உங்கள் தொகுதி உங்கள் பிரதிநிதி: காரைக்குடி
சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது காரைக்குடி சட்டமன்ற தொகுதி. தொகுதி மறு சீரமைப்பின்போது திருவாடனை சட்டமன்ற தொகுதியிலிருந்த தேவகோட்டை, காரைக்குடியுடன் இணைக்கப்பட்டது.
இத்தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 952 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 8 ஆயிரத்து 212 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 730 பேரும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 15 பேர் இருந்தபோதும், அவர்களில் 10 பேருக்கு வாக்குரிமை உள்ளது.
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை அதிமுக ஆதிக்கம் உள்ள தொகுதியாக உள்ளது. இத்தொகுதியில் நான்கு முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக இரண்டுமுறையும், காங்கிரஸ் இரண்டு முறையும், பாரதிய ஜனதா ஒருமுறையும் இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக அதிமுகவைச்சேர்ந்த சோழன் சித.பழனிச்சாமி இருக்கிறார்.
காரைக்குடி தொகுதியின் சிறப்பு அம்சங்கள்
பாரம்பரியம் மிக்க செட்டிநாடு அரண்மனை காரைக்குடியில் இருக்கிறது. இதுமட்டுமின்றி அழகப்பா பல்கலைக் கழகத்தில், ஆரம்ப கல்வி முதல் உயர்மட்ட கல்வி வரை ஒரே கல்வி வளாகத்தில் அமைந்திருப்பது மற்றும் மத்திய மின் வேதியியல் ஆய்வு கூடம், கண்ணதாசன் மணிமண்டபம், கம்பன் மணிமண்டபம் போன்றவை காரைக்குடி தொகுதியின் சிறப்பு அம்சங்களாக இருக்கின்றன. காரைக்குடியை தமிழக அரசு காரைக்குடி செட்டிநாடு பாரம்பரிய நகரமாக அறிவித்துள்ளது.
இத்தொகுதியின் சமூக கட்டமைப்பை பொறுத்தவரை, தேவர், முத்தரையர், வல்லம்பர், செட்டியார் மற்றும் இஸ்லாமியர், சீர் மரபினர் வசித்துவருகிறார்கள்.
காரைக்குடியில் முக்கிய தொழிலாக கைத்தறி ஆடை தயாரித்தல் இருக்கிறது. ஆத்தங்குடி பூ கல் என்றழைக்கப்படும் டைல்ஸ் தயாரிப்பு காரைக்குடியின் தனிப்பட்ட அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும் புவிசார் குறியீடு பெற்ற செட்டிநாடு கூடை தயாரித்தலும், தனியார் வங்கிகளும், நிதிநிறுவனங்களும் இங்கு அதிக அளவில் இருக்கின்றன.
புதுவயல், பெரியக்கோட்டை, ஜெயங்கொண்டான், அரியக்குடி போன்ற பல கிராமங்களில்; செட்டுநீர் பாசனம், கிணற்று பாசனம், மோட்டார் பம்ப் செட் போன்றவை மூலம் சுமார் 70 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. செட்டிநாடு வகை உணவுகள் வெகு பிரசித்தம் என்பதால், இந்த வகை உணவு தயாரிப்பும், ஏற்றுமதியும் நடைபெறுகிறது.
காரைக்குடி தொகுதி எம்எல்ஏ
காரைக்குடி சட்டமன்றத்தொகுதி உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த சோழன் பழனிச்சாமி இருக்கிறார். காரைக்குடி அருகே உள்ள சோழ காடு என்ற கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு 48 வயதாகிறது. பிஏ படித்துள்ள எம்எல்ஏ சோழன் பழனிச்சாமி, விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களைசெய்து வருகிறார்.
அதிமுகவில் சாக்கோட்டை ஒன்றியச்செயலாளர், சிவகங்கை மாவட்ட செயலாளர், மாநில விவசாய அணி அமைப்பாளர், 5 மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் போன்ற பதவிகளை இவர் வகித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்த சோழன் பழனிச்சாமி, காரைக்குடி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
News source : http://www.puthiyathalaimurai.tv/karaikudi-constituency-236309.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக