அந்த தேர்தலில் திருச்சி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் ப.குமார் 2,98,710 வாக்குகளும், சாருபாலா தொண்டைமான் (காங்கிரஸ்)–2,94,375 வாக்குகளும், விஜய்குமார் (தே.மு.தி.க) 61,742 வாக்குகளும், லலிதா குமாரமங்கலம் (பா.ஜ)30,329 வாக்குகளும், ரவி (மக்கள் மாநாட்டு கட்சி) 5,016 வாக்குகளும், கல்யாணசுந்தரம் (பகுஜன் சமாஜ்) 4,897 வாக்குகளும் பெற்றனர்.
தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் திருச்சி பாராளுமன்ற தொகுதி சந்தித்த முதல் தேர்தல் 2009 தேர்தல் ஆகும்.
தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சிக்கு என்று நீண்ட நெடிய வரலாறு இருப்பது போல் திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கும் பழமையான வரலாறு உண்டு.
கம்யூனிஸ்டு கட்சியின் மறைந்த மூத்த தலைவர்கள் அனந்தன் நம்பியார், எம்.கல்யாண சுந்தரம், பாரதீய ஜனதா ஆட்சியில் மந்திரியாக இருந்து மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலம் ஆகியோர் திருச்சி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி இருக்கிறார்கள்.
4 முறை காங்கிரஸ் வெற்றி
இதுவரை நடைபெற்ற 15 பாராளுமன்ற தேர்தல்களில் (2001 இடைத்தேர்தல் உள்பட) திருச்சி தொகுதியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 4 முறையும், பாரதீய ஜனதா, அ.தி.மு.க கட்சிகள் தலா 2 முறையும், தி.மு.க, த.மா.கா, ம.தி.மு.க கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளன.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், கந்தர்வக்கோட்டை(தனி), புதுக்கோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்று உள்ளன.
2011 சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் முதல் அமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்றார். திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக அரசு தலைமை கொறடா மனோகரன் (அ.தி.மு.க), திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பரஞ்சோதி (அ.தி.மு.க), திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக செந்தில்குமார் (தே.மு.தி.க), கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக அமைச்சர் சுப்பிரமணியம் (அ.தி.மு.க), புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக கார்த்திக் தொண்டைமான் (அ.தி.மு.க) உள்ளனர்.
13½ லட்சம் வாக்காளர்
திருச்சி பாராளுமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 13,53,501 ஆகும். இதுகடந்த 2009 தேர்தலில் இருந்த வாக்காளர் எண்ணிக்கையை விட 2 லட்சத்து 87 ஆயிரத்து 103 அதிகம் ஆகும்.
கடந்த பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ப.குமார் பல வாக்குறுதிகளை கொடுத்து இருந்தாலும் அவற்றில் முக்கியமானது திருச்சி ஜங்ஷன் ரெயில்வே பாலத்தை விரிவுபடுத்தி கட்ட நடவடிக்கை எடுப்பேன் என்பதாகும். தேர்தலில் போட்டியிடும் போது வாக்குறுதியாக இதை அவர் தெரிவித்தார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இந்த பணி தொடங்கப்படாமல் இருந்தது.
கடந்த மாதம் தேர்தல் அறிவிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக இந்த பாலம் வேலை தொடங்கப்பட்டு உள்ளது. இதுபற்றி குமார் எம்.பி. கூறும் போது,‘‘இந்த பாலம் கட்டும் பணி மத்திய, மாநில அரசுகள் இணைந்து செய்ய வேண்டியது. மத்திய அரசு தான் இந்த பணியை தொடங்காமல் தாமதம் செய்து வந்தது. மாநில அரசை பொறுத்தவரை நிலம் கையகப்படுத்துதல் உள்பட அனைத்து பணிகளையும் நிறைவேற்றி கொடுத்து விட்டது. மத்திய அரசால் தான் பாலம் கட்டும்பணி இப்போது தாமதமாக தொடங்கி உள்ளது’’ என்றார்.
சாதிகள் பலம்
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் முத்தரையர், வெள்ளாளர், கள்ளர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் அதிக அளவில் உள்ளனர். நாடார், நாயுடு, செட்டியார், யாதவர் சமூகத்தினர் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். திருச்சி மாநகர பகுதியில் வசிக்கும் மக்கள் சாதி, மதம் இவற்றிற்கு அப்பாற்பட்டு உள்ளனர். எனவே திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை சாதியை வைத்து யார் அதிக வாக்கு பெறுவார்கள் என மதிப்பிட முடியாது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் முத்தரையர் சமூகத்தினர் அதிக அளவில் வசிப்பதால் அவர்களே அங்கு வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளனர். திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் பாரத மிகு மின் நிலையம், துப்பாக்கி தொழிற்சாலை ஆகிய பெரிய தொழிற்சாலைகள் மற்றும் ஏராளமான சிறிய தொழிற்சாலைகள் இருப்பதால் இங்கு தொழிலாளர்களின் வாக்கு வங்கியை பெறும் கட்சி வேட்பாளரே அதிக வாக்கு பெற முடியும்.
புதுக்கோட்டை தொகுதியில் கள்ளர் மற்றும் முத்தரையர்கள் அதிக அளவில் வசிப்பதால் அவர்களது வாக்குகளை பெறும் வகையில் அரசியல் கட்சியினர் செயல்பட்டு வருகிறார்கள். கந்தர்வக்கோட்டை தொகுதியில் கள்ளர், தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கி வருகிறார்கள்.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சினை திருச்சியில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கவேண்டும் என்பதாகும். மேலும் மூடப்பட்ட நிலையில் கிடக்கும் சிறிய தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அடுத்த பிரச்சினையாக உள்ளது.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் தற்போது அ.தி.மு.க. வசம் உள்ளது. திருவெறும்பூர் மட்டும் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த தே.மு.தி.க. வெற்றி பெற்ற தொகுதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக