இம்மாதம் 28ம் தேதி, தி.மு.க.,வுக்கு எழுச்சி நாளாக இருக்க வேண்டும்; அந்த அளவுக்கு மதுரையில் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் கூட்டத்துக்கு, தமிழகம் முழுவதிலும் இருந்து ஆட்களை திரட்ட வேண்டும்' என, கட்சி நிர்வாகிகளுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி உத்தரவிட்டிருப்பதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.ஜெயலலிதா மீதான, பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கின் முடிவை அறிவதில், மற்றவர்களை விட கூடுதல் ஆர்வத்தில் தி.மு.க.,வினர் உள்ளனர்.இருந்தாலும், கடந்த நான்கு ஆண்டுகள், தமிழகத்தில் நடந்த அ.தி.மு.க., ஆட்சியின் அவலங்களையெல்லாம் திரட்டி வைத்திருக்கும் தி.மு.க., அதை வைத்து, தமிழகம் முழுவதும் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறது. இதன் துவக்கமாக, வரும் 23ம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில், பிரம்மாண்ட கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
கூட்டத்தில், கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுவார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்துக்கு பல்லாயிரக்கணக்கில், தமிழகம் முழுவதிலும் இருந்து ஆட்களை திரட்டி வர வேண்டும் எனவும் தி.மு.க., தலைவர் கருணாநிதி உத்தரவிட்டு இருக்கிறார்.
அதே நாளில், திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதில் கலந்து கொண்டு, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி உரையாற்றுகிறார்.
அந்த நிகழ்ச்சி, அந்தப் பகுதியில் உள்ள பல்வேறு முத்தரையர் அமைப்புகளைக் கொண்டு நடத்தப்பட்டாலும், மத்திய மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் முத்தரையர்களின் ஓட்டுகளை தி.மு.க., பக்கம் திருப்ப வேண்டும் என்பதுதான், இதன் பிரதான நோக்கம்.இந்த இரண்டு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, பல்வேறு பொதுக்கூட்டங்கள், ஜாதிய ரீதியிலான நிகழ்ச்சிகள் நடத்தவதில், தி.மு.க., கவனம் செலுத்தும் என, கூறப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -
News source : http://www.dinamalar.com/news_detail.asp?id=1244062&Print=1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக