனதில் கொண்டே, முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க.,வில் கட்சி பதவிகளை மாற்றி வருகிறார். அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரே, புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது. ஆகையால் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பரஞ்ஜோதி, கே.கே.பாலசுப்பிரமணியன், அண்ணாவி, முன்னாள் எம்.எல்.ஏ., பிரின்ஸ் தங்கவேல் ஆகியோரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று சூழல் உருவாகியுள்ளது. இதில் கடைசி நேரத்தில் மாற்றம் இருக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அநேகமாக முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் தான் மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கிறோம். இவர்களில், முன்னாள் அமைச்சர்களில் அண்ணாவி, செயல்பாடுகளில் மந்தமானவர் என்பது கட்சித்தலைமை உள்பட, அனைவருக்கும் தெரிந்த விஷயம்.அதே சமுதாயத்தைச் சேர்ந்த மற்றொரு முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்பிரமணியன், ஒரு ஆண்டுக்கு முன் திடீரென மாவட்ட செயலாளர் பதவியை இழந்தவர். முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி மீது, பெண் டாக்டரை மோசடி செய்ததாக வழக்கு நிலுவையில் உள்ளதால், வழக்கு முடியும் வரை, அவருக்கு பதவி கிடைப்பது சந்தேகம். அடுத்ததாக முன்னாள் எம்.எல்.ஏ., பிரின்ஸ் தங்கவேலும், மாவட்ட செயலாளர் பதவி ரேஸில் உள்ளார்.ஆனால் அவர், 2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க.,வின் அதிகாரபூர்வ வேட்பாளர் மல்லிகாவை எதிர்த்து, சுயேட்சையாக போட்டியிட்டார். மேலும், 2006ல் எம்.எல்.ஏ., தேர்தலில், தற்போதைய அமைச்சர் பூனாட்சிக்கு எதிராக முசிறியில் வேலை பார்த்தார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஆகையால் இவருக்கு வாய்ப்பு குறைவு. மேற்கண்ட முன்னாள் அமைச்சர்கள் மூவரில் ஒருவருக்கே மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் சூழல் உள்ளது.இவர்களைத் தவிர, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சுப்பு (எ) சுப்பிரமணியன், ரத்தினவேல் ஆகியோரும் மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க முயற்சிக்கின்றனர். கட்சித்தலைமை யாரை நியமித்தாலும், அவர் தொண்டர்களை அரவணைத்து செல்லக்கூடியவர்களாக இருக்கவேண்டும் என்பதே, எங்களின் எதிர்பார்ப்பு.இவ்வாறு அவர்கள் கூறினர்.முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதி வரும், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பதவி யாருக்கு கிடைக்கும் என்பது, திருச்சி மாவட்ட, அ.தி.மு.க.,வினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக