தஞ்சை லோக்சபாவில் அ.தி.மு.க., பா.ஜ., மார்க்.கம்யூ., வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துவிட்டனர். இன்னும், தி.மு.க., மற்றும் காங்., வேட்பாளர்கள் மனு செய்யவில்லை. இவர்கள், இருவரும் இன்று (4ம் தேதி) மனுதாக்கல் செய்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தஞ்சை மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்பையன், தஞ்சை லோக்சபாவில் மனுத்தாக்கல் செய்ய வரும் கட்சியினர், சுயேட்சைக்காக தனது அறையில் காத்திருந்தார்.
தஞ்சை வடக்கு பூக்கொல்லையைச் சேர்ந்த நமது மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி,48, என்பவர், நேற்று மதியம் 12.15 மணியளவில் ஆதரவாளருடன் வந்து, முதலில் மனுத்தாக்கல் செய்தார். தொடர்ந்து, தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு ஆம்பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாரத மனித உரிமை பாதுகாப்பு கழக மாவட்டத்தலைவர் ஜவஹர், 41, சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்ய கலெக்டர் அலுவலகம் வந்தார்.
அப்போது, ஜவஹர், ஆளுயர ரோஜா மாலையை தான் அணிந்தபடி நுழைவாயில் வழியாக உள்ளே வந்தார். இதை எதிர்பாராத, பாதுகாப்பு போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி மாலையை கழட்டுமாறு கூறி, பிறகு அனுப்பி வைத்தனர். பின்னர், விதிமுறைப்படி உரிய விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து வருமாறு அறிவுறுத்தி, அவரை கலெக்டர் அனுப்பி வைத்தார்.
இதையடுத்து, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள மேலபழஞ்சூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ், 28, சுயேட்சையாக நேற்று மனுத்தாக்கல் செய்தார். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முழுவதும் சுயேட்சை மற்றும் அவரது ஆதரவாளர்கள் நடமாட்டமே காணப்பட்டது.
மனுத்தாக்கல் நிகழ்ச்சியில், அன்னிய நபர் நுழையாமல் இருக்கவும், அசம்பாவிதம் தவிர்க்கவும் கலெக்டர் அலுவலக நுழைவாயில், வளாகம் முழுவதும் கேமிரா கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. இதை தனது அறையில் இருந்து கலெக்டர் சுப்பையன் மற்றும் கலெக்டர் பி.ஏ., நடராஜன் ஆகியோர் கம்ப்யூட்டர் திரையில் நேரடியாக, கவனிக்கவும் பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை டவுன் டி.எஸ்.பி., கண்ணன் தலைமையில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மீடியா கட்டுப்பாட்டு அறையில், நெரிசல் நிலவியதால், பிற பிரிவுகளை வேறு அறைக்கு இடம்மாற்றி, கலெக்டர் சுப்பையன் நடவடிக்கை எடுத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக