எங்கே தோற்றோம், எப்படி தோற்றோம்..? முத்தரையர் சாம்ராஜ்யம் வீழ்ந்த கதை
_____ _____ _______ _______ ______
நேற்றைய (15.9.2016)மாநாட்டில் பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றும் போது தொடக்கத்தில் விஜயாலய சோழனை பற்றியும் திருப்புறம்பியம் போரைப் பற்றியும் வீரம் சொறிந்த வரலாற்றை கூறினார்.
மாநாடு முடிந்து திரும்பி வரும்போது அதை அசைப்போட்ட படியே வந்தேன். திருப்புறம்பியம் எனது ஊர் கும்பகோணத்துக்கு மிக அருகில் உள்ள ஊர். அங்கே நடந்தது எவ்வளவு பெரிய வரலாற்று நிகழ்வு. இது சரித்திரத்தில் அபூர்வமாக நடக்க கூடிய நிகழ்வு. காரணம் இதை நிகழ்த்தியது தொண்ணுறு வயதை கடந்த கிழவன் #விஜயாலயன். தமிழக வரலாற்றில் சோழ தேசத்தில் நடந்த இரண்டு போர்கள் முக்கியமானது. ஒன்று இப்பொழுது கோவில்வெண்ணி என்று அழைக்கப்படும் ஊரில் நடந்த வெண்ணிபரந்தலை போர். அடுத்து திருப்புறம்பிய போர். அதுவும் சோழர்களின் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த போர், திருப்புறம்பயம் போர். இந்த போரே பிற்கால சோழ சாம்ராஜ்யத்திற்கு வித்திட்டது . திருப்புறம்பியம் என்பது கும்பகோணத்துக்கு அருகிலுள்ளதோர் ஊர். அங்கு நடைபெற்ற போரே திருப்புறம்பியப் போர்.
இந்த ஊர் ஒரு வரலாற்றுச்சிறப்புமிக்க ஊர். தமிழகத்தின் வரலாற்றையே மாற்றிவிட்ட போர் தான் இங்கு நடைபெற்றது. மூன்று பேரரசுகளின் விதி, அந்தப் போரில் நிர்ணயிக்கப்பட்டு சோழப்பேரரசுக்கும் விதை வித்திடப்பட்டது. திருப்புறம்பயம் போர் பல்லவ மன்னன் அபராஜிதவர்மருக்கும், பாண்டிய மன்னன் வரகுண வர்மனுக்கும் இடையில் நடைபெற்றது.
இப்போரில் பல்லவர்களுக்கு ஆதரவாக சோழர்களும், பாண்டியர்களுக்கு ஆதரவாக முத்தரையர்களும் போரிட்டனர். அபராஜிதவர்மனுக்குத் துணையாக கங்க நாட்டு மன்னன் பிரிதிவீபதி வந்திருந்தான்.
இப்போரில் விஜயாலயச் சோழனின் மகன் முதலாம் ஆதித்தன் சோழப்படையின் மாதண்ட நாயக்கராக (தளபதி) போரிட்டான். அந்த நேரத்தில் தொண்ணுற்றாறு விழுப்புண்களை தன் மேனியெங்கும் பெற்றிருந்த விஜயாலயச் சோழன் இரு கால்களும் நடக்க முடியாத நிலையில் தன் மகனின் வீரத்தை போர்க்களத்தில் காண பல்லக்கில் சென்றிருந்தார்.
அப்பொழுது அங்கே போரில் பல்லவ-சோழப் படைகள் கிட்டத்தட்ட தோல்வியடைந்து பாண்டியர்களிடம் சரணடையும் முடிவுக்கு வந்ததை அறிந்து கோபமடைந்த மாபெரும் வீரர் விஜயாலயர் (அப்போது அவருக்குவயது கிட்டத்தட்ட 90) இரு வீரர்களின் தோளில் ஏறிக் கொண்டு போருடைப் பூண்டு வாளினை சுற்றிக் கொண்டு களமிறங்கினார். ஒரு கிழவன் தள்ளாத வயதில் வாள் வீசும் வேகம் கண்ட சோழப்படை மீண்டும் வீறாப்புடன் போராடி எதிரிகளை துவம்சம் செய்து வெற்றிபெற்றது. கங்க மன்னன் பிரதிவீபதி அன்றைய போரில் வீர சொர்க்கம் எய்தினான். இப்போரின் மூலம் சோழர்கள் முத்தரையர்களை ஒழித்து தஞ்சையை தன் தலைமையின் கீழ் கொண்டு வந்தனர்.
வரலாறு காணாத போர் ஒன்று நடந்து முடிகிறது. இந்தப் போரில் இரண்டரை நாழிகை நேரத்தில்(ஒரு மணி நேரம்) கிட்டத்தட்ட ஒரு லட்சம் வீரர்கள் கொல்லப்பட்டதாக சொல்கிறார்கள். ஊரே ரத்தகாடாகி போகிறது. எண்ணற்ற உடல்கள் மலைபோல குவிந்து கிடந்தன. அபரிதமான வெற்றி பல்லவர்க்காயினும் அதன் பலன் அதிகமாக சோழர்களையே அடைந்தது. உலகமே வியக்கும் ஒரு சோழ பரம்பரையின் தொடக்கம் அங்குதான் இருக்கிறது என்பதை கண்டிப்பாக ஆதித்தனோ விஜயாலயனோ உணர்ந்திருக்க மாட்டார்கள்.
போர் நடைபெற்ற பகுதியை "உதிரம் வடிந்த தோப்பு" என்பதை இன்று குதிரைத் தோப்பாக மறுவி அழைக்கிறார்கள்.
திரு. கல்கி அவர்கள், பொன்னியின் செல்வனில் இச்சம்பவத்தினை மிக அழகாக சொல்லியிருப்பார்.
தம் அதிகாரத்திற்கு உட்பட்ட சோழ மன்னனை திருப்புறம்பயம் போரில் இறக்கியது, "எவ்வளவு பெரிய தவறு என்று பல்லவ மன்னன் அப்பொழுது சிறிதும் சிந்திக்கவில்லை. இப்போரில் பல்லவர்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் வலிமை மிக வெகுவாக குறைந்தது. விஜயாலயனும், போரின் இவ்வெற்றியே இந்திய வரலாற்றில் காணப்படும் ஒரு பேரரசை நிறுவுவதற்கான மிகச்சிறப்பான தொடக்கம் என கனவு கூடக் காணவில்லை. இப்போருக்கு பின் பல்லவ மன்னனை ஆதித்த சோழன் போரில் வென்று சோழ அரசை தனியரசாக நிறுவினான். தொடர்ந்து 400 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற பிற்காலச் சோழர்களின் பொற்கால ஆட்சியைத் தொடக்கி வைத்தவர் விசயலாய சோழரே ஆவார். அரசியல் எந்த நேரத்தில் எப்படி வேண்டுமானாலும் மாறும் என்பதற்கு இந்த வரலாற்று நிகழ்வே உதாரணமாகும். இங்கு வெல்பவர் தோற்கலாம் தோற்பவர் வெல்லலாம் முடிவு காலத்தின் கையில்.
இன்றும் நாம் திருப்புறம்பியம் சென்றால் கங்கமன்னனின் பிரிதிவிபதியின் பள்ளிப்படை கோவிலை காணலாம்
போர் நடந்த இடம் இப்பொழுது பரந்து விரிந்து தோப்புகளும் வயல்களுமாக காட்சியளிக்கிறது. தமிழக வரலாற்றினை மாற்றி எழுதிய போர் நடந்ததற்கு ஒரே சாட்சியாக உள்ள இந்த பள்ளிப்படை கோவில் அய்யனார் கோவிலாக மாறி சிதிலமடைந்து இருக்கிறது. இதுவும் கொஞ்சம் காலத்திற்கு பிறகு இருக்காது.
தமிழனின் வரலாறு அழிந்து கொண்டிருக்கிறது.
Source : Saravanan Gunasekaran
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக