தஞ்சாவூர்
ஒரு புராதானமான நகரம், தமிழ் பல்கலைக்கழகம் செய்த ஆய்வில் 10,000 ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் இங்கே வாழ்ந்ததற்கான சுவடுகள் கிடைத்து
உள்ளது. தஞ்சையின் உண்மையான வயதை யாராலும் இன்றும் அறுதியிட்டு
கூறமுடியவில்லை.எப்படி பார்த்தாலும் இது 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு நகரம்
என்பதை உறுதியாக கூறலாம். தஞ்சை என்ற சொல் எப்படி வந்தது என்பதற்கு பல்வேறு
காரணங்கள் கூறபடுகிறது.தஞ்சையை ஆண்ட தஞ்சைய முத்தரையன் என்பவரின் பெயரால் வந்தது
என்றும், எங்கே வறட்சி என்றாலும் செழிப்பான தஞ்சைக்கு சென்றால் நிம்மதியாக
வாழ்க்கை நடத்தலாம் என்று அந்த காலத்தில் மக்கள் தஞ்சம் புகுந்ததால்
என்றும்,தன்சாய் என்பது ஒருவகை கோரையின் பெயர், கோரைகள் மிகுந்த இடம் என்பதால்
தஞ்சை என்று ஆகி இருக்கலாம் என்றும் தஞ்சை அருகில் உள்ள சில பெயர்களில் கூட இந்த
கோரை என்ற பெயரை காணலாம் உதாரணமாக மானங்கோரை, தன்டாங்கோரை என்பன போன்ற பல்வேறு
காரணங்கள் கூறபடுகிறது.
சிறப்பு
மிக்க தஞ்சை நகரம் முத்தரையர்கள், சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள்,
மராட்டியர்கள், ஆங்கிலேயர்கள் என பல்வேறு இனத்தவரையும், பல்வேறு மன்னர்களையும்
கண்டு உள்ளது. இப்படி வரலாற்று சிறப்பு மிக்க தஞ்சையின் பழைய அமைப்பை கண்டறிய
போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம், பிற்கால படையெடுப்பில்
தஞ்சை நகரம் தீயிட்டு கொளுத்தப்படதே காரணம். ஆனால் ராஜராஜ சோழன் ஆட்சிகாலத்தில்
தஞ்சையின் நகரின் அமைப்பை அறிய நமக்கு கிடைத்த குறிப்பிடதகுந்த சான்று என்று
சொன்னால் அது கருவூர்த்தேவரின் திருவிசைப் பாடல் வரிகள் தான். அதன் மூலம் ஓரளவு
நாம் நகர அமைப்பை அறிய முடிகிறது. அது என்ன வரிகள் என்றால்
“………………….மறிதிரை வடவாற்று
இடுபுனல் மதகில் வாழ் முதலை
எற்றுநீர்க் கிடங்கில் இஞ்சிசுழ் தஞ்சை “
இந்த பாடல் வரிகள் மூலம் தஞ்சையில் பெரிய கோட்டை
இருந்தமையும்,கோட்டையை சுற்றி பெரிய அகழி இருந்ததையும்,இந்த அகழிக்கு வடவாற்றில்
இருந்து நீர் வந்ததையும்,நீருடன் சேர்த்து முதலைகளும் அகழிக்கு வந்து,கோட்டைக்கு
பாதுகாப்பு அரணாக இருந்தது என்பதும் தெளிவாகிறது.
ராஜ
ராஜ சோழன் காலதில் தஞ்சாவூர் உள்ளாலை (City) மற்றும் புறம்படி (Sub
urban) என்று பிரிக்கப்பட்டு அருமையாக நகரமைப்பு செய்யப்பட்ட நகரம் தஞ்சை என்று சொன்னால்
மிகையாகாது. ராஜராஜனுக்கு பிறகு வந்த ராஜேந்திரன் தலைநகரை கங்கை கொண்ட சோழபுரத்திற்கு
மாற்றியதால் தஞ்சை கொஞ்ச கொஞ்சமாக தன்னுடைய களை இழக்க தொடங்கியது. பின்னர்
மூன்றாம் ராஜராஜனை வீழ்த்தி தஞ்சை நகரை மாறவர்மன் சுந்தர பாண்டியன் என்பான்
எரியிட்டு கொளுதியதால் முற்றிலும் ஒன்றுமே இல்லாத நகரானது. பின்னர் பாண்டிய மன்னன் ஸ்ரீ வல்லபன் காலத்தில் கொஞ்சம் புனரமைக்கபட்டாலும்,பழைய
கலையும், முக்கியத்துவமும் இல்லாமல் சின்ன ஊராகத் தான் இருந்தது. பின்னர் வந்த
நாயக்க மன்னர்களால் தான் தஞ்சை நகரம், ராஜ ராஜ சோழன் காலத்தில் எத்தனை புகழோடு
இருந்ததோ அனைத்தும் மீண்டும் பெற்று மிளிர தொடங்கியது என்று சொன்னால் அது மிகையல்ல.
ராஜராஜ
சோழன் காலத்து தஞ்சை நகரை காட்டும் வரைபடம்
இன்று
நாம் பார்க்கும் தஞ்சையை நிர்மாணித்தது நாயக்க மன்னர்களே ஆவர். இன்று தஞ்சையில்
இருக்கும் அரண்மனை கோட்டை, அகழி முதலிய அனைத்தும் விஜய நகர பேரரசர்கள் காலத்திலே
அமைக்கப்பட்டது. இன்றும் கூட அவர்களால்
அமைக்கபெற்ற ஏரிகள், குளங்கள், அகழிகளையும்,
மழை நீர் மற்றும் கழிவு நீர் வடிகால்களையும் காணலாம். இப்படி பல மன்னர்கள்
காலத்தில் அருமையாக நகரமைப்பு செய்யப்பட்டு அமைக்க பட்ட நமது தஞ்சையின் நீர்
நிலைகளின் வரலாற்றையும் அவற்றின் இன்றைய நிலை பற்றியும் காண்போம் .
சிவகங்கை குளம்
தஞ்சையில்
பெரியகோவிலுக்கு வடக்கே அமைந்துள்ள சிவகங்கை பூங்காவில் அமைந்துள்ள குளம்தான் இந்த
சிவகங்கை குளம்.அப்பர் பெருமான் திருவீழிமிழலைத் திருதாண்டகத்தின்
அஞ்சைக்
களத்துள்ளார் ஐயாற் றுள்ளார்
ஆரூரார்
பேரூரார் அழுந்தூ ருள்ளார்
தஞ்சைத்
தளிக்குளத்தார் தக்க ளூரார்
சாந்தை
அயவந்தி தங்கி னார்தாம்
நஞ்சைத்
தமக்கமுதா வுண்ட நம்பர்
நாகேச்
சரத்துள்ளார் நாரை யூரார்
வெஞ்சொற்
சமண்சிறையி லென்னை மீட்டார்
வீழி
மிழலையே மேவி னாரே …
சிவகங்கை
குளம்
சிவகங்கை
குளம்
இவ்வாறு
பாடுகிறார்.இந்த பாட்டில் கூறப்பட்டு உள்ள அந்த தளிக்குளம் சிவகங்கை குளம் தான்
என்று ஒரு கருத்தும் உள்ளது.ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இதை மறுத்து உள்ளனர்.இது பெரியகோவிலை சேர்ந்த குளம் என்றும்
பெரியகோவில் கட்டப்பட்ட பொழுது அமைக்க பெற்றது என்றும் ஒரு கருத்து உள்ளது.ஆனால் இந்த குளத்தின் வயதை இதுவரை
அறுதியிட்டு கூறமுடியவில்லை.ஆனால் எப்படி பார்த்தாலும் இந்த குளம் 1000
வருடங்களுக்கு மேல் பழமையானது என்பதை ஆணித்தரமாக நம்பலாம்
ராணி
சமுத்திர ஏரி
ராஜராஜ
சோழன் ஆட்சிகாலத்தில் தஞ்சை நகருக்கு
அருகே கடல் இல்லை என்ற காரணத்தால் கடல் போன்று ஒரு மிக பெரிய ஏரி ஒன்றை
அமைத்ததாகவும், அந்த ஏரியில் கடல் அலைபோல் நீர் நிரம்பி வழியும் என்றும்
கூறபடிகிறது. ஆகவே இதற்கு சமுத்திர ஏரி என்று பெயர் வந்தது என்றும் பல செவி வழி செய்திகள் உண்டு.
சமுத்திரம் ஏரி 250 ஏக்கரில் அமைந்துள்ளது. வடவாற்றிலிருந்து பிரியும் பாசன
வாய்க்கால்கள் மற்றும் சாகுபடி வயல்களுக்கு தண்ணீர் கொண்டு சேர்த்த பின்னர்
கடைசியாக சமுத்திரம் ஏரியில் கலக்கிறது. ஒரு காலத்தில் கடும் கோடையானாலும் வற்றாத
ஏரியாக விளங்கிய இந்த ஏரி, சமீப காலமாக கோடையில் வறண்டுபோய் விடுகிறது. சமுத்திரம்
ஏரியால் இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இப்படி
வரலாற்று சிறப்புமிக்க இந்த ஏரியோ இன்று பலரின் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி
அவஸ்தை படுகிறது.அரசு 12 வது ஐந்து ஆண்டு திட்டத்தின் கீழ் இந்த ஏரியை மேம்படுத்தி
நடைபாதை, பூங்கா, படகு சவாரி விட நிதி ஒதுக்கி உள்ளது விரைவில் நல்லது நடக்கும் என
நம்புவோம்.
சமுத்திரம்
ஏரியின் செயற்கைக்கோள் படம்
சமுத்திரம்
போல் பொங்கி வழிந்த சமுத்திர ஏரியின் இன்றைய நிலைமை
சாமந்தான்குளம்
பாண்டிய
மன்னனான முதலாம் மாறவர்மன் ஸ்ரீ வல்லபன் (கி பி 1308-1344) என்ற மன்னனின் சாமந்த
நாயகராக இருந்தவர் நாராயணன் எனும் தொண்டைமானாவார்.இவர் “தஞ்சையில் சமாந்த நாராயணன் சதுர்வேதி மங்களம் எனும் அகரத்தை
தஞ்சாவூர் கூற்றத்துத் தஞ்சாவூரில் ஏற்படுத்தினார்”
என்பதை பெரியக்கோவிலில் உள்ள அதிர்ஷடான கல்வெட்டு தொடக்கத்திலே கூறுகிறது.இது
தற்போதைய தஞ்சையில் உள்ள கொண்டிராஜபாளையமே ஆகும். இதில் உள்ள பெருமாள் கோவிலுக்கு
சாமந்த நாராயண விண்ணகரம் என்றும், அந்த பகுதியில் இருந்த குளத்திற்கு சாமந்த
நாராயணன் குளம் என்றும் பெயர். சாமந்த நாராயணன் குளம் என்ற பெயர் மருவி சாமந்தான்
குளம் ஆயிற்று.
நிலத்தடி
நீரை சேமிக்க வெட்டப்பட்ட இந்த குளத்திற்கு சிவகங்கை பூங்காவில் உள்ள சிவகங்கை
குளத்தில் இருந்து பூமிக்கு அடியில் சுடுமணலால் அமைக்கப்பட்ட குழாய் முலமாக நீர்
வந்து கொண்டு இருந்தது தற்பொழுது அந்த நீர்வழி பாதை ஆக்கிரமிப்புகளால்
அடைக்கப்பட்டு உள்ளது,அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பாதையை சரி செய்ய
வேண்டும். மேலும் 2010 ஆம் ஆண்டு பெரிய கோவில் 1000 ஆண்டு விழாவின் பொழுது இந்த
குளத்தை அழகுபடுத்தும் வேலைகள் தொடங்கி சுற்றுசுவர் எழுப்பியதோடு நின்று விட்டது,
முழு வேலைகளும் நடைபெற்று தண்ணீர் விட மாநகராட்சி நிர்வாகமும்,தமிழக அரசும் ஆவணம்
செய்யவேண்டும்
சாமந்தம்
குளத்தின் இன்றைய செயற்கைக்கோள் படம்
பட்டுப்
போன பாண்டியகாலத்து சாமந்தம் குளம்
Pic Courtesy :Mohamed Javeed
சிறிய
கோட்டை அகழி
தஞ்சை
சிறியக் கோட்டை 1560 ஆம் ஆண்டு எடுக்கபெற்றதாகும். இந்த சிறியக் கோட்டை
என்பது தற்போதைய பெரியகோவில் மற்றும் சிவகங்கை பூங்கா பகுதியை உள்ளடக்கியதே ஆகும்.
செவப்ப நாயக்கர் தஞ்சையில் செய்த பணிகள் இன்றும் அவர் பெயர் சொல்லி
நிற்கின்றன.அவற்றுள் முக்கியமானது தஞ்சை சேப்பனவாரி, செவப்பன் ஏரி என்ற பெயர்
மருவி சேப்பனவாரி ஆகியது. இது தஞ்சை பெரிய கோவிலுக்கு மேற்காக மழை நீர் வரும் வாரிகளோடு
மிகப் பெரிதாய் செவப்பன் நாயக்கர் ஆட்சியில் உருவாக்க பெற்றது.
சேப்பனவாரியின்
தற்போதைய செயற்கைக்கோள் படம்
ராசராசன்
காலத்துத் தஞ்சை உள்ளாலையின் தற்போதைய மேலவெளி கிராமத்தில் உள்ள ரங்கா
உடையான் ஏரியே நீர்தேக்கமாக திகழ்ந்திருகின்றது. பின்னாளில் அந்த ஏரி சார்ந்த
பகுதிகள் அழிவுற்றதால் நாயக்கர் காலத்தில் புதிய நகர அமைப்பிற்கு ஏற்ப அமைகபெற்றதே
இந்த ஏரி.
சிறியகோட்டை,பெரியகோட்டையை
காட்டும் நாயக்கர் காலத்து தஞ்சை மேப்
தஞ்சையின்
தென்மேற்கு பகுதியில் பெய்யும் மழை நீர் செவப்பன் ஏரிக்கு வாரிகள் மூலம் கொண்டு
வந்து, நீரை சேமித்து வைத்து சேற்றை அடியில் தங்கவிட்டு தெளிந்த நீரை மட்டும்
குழாய்களின் வழியே சிவகங்கை குளத்திற்கு அனுப்பி அங்குள்ள கிணறுகளில் மேலும்
வண்டலை படியவிட்டு தெளிந்த நீரை சுடு மண் குழாய் வழியே ஐயன் குளம்,
அரிபண்டிதர் குளம், சாமந்தன் குளம் மேலும் அரண்மனை கிருஷ்ண விளாச குளத்திற்கும்,
மக்களின் குடிநீர் மற்றும் மற்ற தேவைகளுக்கும் உபயோகித்தனர்.
இது
இன்றைய மழை நீர், நீர் சுத்திகரிப்பு, நிலத்தடி நீர் பகிர்மான திட்டத்திற்கு
எல்லாம் முன்னோடி, 1993 ஆம் ஆண்டு அரண்மனையில் உள்ள குளம் கண்டுபிடிக்க பட்ட
பொழுது அந்த குளத்திற்கு இந்த நிலத்தடி நீர் வழி பாதையில் நீர் வந்தது பலரையும்
ஆச்சர்ய படுத்தியது,சுமார் 460 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த அமைப்பு
இன்றும் நல்ல முறையில் உள்ளது. ஆனால் இந்த நீர்வழி பாதையில் பல இடங்கள்
ஆக்கிரமிக்க பட்டு தஞ்சையின் இது போன்ற நீர் வழிகளும், நீர்நிலைகளும் அழிவை நோக்கி
சென்று கொண்டு இருகின்றது.
சிறியக்
கோட்டை செயற்கைக்கோள் படம்
சிறியக்
கோட்டையின் தற்போதைய மேப்
பெரியகோட்டை
அகழி
சிறியக்
கோட்டை கட்டுமானத்தோடு மலர்ந்த தஞ்சை நாயக்கர் ஆட்சியின் மகத்தான சாதனை தஞ்சை
பெரியக் கோட்டையும்,அதனை சூழ்ந்து பாதுகாப்பு அரணாக திகழ்ந்த அகழியுமே
ஆகும்.பெரியக்கோவில் மற்றும் பூங்காவை உள்ளடக்கிய சிறியக் கோட்டைக்கு வடகிழக்கு
பகுதியில் அமைக்கபெற்றதே இந்த பெரியக் கோட்டையும் அகழியும்.நான்கு வீதிகளையும்
மையமாக கொண்டு அவற்றின் நடுவே அரண்மனை அமைத்து வட்டவடிவில் அரணாக நின்றது
கோட்டையும் அகழியும்.பெரிய கோட்டையின் மதிலும் அகழியும்,சிறியக் கோட்டையின் மதில்
அகழியோடு இணைந்து ஒரே கோட்டையாக காட்சி அளித்தது.
பெரியகோட்டை
பகுதியின் தற்போதைய செயற்கைக்கோள் படம்
பெரியகோட்டை
பகுதியின் தற்போதைய மேப்
கோட்டைக்குள்
குடிநீர் குழாய்கள்
தஞ்சை
மக்களுக்கு குடிநீர் வழங்க அமைக்க பட்ட ஏரிகள் குளங்களில் இருந்து சுமார் ஒரு
முழம் நீளமுள்ள சுடு மண் குழாய்கள் முலமே குடிநீர் விநியோகிக்க பட்டது. இந்த
குழாயின் ஒரு புறவாயிலின் விளிம்பு விரிவு பெற்றுத் திகழ்ந்தாள் மற்றொரு
குழாயை இதனுள் இறுக்கமாக இணைக்க முடியும். தேவைப்படும் ஆழத்தில் இரண்டு கற்கள்
அமைத்து, அதன் மீது சுண்ணாம்புக் காரை கொண்டு தளம் அமைத்து, அதன் மேல்
நன்கு பதபடுதப்பட்ட சுண்ணாம்பு கலவையோடு குடிநீர் குழாய்களை தொடர்ச்சியாக அமைத்து
உள்ளனர். இவற்றின் மேல் முன்று அங்குல சுண்ணாம்பு காரையை கவசமிட்டு உள்ளனர்.
இதனால் எத்தனை கனமான வாகனம் சென்றாலும் உடையாவண்ணம் பாதுகாக்கவே இந்த
ஏற்பாடு.
தஞ்சையில்
கண்டெடுக்கப்பட்ட சுடுமண் குழாய்கள்
இவ்வாறு
பதிக்கபெற்ற குழாய்கள் பல நூற்றாண்டுகள் கெடாமலிருக்கும்,மேலும் குழாய்க்குள்
செல்லும் தூய நீரோடு வெளியிலிருந்து எந்த கசிவும் கலக்கமுடியாவண்ணம் சுண்ணாம்பு
காரை தடுத்துவிடுகிறது.
அகழி
குத்தகை
1807
ஆம் ஆண்டு மராட்டியர் ஆட்சிகாலத்தில் அகழியில் பரங்கி பயிடபெற்று ஐந்தில் ஒரு
பங்கை அரண்மனைக்கு தர உத்தரவிட்ட மோடி ஆவணம் உள்ளது.இது போன்று 1846இல் அகழியில்
பயிர் செய்ய ஆண்டொன்றுக்கு ரூ 192 விதம் கொடுப்பதாக 3 ஆண்டுகளுக்கு ஒருவர் குத்தகை
எழுதிக் கொடுத்ததைப் பிறிதோர் ஆவணம் கூறுகிறது
புதர்
மண்டி இருக்கும் பெரியக்கோட்டை அகழியின் ஒரு பகுதி
Pic courtesy : Baskaran Sellapan
கோட்டை
அகழியின் அழிவு
பெரியகோட்டை,சின்னக்கோட்டையின்
தற்போதைய வரைபடம்
பெரியகோட்டை,சின்னக்கோட்டையின்
தற்போதைய செயற்கைக்கோள் படம்
18
ஆம் நுற்றாண்டில் தஞ்சை கோட்டையும் ,அகழியும் பலமுறை பல படை எடுப்புக்களால்
அழிவுக்கு உள்ளாயின.சரபோஜி ஆட்சிக்கு வந்த பொழுது தஞ்சை முழுக்க முழுக்க
ஆங்கிலேயரின் ஆளுகைக்கு கீழ் இருந்தது. ஆங்கிலேயர்கள் தஞ்சை நகரம்
கோட்டை, அகழி என்று பாதுகாப்பாக இருப்பதை விரும்பவில்லை. ஆதலால்
அகழி பராமரிப்பை கைவிட்டனர். பிறகு இந்த அகழியின் ஒரு பகுதியை அழித்து
அமைக்கப்பட்டது தான் யூனியன் கிளப், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்தும் .
குப்பைமேடாகி
போன பெரியக்கோட்டை அகழி
Pic Courtesy : Baskaran Sellapan
குப்பைமேடாகி
போன பெரியக்கோட்டை அகழி
Pic Courtesy : Baskaran Sellapan
டபீர்
குளம்
தஞ்சாவூர்
நகரத்தின் கீழ்க்கோடியில், வடவாற்றின் தென் கரையிலிருந்து பெரிய சாலைத்தெரு அல்லது
ராமேச்வரம் சாலை வழியே அரிசிக்காரத்தெருவிற்குப் போகும் வழியில் உள்ளது
டபீர் குளம். அரண்மனையோடு தொடர்புடைய டபீர் பண்டிதரின் பெயரைக் கொண்டதாக டபீர்
குளம் இருந்திருக்கலாம் என்று கூறபடுகிறது.நீர் நிரம்பி வழியும் இந்த குளமும்
தற்பொழுது ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி வரண்டுபோய் உள்ளது
டபீர்குளம்
செயற்கைக்கோள் படம்
ஐயன்
குளம்
தஞ்சையில்
நாயக்க மன்னர்களின் ஆட்சி நடந்த பொழுது, செவப்ப நாயக்கன், அச்சுதப்ப நாயக்கன்
மற்றும் விஜய் ரெகுநாத நாயக்க மன்னர்களுக்கு அமைச்சராய் இருந்து
அரும்பணியாற்றியவர் கோவிந்த தீட்சிதர். இவரை யாவரும் கோவிந்தய்யா என்று
அழைப்பார்களாம். விஜய ரெகுநாத மன்னருக்கு அமைச்சராகவும், அரச குருவாகவும், நல்ல
ஆலோசகராகவும் பணியாற்றிய கோவிந்தய்யாவின் பணிகளை பாராட்டி அம்மன்னன் அவர் பெயரில்
கோவிந்தகுடி, கோவிந்த புத்தூர், ஐயன் பேட்டை, ஐயன் கடைவீதி, ஐயன் குளம், ஐயன்
வாய்க்கால் என பலவற்றையும் ஏற்படுத்தினாராம். அதில் ஒன்றுதான் இந்த ஐயன்
குளம்.இந்த குளத்திற்கு சிவகங்கை குளத்தில் இருந்து நீர்வரும். ஆழமான குளம், இங்கே
பல முறை பலர் முழ்கி இறந்து உள்ளனர். இது தஞ்சையின் சூசைட் பாயிண்ட் என்று கூட
ஒருகாலத்தில் பெயர் இருந்தது. அத்தனை ஆழமான குளம் இன்றோ களையிழந்து வரண்டுபோய்
உள்ளது.
ஐயன்
குளம்
அழகி
குளம்
தஞ்சை
நகரில் அழகிய குளம் என்ற பெயரில் ஒரு குளம் உள்ளது.இதன் பெயர் அழகிய குளத்து வாரி
என்பதை தஞ்சை ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு மசூதியில் உள்ள செவ்வப்ப நாயக்கரின்
தூண் ஒன்றில் உள்ள கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.அழகிய குளம் என்படி பின்னாளில்
அழகி குளம் என மருவி அழகி என்ற கிழவி இக்குளத்தை வெட்டினால் என்பது வெறும்
கட்டுக்கதை.
இந்த
அழகி குளத்திற்கு ராணி வாரியின் மூலமாக மழை நீர் வரும்.ராணி வாய்க்கால் தொடர்ந்து
ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. தற்போது ராணி வாய்க்கால் தலைப்பு வர்த்தக
நிறுவனங்களின் நலன்களுக்காக சிறிதுசிறிதாக முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.
இதை தடுக்க சிலர் போராட்டம் நடத்தியதால் தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள ராணி
வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பு
காலி செய்யப்பட்ட பகுதியிலிருந்து வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை நீர் செல்வதற்கு
ஏதுவாக நகரமைப்பு அலுவலர் இடத்தை ஆய்வு செய்து ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை
எடுப்பது என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
அழகி
குளத்தின் செயற்கை கோல் படம்
இது
போன்று எண்ணிலடங்கா ஏரிகள்,குளங்கள்,அகழிகள் என மிகவும் சீரும் சிறப்புமாக
திகழ்ந்த ஊர் நமது ஊர். ஆனால் இன்று தஞ்சையின் நீர்நிலைகளின் நிலையோ மிகவும்
வேதனைக்குரிய விடயமாக உள்ளது. நாம் மீட்டுக்க வேண்டியது குளம், ஏரியை மட்டும் அல்ல
அதற்கு ,மழை நீரையும் ஆற்றுநிரையும் கொண்டு சென்ற வாரிகளையும்,வாய்க்கால்களையும்
தான் .முக்கிய சாலைகளில் உள்ள வாரிகளும் வாய்க்காலும் வணிக நிறுவனங்களின்
ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளதால், அகழி,ஏரி,குளம் ஆகியற்றிற்கு சென்று
கொண்டு இருந்த நீர் வழிப்பாதை தடைபட்டு உள்ளது . காவேரி நீர் பொய்த்து உள்ள
நிலையில் நமது நிலத்தடி நீரை பெருக்கவும், மழை நீரை சேமிக்கவும், வீணாய் கடலில்
கலக்கும் நீரின் ஒரு பகுதியை நமது பிற்கால தேவைக்கு தேக்கி வைக்கவும் இந்த
நீர்நிலைகளை மீட்டெடுத்து,புனரமைத்து பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை,அரசை
இதை செய்யசொல்லி வலியுறுத்துவது ஒரு ஒரு தஞ்சை வாசியின் உரிமை. நமது நீர்நிலைகளை
பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவோம், ராஜராஜசோழன் ஆண்ட பொழுது இருந்த தஞ்சை நகரின்
அழகையும் பெருமையையும் மீட்டெடுப்போம்!!!!
குறிப்புக்கள்
குடவாயில்
பாலசுப்ரமணியம் எழுதிய தஞ்சாவூர்
கோவிந்தராஜன் எழுதிய தஞ்சை நகர மேம்பாடு திட்டம்
இ.ராசு எழுதிய நெஞ்சை அல்லும் தஞ்சை
தினத்தந்தி,தினகரன்,தி ஹிந்து,தினமலர்
நன்றி
கணேஷ்
அன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக