பெரம்பலூர் தொகுதி 2009-ல் பொதுத்
தொகுதியானது. முத்தரையர், உடையார், தாழ்த்தப்பட்டோர், ரெட்டியார், வெள்ளாளர்,
செட்டியார் உள்ளிட்ட சமூகத்தினரின் வாக்குகளைக் கொண்ட தொகுதியில், கிறிஸ்தவர்,
இஸ்லாமியர்களும் கணிசமாக உள்ளனர்.
இதுவரை நடைபெற்ற 15 தேர்தல்களில்
திமுக 7 முறையும், அதிமுக 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும், டி.என்.டி.கட்சி ஒரு
முறையும் இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.
1952-ல் டி.என்.டி. கட்சியைச் சேர்ந்த
பூவராகசாமி, 1957, 1980-ல் காங்கிரஸைச் சேர்ந்த பழனியாண்டி, கே.பி.எஸ். மணி, 1962,
67,71-ல் திமுகவைச் சேர்ந்த இரா. செழியன், ஏ. துரைராசு, 1977-ல் அதிமுகவைச்
சேர்ந்த ஏ. அசோக்ராஜ், 1984-ல் எஸ். தங்கராஜ், 1989,91-ல் அசோக்ராஜ், 1998-ல் ப.
ராசரத்தினம், 1996,1999,2004-ல் திமுகவின் ஆ. ராசாவும், 2009-ல் து. நெப்போலியனும்
இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர்.
இத்தொகுதியில் பெரம்பலூர்
மாவட்டத்திலுள்ள பெரம்பலூர் (தனி), திருச்சி மாவட்டத்திலுள்ள மண்ணச்சநல்லூர்,
லால்குடி, முசிறி, துறையூர் (தனி) மற்றும் கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை ஆகிய 6
தொகுதிகள் அடங்கியிருக்கின்றன. இத்தொகுதியிலுள்ள முசிறி, மண்ணச்சநல்லூர்,
லால்குடி, குளித்தலை தொகுதிகள் விவசாயத் தொழிலைச் சார்ந்தவை.
காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு
வழங்கப்படும் சலுகைகள் போன்று இப்பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை என்ற
புகார் நீண்ட நாள்களாக உள்ளது. வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய, குறிப்பிட்டு
சொல்லும்படியான தொழிற்சாலைகளும் இத்தொகுதியில் இல்லாதது பெரும் குறை.
இத்தொகுதியில் 1996,1999,2004-ம்
ஆண்டுகளில் வென்ற ஆ. ராசாவால் (திமுக) கொண்டுவரப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி
அடிக்கல் நாட்டியதுடனும், 3000 ஏக்கரில் சிறப்புப் பொருளாதார மண்டலம், விவசாயிகளின்
நிலம் கையகப்படுத்தலுடன் நின்றுவிட்டன.
நாமக்கலிலிருந்து துறையூர்-
பெரம்பலூர் வழியாக அரியலூர் வரை செல்லும் புதிய ரயில்பாதைத் திட்டம் தொடங்கப்படும்
என்பது இன்றுவரை அறிவிப்பாகவே உள்ளது.
தமிழகத்தில் சிறிய வெங்காய
உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அளவு பெரம்பலூர் மாவட்டத்திலிருந்துதான் உற்பத்தி
செய்யப்படுகிறது. வெங்காயத்தை பாதுகாக்க செட்டிக்குளத்தில் குளிர்ப்பதன கிடங்கும்,
எளம்பலூரில் தானியக் கிடங்கும் கட்டப்பட்டு இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
மண்ணச்சநல்லூர் தொகுதியிலுள்ள
நொச்சியம் பகுதியிலிருந்து ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில்
தரைப்பாலம் அமைக்க வேண்டும், மண்ணச்சநல்லூரில் அரசுக் கலை அல்லது பொறியியல்
கல்லூரி அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
கரூர் சாலையிலுள்ள குளித்தலையில்
பேருந்து நிலையம் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதை நவீனப்படுத்துவது அல்லது
வேறு இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதும் மக்களின் நீண்ட நாள்
கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது.
விவசாயத் தொழில்சார்ந்த லால்குடி
பகுதியில் பருத்தி உற்பத்தியும் அதிகளவில் நடைபெறுகிறது. ஆனால் அவற்றை முறையாக
கொள்முதல் செய்வதற்கான வசதிகள் இல்லை.
முசிறி தொகுதிக்குள்பட்ட பகுதியில்
வாழையும், பெரம்பலூர், துறையூரின் பல்வேறு பகுதிகளில் எலுமிச்சையும் அதிகளவில்
சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் அவற்றை சந்தைப்படுத்துவதற்கான வளாகம் தேவை, மேலும்
இவற்றை சேமித்து வைப்பதற்கான குளிர்பதன கிடங்கு தேவை என்பதோடு இத்தொகுதியில்
பரவலாக குடிநீர் தட்டுப்பாடும் தீர்க்கப்பட வேண்டிய கோரிக்கையாகத் தொடர்கிறது.
4 முனைப் போட்டி: திமுக சார்பில்
சீமானூர் ச.பிரபு, அதிமுக சார்பில் ஆர்.பி. மருதராஜா, இந்திய ஜனநாயகக் கட்சி
சார்பில் பாரிவேந்தர் டி.ஆர். பச்சமுத்து, காங்கிரஸ் சார்பில் ம. ராஜசேகரன்
ஆகியோர் களத்தில் உள்ளவர்களில் முக்கியமானவர்கள். இதில் பச்சமுத்து உடையார்
சமூகத்தைச் சேர்ந்தவர். மற்ற மூவரும் முத்துராஜா சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு,
ஆ. ராசா முன்னெடுத்துச் சென்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை
எடுப்பேன் என திமுக சார்பில் வெற்றி பெற்று மத்திய அமைச்சரான து. நெப்போலியன்
தெரிவித்தார். ஆனால், சில நிகழ்வுகளைத் தவிர தொகுதி பக்கமே தலைகாட்டாமல்
இருந்ததால் நெப்போலியன் மீதான அதிருப்தி தொகுதி முழுவதும் இருக்கிறது.
ஆனால், திமுக சார்பில் சீமானூர் பிரபு
நெப்போலியன் போன்று இருக்கமாட்டார். உங்கள் குறைகளைத் தீர்க்கக்கூடியவராக
இருப்பார் எனக் கூறி மாவட்டச் செயலர் கே.என். நேரு தலைமையில் பிரசாரம்
செய்கின்றனர்.
தொகுதியில் தலித், சிறுபான்மை
வாக்குகள் குறிப்பிட்டத்தக்க அளவில் இருப்பதாலும், திமுக வேட்பாளர் முத்துராஜா
சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பதாலும் எளிதில் வாக்குகளை பெற்றுவிடலாம் என்ற
நம்பிக்கையில் உள்ளனர் திமுகவினர்.
அதிமுக அரசின் விலையில்லா திட்டங்கள்,
சென்ற முறை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பின்னர் வாய்ப்பு இழந்தவர், எளிமையானவர்
போன்றவற்றை வைத்து அதிமுகவினர் பிரசாரம் செய்கின்றனர். தொகுதியிலுள்ள அதிமுகவின்
வாக்குவங்கி நிச்சயம் கைகொடுக்கும், மேலும் திமுகவினர் சென்ற 5 ஆண்டுகளில்
தொகுதிக்கு எவ்வித திட்டங்களையும் கொண்டு வராதது போன்றவற்றை மையப்படுத்தி பிரசாரம்
செய்கின்றனர் அதிமுகவினர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலுள்ள இந்திய
ஜனநாயகக் கட்சியின் நிறுவனரான பாரிவேந்தர் டி.ஆர். பச்சமுத்து இத்தொகுதியில் களம்
காண்கிறார். லால்குடி தொகுதியிலுள்ள தமது உடையார் சமூக வாக்குகள் முழுமையாகக்
கிடைக்கும் என்பது மட்டுமல்லாது, தொகுதியிலுள்ள பா.ஜ.க., மதிமுக, தேமுதிக, பாட்டாளி
மக்கள் கட்சி வாக்குகளும் தமக்கு பெரும் பலத்தை தரும் என்ற நம்பிக்கையில் அவர்
உள்ளார்.
மேலும், இளம் தலைமுறையினர், மத்திய
காங்கிரஸ் ஆட்சி மீது எதிர்ப்பில் உள்ளவர்கள் மாற்றம் வேண்டும் என்பதற்காக
வாக்களிக்க உள்ளோம் என்பதைத் தெரிவித்து வருவதால், அந்த வாக்குகளைப் பெற முடியும்
என நம்புகிறது ஐஜேகே.
காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மா.
ராஜசேகரன் முத்தரையர் சமூக வாக்குகளையும், காங்கிரஸுக்கு என்று உள்ள வாக்குகளையும்
பெறுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஏற்கெனவே சட்டப்பேரவை உறுப்பினராக
இருந்ததால், தான் நிறைவேற்றிய பணிகளைக் கூறி வாக்குகேட்கிறார் இவர்.
தமிழக முதல்வரின் பிரசாரம்,
அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாதது,தொகுதியிலுள்ள
அதிமுக வாக்குவங்கி போன்றவை கைகொடுக்கும் என அதிமுகவினரும், பாஜக, தேமுதிக,
மதிமுக, பாமக வாக்குவங்கியும், நரேந்திர மோடியின் தமிழக பிரசாரமும் கைகொடுக்கும்
என இந்திய ஜனநாயகக் கட்சியினரும் நம்பிக்கையில் உள்ளனர்.
பெரம்பலூர் தேர்தல் களத்தில் திமுக,
அதிமுக, இந்திய ஜனநாயகக்கட்சி சரிசமப் போட்டியில் உள்ளது. இதில் கடைசி நேர
"பிரசார யுக்தி' மாற்றத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக