சி. பி. சிற்றரசு (செப்டம்பர் 4, 1908 - பெப்ரவரி 16, 1978) ஒரு தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் மேடைப் பேச்சாளர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் அவைத் தலைவராகப் பணியாற்றியவர். பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்திலும் பின்னர் அண்ணாதுரையின் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் மேடைப் பேச்சாளராகப் புகழ் பெற்றவர். “சிந்தனைச் சிற்பி” என்ற பட்டமும் பெற்றவர்.
இவரது இயற்பெயர் சின்னராஜ். காஞ்சிபுரத்தில் பெத்தசாமி நாயுடு -இலட்சுமி அம்மாளுக்கு 1908ம் ஆண்டு பிறந்தார். கு. மு. அண்ணல் தங்கோவின் தாக்கத்தால் தன் பெயரை சிற்றரசு என்று மாற்றிக் கொண்டார். 1930கள் முதல் அண்ணாதுரையுடன் இணைந்து நீதிக்கட்சியில் பணியாற்றத் தொடங்கினார். 1949ல் அண்ணா திமுகவை உருவாக்கிய போது அதில் இணைந்தார். 1953ல் தீப்பொறி என்னும் இதழைத் தொடங்கினார். பின் 1959ல் இனமுழக்கம் என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1950களில் ஓராண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனத்தில் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றினார்.
சிற்றரசு மொத்தம் 23 நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் நூல் ”சிந்தனைச் சுடர்”. பின் எமிலி ஜோலா, விடுதலை வீரன், சினத்தின் குரல், சுதந்திரத் தந்தை ரூசோ, சாக்கியச் சிம்மன், மார்ட்டின் லூதர், சரிந்த சாம்ராஜ்யங்கள், உலகை திருத்திய உத்தமர்கள் போன்ற வரலாற்று நூல்களும் தங்க விலங்கு, போர்வாள், இரத்த தடாகம், சேரனாட்டதிபதி முதலான வரலாற்று நாடகங்களையும் எழுதியுள்ளார். 1960ம் ஆண்டு வெளியான ஆட வந்த தெய்வம் படத்துக்கு வசனமும் எழுதியுள்ளார்.
திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினராக இருந்த சிற்றரசு, அதன் அதிகாரப்பூர்வ இதழான “நம் நாடு” இன் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1957 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக திருப்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1962 சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1970ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் தலைவரானார். 1976 வரை அப்பதவியில் இருந்தார். 1976ல் மு. கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுக வில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 1978 இல் நொய்வாய்பட்டு மரணமடைந்தார். 1989ல் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு இங்கே மரியாதைக்கு உரிய திரு. திருமேனி அவர்கள் எழுதிய செய்திக்கு திரு. வேலூர் சண்முகம் "முத்தரையர் இணையத்தில்" வெளியிட்டுள்ள சில கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக