லோக்சபா தேர்தலை சந்திக்க, அரசியல் ரீதியாக, பலம் வாய்ந்த கூட்டணி அமைக்காமல், சமுதாய சங்கங்களை அழைத்துப் பேசி, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார், முதல்வர் ஜெயலலிதா. அதன் தொடர்ச்சியாக, ஏழு சமுதாய சங்கங்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. இதன்மூலம், ஜாதி பலத்தை நம்பி, சமூக ஜனநாயக கூட்டணி ஏற்படுத்தியுள்ள, பா.ம.க.,வின் திட்டத்துக்கு அ.தி.மு.க., "செக்' வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டணி பலத்தை நம்பாமல், கம்யூனிஸ்ட் கட்சிகளை மட்டும், துணைக்கு வைத்துக்கொண்டு, லோக்சபா தேர்தலை சந்திக்கும் திட்டத்தில், அ.தி.மு.க., தலைமை இருக்கிறது. அதற்கு நேர்மாறாக, தி.மு.க.,வின் கணக்கு இருக்கிறது. தி.மு.க., தலைமையில், வலுவான கூட்டணி அமையும்பட்சத்தில், அ.தி.மு.க.,வால், அதை சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இச்சூழ்நிலையில், அ.தி.மு.க.,வும் தேர்தல் கணக்கை பார்க்கத் துவங்கியுள்ளது. தன்னிடம் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளால், கிடைக்கக்கூடிய ஆதாயம் என்ன? அது மட்டுமே, தன் இலக்கான, "நாற்பதிலும் வெற்றி' என்ற நிலையை அடைய முடியுமா என, ஆளும் தரப்பில் நடத்தப்பட்ட ஆய்வில், சாதக, பாதக பலன்கள் தெரியவந்துள்ளன.கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டால், தமிழகத்தில், சிறுபான்மையினர் மற்றும் தலித் சமுதாய ஓட்டுக்களை கணிசமாக பெற முடியும் என்பது, சாதக அம்சங்களில் முக்கியமானது. மிகப் பெரிய ஓட்டு வங்கிகளாக கருதப்படும், இவ்விரண்டு சமுதாயத்தை சேர்ந்தவரின் ஆதரவு போல், மற்ற பெரிய சமுதாயத்தின் ஆதரவும் கிடைத்து விட்டால், தேர்தல் இலக்கை அடைய முடியும் என்று அ.தி.மு.க., தலைமை நம்புகிறது.
எனவே, அதற்கான நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா துவக்கியுள்ளதாக, ஆளும் கட்சி வட்டாரம் தெரிவித்தது. எந்த கூட்டணியிலும் சேராமல், தனித்துப் போட்டியிடப் போவதாக, அறிவித்துள்ள ராமதாஸ், ஜாதி பலத்தை தான் முழுமையாக நம்பியிருக்கிறார்.வன்னியர் மட்டுமல்லாது, மற்ற சில, பெரிய சமுதாயத் தலைவர்களை அழைத்துப் பேசி, "சமூக ஜனநாயக கூட்டணி' ஏற்படுத்தி உள்ளார். ஆனால், அவர்களுக்கு இடையே, ராமதாஸ் எதிர்பார்க்கும் ஒற்றுமை இருக்குமா என்பது தெரியவில்லை.இந்நிலையில், அந்த கூட்டணிக்கு, "செக்' வைக்கும் விதமாகவும், தன் கட்சிக்கு சமுதாய ரீதியாக ஆதரவு திரட்டவும் ஜெயலலிதா, அதிரடி திட்டத்தை கையில் எடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள, மிகப் பெரிய சமுதாயங்களை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை அழைத்துப் பேசி வருகிறார். அவர்களது கோரிக்கைகள், பிரச்னைகள், நீண்ட காலமாக கிடப்பில் உள்ள யோசனைகள் என, ஒவ்வொன்றையும் கேட்டறிந்து, நிறைவேற்றி தருவதாக, உத்தரவாதம் கொடுக்கிறார்.
சிலை, நினைவகம், மணிமண்டபம் போன்றவற்றுக்கு உடனடியாக உத்தரவுகள் பிறப்பிக்கிறார். அதற்கு பிரதிபலனாக, லோக்சபா தேர்தலில், ஆதரவு அளிக்கும்படி கேட்கிறார். படுகர், ரெட்டியார் சமுதாயத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை அழைத்து, ஜெயலலிதா சமீபத்தில் பேசியுள்ள தகவல் தெரியவந்துள்ளது. மேலும், நாயுடு, நாடார், முதலியார், முத்தரையர், யாதவர் உள்ளிட்ட, ஏழு சமுதாய சங்கங்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி வட்டாரத்தில், இது குறித்து கூறப்படுவதாவது:கட்சிகளை நம்பாமல், மக்களை நம்பி, லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., களம் இறங்குகிறது. ஒவ்வொரு சமுதாயத்துக்கும் தீர்க்கப்படாத பிரச்னைகள் இருக்கும். அதை அறிந்து கொள்வதற்கும், அவற்றை நிறைவேற்றுவதற்கும் இதை வாய்ப்பாக, பயன்படுத்திக்கொள்ள முடியும் என, முதல்வர் கருதுகிறார். சமுதாய சங்க நிர்வாகிகள் மத்தியிலும், முதல்வரின் இந்த முயற்சிக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. கோரிக்கைகளை செய்து கொடுத்து, ஆதரவு திரட்டும் புதிய முயற்சி, நிச்சயம் அ.தி.மு.க.,வுக்கு கை கொடுக்கும்.சந்தித்துப் பேசுவதற்கு முன், அந்த சமுதாயத்தின் கோரிக்கை விவரத்தை அனுப்பும்படி, அரசிடம் இருந்து சொல்லப்படுகிறது. அந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றில் எதை ஏற்கலாம் என்பதை தீர்மானித்த பின், அந்த சமுதாய பிரமுகர்களை அழைத்து, ஜெயலலிதா பேசுகிறார்.
கம்மவார் நாயுடு சமுதாயம் சார்பில், வீரபாண்டிய கட்டபொம்மன், திருமலை நாயக்கர் ஆகியோருக்கு சென்னையில் சிலை; கம்மவார் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், பார்லிமென்ட் தேர்தலில் பிரதிநிதித்துவம் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.ரெட்டியார் சமுதாயம் சார்பில், காவடிசிந்து அருணாச்சல ரெட்டியாருக்கு சிலை; ஓமந்தூராருக்கு மணிமண்டபம் போன்ற கோரிக்கைகள் கூறப்பட்டுள்ளன. இப்படி, ஒவ்வொரு சமுதாயம் சார்பில், தரப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுத் தருவதாக, வாக்குறுதி கூறியும், உத்தரவுகள் பிறப்பித்தும், லோக்சபா தேர்தலில், ஜெயலலிதா ஆதரவு திரட்டி வருகிறார்.இவ்வாறு, ஆளும் கட்சி வட்டாரம் கூறியது.
1 கருத்து:
நல்ல செய்தி பிற சமுதாயத்தினர் ஒற்றுமையுடன் தமது கோரிக்கயை முன் வைக்கிறார்கள் இதில் நம் சமுதாயத்தினர் ஒன்றுக்கு மேல் தலைவர்கள் மற்றும் கட்சிகள் தெறிகின்றது ......?
கருத்துரையிடுக