ஏர்வாடியில் தர்காவில் 841-வது வருட உரூஸ்
கீழக்கரை, செப் 9:
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அமைந்துள்ள அல்-குத்புல் அக்தாப் சுல்த்தான் ஸைய்யிது இப்ராஹிம் ‘ஹீது வலியுல்லாஹ்(ரலி) அவர்களின் 841-வது வருட உரூஸ் என்ற சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே அமைந்துள்ள முஸ்லிம்களின் புண்ணிய தலமான ஏர்வாடி தர்ஹாவில் நேற்று அதிகாலையில் சந்தனக்கூடு திருவிழா நடந்தது. விழாவையொட்டி முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கொண்டு வந்த தண்ணீரால் தர்ஹா முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. சந்தனக்கூட்டின் அடித்தளத்தை ஆசாரி சமூகத்தினர் செய்து கொடுத்தனர். அடிக்கூடு, நடுக்கூடு, மேல்கூடு ஆகியவற்றை யாதவர்களும் ஆதிதிராவிடர்களும் அலங்கரித்தனர்.
சலவைத் தொழிலாளர்கள் கொண்டு வந்த துணிகளில் ஆதிதிராவிடர்கள் வழங்கிய நேர்ச்சை எண்ணையை ஊற்றி தீப்பந்தம் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு தயார் செய்யப்பட்ட சந்தனக்கூடு ஏர்வாடி நல்ல இப்றாகிம் மகாலில் இருந்து தாரை தப்பட்டைகள் முழங்க வாணவேடிக்கையுடன் 12 குதிரைகள் , ஒரு யானைமுன் செல்ல ஊர்வலமாக சந்தனக்கூடு மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து தர்ஹாவை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து வெள்ளிப்பேழையில் வைத்து எடுத்து வரப்பட்ட புனிதசந்தனம் பாதூநாயகத்தின் அடக்க ஸ்தலத்தில் பூசப்பட்டது. மத நல்லிணகத்துக்கு எடுத்துக்காட்டான இவ்விழாவில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு பிரார்த்தித்தனர்.
விழா ஏற்பாடுகளை தர்ஹா ஹக்தார் நிர்வாக சபைத் தலைவர் அம்ஜத் ஹூஸைன் லெவ்வை, செயலாளர் செய்யது ஃபாரூக் ஆலிம் அரூஸி, உப தலைவர் செய்யது சிராஜூதீன் லெவ்வை, மூத்த நிர்வாக சபை உறுப்பினர் துல் கருணை பாட்சா லெவ்வை மற்றும் உறுப்பினர்கள் செய்தனர். விழாவையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவில் அரசு சார்பில் குடிநீர், சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்டவைகள் சிறப்பாக செய்து கொடுத்த தமிழக அரசுக்கும் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இந்தவிழாவில் அனைத்து சமுதாய பக்தர்கள், பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டு கொடியேற்றத்தின் போது சிறப்பு கோசங்களை எழுப்பி பிரார்த்தனை செய்தனர். இந்த சந்தனக்கூடு திருவிழாவை தொடர்ந்து 14 ந்தேதி கொடி இறக்கம் நிகழ்ச்சி மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெறும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
News Source : http://makkalkural.net/news/blog/2015/09/09/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-841-%E0%AE%B5/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக